CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஆசாப்பின் ஆறு குணங்கள்

ஆசாப்பின் ஆறு குணங்கள்

வேதாகமத்திலுள்ள 66 புத்தகங்களில் அதிகமாய் விரும்பி வாசிக்கப்படுவது சங்கீத புத்தகமாகும். இந்த சங்கீதங்களில் 150 அதிகாரங்ககள் உண்டு. இவை 5 பிரிவுகளால் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 01. சங்கீதம் 1 முதல் 41 வரை 02.சங்கீதம் 42 முதல் 72 வரை 03. சங்கீதம் 73 முதல் 89 வரை 04. சங்கீதம் 90 முதல் 106 வரை 05. சங்கீதம் 107 முதல் 150 வரை சங்கீதக்காரனாகிய தாவீது 73 சங்கீதங்களையும் ஆசாப் 12 சங்கீதங்களையும், கேராகின் புத்திரா் 12 சங்கீதங்களையும், சலொமோன் 2 சங்கீதங்களையும், மேசே 1 சங்கீதத்தையும், ஏத்தான் 1 சங்கீதத்தையும், பெயா் தெரியாதவா்கள் 49 சங்கீதங்களையும் எழுதியுள்ளார்கள். புதிய ஏற்பாட்டிலே 283 பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் 116, சங்கீதங்களில் உள்ளவைகளாகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சங்கீதங்களை அதிகமாக நேசித்தார்.

12 சங்கீதங்களை எழுதிய ஆசாப்பைக் குறித்து இப்பகுதியில் தியானிக்கலாம். ஆசாப் ஒரு தீா்க்கதரிசி மற்றும் ஒரு பாடகர். கைத்தாளம் கொட்ட நியமிக்கப்பட்டவர். கர்த்தரை ஆராதிப்பதற்காக பிரித்தெடுக்கப்பட்ட கூட்டத்தில் முதலாவது தெரிந்தெடுக்கப்பட்டவர். ஆசாப்பும் அவருடைய கூட்டத்தாரும் மெல்லிய புடவைகளைத் தரித்தவர்களாய் பூரிகைகளை ஊதி ஏக சத்தமாய் கீதவாத்தியங்கள் தொனிக்க கர்த்தரைத் துதித்து, கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது என்று ஸ்தோத்தரித்த போது கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று. (1நாளா 25.9, 2நாளா 5.12-14) தாவீதும் ஆசாப்பும் இருந்த பூா்வ நாட்களில் பாடகரின் தலைவரும் நியமிக்கப்பட்டு, தேவனுக்கு துதியும், ஸ்தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம் பண்ணப்பட்டிருந்தன. (நெகேமியா12.46) ஸ்தோத்திரப்பாட்டைப் பாடி கர்த்தரை ஆராதிக்க ஆசாப்பின் சந்ததி நிமிர்ந்து நிற்பதை வேதத்தில் காணலாம். (நெகேமியா 11.17) ஆசாப்பின் சங்கீதங்களான சங்கீதம் 73 முதல் 83 உள்ள அதிகாரங்களை 3 முறை நான் வாசித்தேன். அதிலிருந்து நான் அறிந்து கொண்ட ஆசாப்பின் ஆறு நற்குணங்களை கீழே கொடுத்துள்ளேன்.

ஆசாப் ஆராதித்தவா்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள். ஆசாப் எவ்வளவாக தேவனை ருசித்தவராய் ஆராதிப்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம். நாம் தேவனை ஆராதிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? அப்படியானால் தேவனை நாம் எப்படி ஆராதிக்கிறோம். ஆசாப்பைப்போல உண்மையான ஆராதனை நம்மிடம் உண்டோ என்பதை சிந்தித்துப்பார்ப்போம். சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார். (சங்கீதம் 73.1) தேவன் என்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். (சங்கீதம் 73.26) தேவன் பூா்வ கால முதல் என்னுடைய ராஜா (சங்கீதம் 74.12) தேவரீா் ஒளியையும் சூரியனையும் படைத்தீர் (சங்கீதம் 74.16) தேவனே நியாயாதிபதி, ஒருவனைத்தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். (சங்கீதம் 75.7) இஸ்ரவேலின் அவருடைய நாமம் பெரியது (சங்கீதம் 76.1) மகத்துவமுள்ளவரே… நீா் பிரகாசமுள்ளவா் (சங்கீதம் 76.4) அவா் எனக்குச் செவி கொடுத்தார். (சங்கீதம் 77.1)

ஆசாப் ஆராய்ந்து பார்த்தவர்
பூா்வ நாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன். (சங்கீதம் 77.5) என் ஆவி ஆராய்ச்சி செய்தது. (சங்கீதம் 77.6) உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன். (சங்கீதம் 77.12) அநேகருக்கு தாங்கள் எந்த நிலையிலிருந்து இந்த நிலைக்கு வந்தோம் என்ற எண்ணம் வருவதில்லை. தங்கள் முந்தைய நிலைகளை எண்ணி பார்க்க மறந்து விடுகின்றனர். தேவன் தங்கள் வாழ்க்கையில் செய்த செயல்களை, கிரியைகளை யோசிப்பதற்குக் கூட நேரம் இல்லை. ஆனால் ஆசாப்போ நான் பூா்வகாலத்து வருஷங்களை சிந்திக்கிறேன். என் ஆவி ஆராய்ச்சி செய்தது. நான் அவர் கிரியைகளையெல்லாம் தியானிப்பேன் என்றெல்லாம் மேற்கண்ட வசனங்களில் தெரிவிப்பதைப் பார்க்கலாம். நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய குடும்பத்தில் , நம்முடைய ஊழியத்தில், நம்முடைய தொழிலில் தேவன் செய்ததை நாம் யோசித்துப்பார்ப்போம். கா்த்தருக்கு நன்றி செலுத்துவோம்.

ஆசாப் ஆழ்ந்து சிந்தித்தவா் (சங்கீதம் 73.3-24) ஆசாப் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தவா் தேவனையும், அவருடைய வார்த்தைகளையும் குறித்து அதிகமாய் சிந்திக்கக்கூடியவா். பல வெளிப்பாடுகளை அவர் பெற்றிருந்தார். சங்கீதம் 73ம் அதிகாரத்திலிருந்து சில வார்த்தைகளை கீழே கொடுத்துள்ளோம். அவைகளை வாசிக்கும் போது துன்மார்க்கனைக்குறித்து தேவன் அவருக்குக் கொடுத்த வெளிப்பாட்டை எழுதுகிறார். துன்மார்க்கனுடைய வாழ்க்கையைப்பார்த்து அவர் பொறாமை கொண்டவராய் இந்த சங்கீதத்தை எழுதுகிறார். இடுக்கண்களில்லை, பெலன் உறுதியாயிருக்கிறது. நரா் படும் வர்த்தத்தில் அகப்படார்கள். உபாதியை அடையவில்லை. பெருமை, கொடுமை, கண்கள் எடுப்பாய்ப்பார்க்கின்றது. இருதயம் விரும்புகிறதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. கொடுமையான பேச்சு, தண்ணீர்கள் அவர்களுக்கு பரிபூரணமாய் சுரந்து வரும். சுகஜீவிகளாயிருந்து ஆஸ்தியை பெருகப்பண்ணுகிறார்கள். என்று ஆழ்ந்து சிந்தித்து, துன்மார்க்கனைக்குறித்து எழுதுகிறார். நாம் வேத வார்த்தைகளை எவ்வளவாக ஆழ்ந்து சிந்தித்து, துன்மார்க்கனைக் குறித்து எழுதுகிறார். நாம் வேத வார்த்தைகளை எவ்வளவாக ஆழ்ந்து தியானிக்கிறோம்? ஆசாப்பின் அந்த ஆழ்ந்த சிந்தனை நம்மிடம் உண்டோ? என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

ஆசாப் ஆக்கப்பூா்வமான முடிவுக்கு வந்தவர்
துன்மார்க்கனின் வாழ்க்கையைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்த ஆசாப் அவர்கள் மீது பொறாமை கொண்டவராக இருந்தார். ஆனாலும் அவர் ஆண்டவரைக் குறித்து ஒரு தீா்க்கமான ஆக்கபூா்வமான தீா்மானத்திற்குள் இருந்தார் என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. நிச்சயமாகவே நீா் அவர்களை சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீா். (சங்கீதம் 73.18) அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப் போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள். (சங்கீதம் 73.19) ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன். என் வலது கையைப் பிடித்துத் தாங்குகிறீர். (சங்கீதம் 37.13) உம்முடைய ஆலோசனையின் படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். (சங்கீதம்73.24) தேவன் நம்மோடிருக்கிறார், அவர் நம்மை கரம் பிடித்து தாங்குவார், மகிமையிலே ஏற்றுக்கொள்வார் என்ற ஆசாப்பின் நம்பிக்கை, தீர்மானம், முடிவு நம்மிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.

ஆசாப் ஆசைப்படாதவர்
பலருக்கு பல வகைகளில் ஆசைகள் உண்டு. ஆவிக்குரிய ஆசைகளாக இருக்கலாம். சரிரத்திற்குரிய ஆசைகளாகவும் இருக்கலாம். ஆனால் நம் ஆசைகள் தேவனை பிரியப்படுத்தும் வகையில் இருக்கலாம். அம்னோன், தேமா, சாலொமோன் போன்றவர்களின் ஆசைகள் தேவனுக்கு பிரியமானவைகள் அல்ல. இவ்விதமான பொல்லாத ஆசைகள், இச்சைகள் எழும்பும் போது கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீஷர்களோடு பஸ்காவை புசிக்க, ஐக்கியமாயிருக்க மிகவும் ஆசையாயிருந்தார். (லூக் 22.15) அப்போஸ்தலனான பவுல் விசுவாசிகளின் முகத்தைப் பார்க்க மிகுந்த ஆசை உள்ளவராயிருந்தார் (1 தெச 2.17) தன்னுடைய அழைப்பைத்தொடர ஆசையாயிருந்தார் (பிலிப் 3.12) ஆசாப்பின் ஆசையோ பரலோகத்தில் உண்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை (சங்கீதம் 73.25) என்பதாகும். நம்முடைய ஆசை, நம்முடைய விருப்பம் இன்று எதுவாயிருக்கிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

ஆசாப் ஆற்றல் மிக்கவர்
எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம். நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லி வரும் படி கர்த்தராகிய ஆண்டவர் மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். (சங்கீதம் 73.28) நாம் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். ஒரு வேளை நமக்கு நல்ல ஆற்றலோ, திறமையோ இருக்கலாம். ஆனால் ஆசாப் சொல்வதைப் போல ஆற்றல் மிக்க ஆண்டவர் மேல் நம்பிக்கை வைக்கும் போது அது எல்லாவற்றிற்கும் ஆற்றலைத் தரும். அருமையானவர்களே! சங்கீதக்காரனாகிய ஆசாப்பைப் போல நாம் கர்த்தரை ஆராதிப்போம். கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை ஆராய்ந்து நன்றி செலுத்துவோம். நம்முடைய கரத்திலுள்ள கர்த்தரின் வார்த்தைகளை வாசித்து ஆழ்ந்து சிந்திப்போம். எல்லாவற்றிக்கும் அவரே நம் நம்பிக்கை என்று ஆக்கபூா்வமான முடிவுக்கு வருவோம். உலக ஆசை இல்லாமல், உன்னத ஆசை உள்ளவர்களாக இருப்போம். ஆற்றல் மிக்கவரை அண்டிக்கொள்வோம். ஆசாப்பையும் அவன் சந்ததியையும் ஆசீர்வதித்து கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் ஆசீா்வதிப்பார்.