CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

கர்த்தர் ஒருபோதும் தவறு செய்கிறவரல்ல

கர்த்தர் ஒருபோதும் தவறு செய்கிறவரல்ல

1956 ஆண்டு 5 இளைஞர்கள் சுவிசேஷ பயணம் புறப்பட்டார்கள். அதுவே அவர்களுடைய கடைசிப் பயணமாயிற்று. அவர்கள் நித்திய மகிமைக்குள் பிரவேசித்தனர். அவர்கள் ஒரு பெரிய புனிதப் போரில் இறங்கி ஜீவனை இழந்து விடவில்லை. ஈக்குவடார் என்ற நாட்டில் “ஔகா“ என்ற இன்னும் கற்காலத்திலேயே வாழும் மலைவாசி மக்களுக்கு சுவிசேஷத்தை எடுத்து சென்றதின் ஒரே காரணத்திற்காக அவர்கள் மரணத்தை சந்தித்தனர். இரத்த சாட்சியாக மரித்தனர். ஔகா மலைவாசிகள் சிலரது அம்புக்கு அவர்கள் பலியானார்கள். சுவிசேஷத்தை எடுத்துச் சென்ற 5 இளைஞர்களுக்கு இப்படியொரு முடிவு வர வேண்டுமா? தேவன் இதை ஏன் அனுமதித்தார்? என்றெல்லாம் நம்மில் கேள்விகள் எழலாம்.

.

ஆனால் அவர்கள் தங்களுடைய ஜீவனை இழந்தாலும் அவர்களுடைய தரிசனம் அழிந்து விடவில்லை. இரத்த சாட்சியாக மரித்த ஒருவரின் மனைவி எலிசபெத் எலியட், மற்றுமொருவரின் சகோதரி ரேய்ச்செல். இருவரும் கிறிஸ்துவின் அன்பால் நெருக்கப்பட்டு அதே மலைவாசிகள் மத்தியில் சென்று இயேசுவின் சுவிசேஷத்தை எப்படியாயினும் அறிவிக்க வண்டும்  வேண்டும் என்ற வாஞ்சை கொண்டனர். அதனால் வைராக்கியம் ஏற்ப்பட்டது. ஆனால் அந்த மலைவாசிகளிடம் எப்படி செல்வது என்ற வழிமுறைகள் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.

.

டேயுமா என்ற ஔகா இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தற் செயலாக எலிசபெத் எலியட்டிற்கு பழக்கமானாள். அவள் தன்னுடைய இனத்தை விட்டு வெளியே வந்தாள். இருவரும் அவள் மூலமாக ஔகா மலைவாசிகளின் மொழியைக் கற்றுக் கொண்டனர். இயேசுக் கிறிஸ்துவின் இரட்சிப்பை குறித்து சொல்வதற்கான வழிகளையும் ஆயத்தங்களையும் செய்து மேற் கொண்டனர். டேயுமாவும் அவர்களோடு தன் இன மக்களிடத்திற்கு வரவும் சம்மதித்தாள்.

.

கடைசியாக 2 ½ ஆண்டுகள் கழித்து அவர்களுடைய ஆழ்ந்த விருப்பம் நிறைவேறியது. அவர்கள் மூவரும் ஔகா மலைவாசிகள் மத்தியில் போய்ச் சேர்ந்தனர். அவர்கள் மொழியை அறிந்திருந்த படியாலும், அவர்கள் இனத்தைச் சேர்ந்த டேயுமா அவர்களோடிருந்தபடியாலும் அவர்கள் பணி அவர்களுக்கு இலகுவாயிருந்தது. இயேசுவைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார்கள். இயேசுவின் உபதேசங்களை அவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் அவர்கள் மொழியிலேயே சொன்னார்கள். இயேசுவை அவர்கள் விளங்கிக் கொண்ட பின் மற்றவர்களுக்காக தன்னுடைய ஜீவனை சிலுவை மரத்தில் ஒப்புக் கொடுத்த மகா பெரிய அன்பைக் குறித்து அவர்களுக்குச் சொன்ன போது அவர்களுடைய இருதயங்கள் அசைந்தது. எத்தனையோ மக்களை அம்புக்கு இரையாக்கியிருக்கிறோமே என்ற குற்ற உணர்வு அவர்களை உணர்த்தியது. ஔகா மக்கள் இனிமேல் எங்கள் ஈட்டிகளால் யாரையுமே கொல்லமாட்டோம். இனி ஈட்டிகளே செய்யமாட்டோம் என்று அவர்களே தீர்மானம் செய்யும் நிலவரத்திற்கு வந்தனர்.

.

அப்போதுதான் அவர்கள் சொன்னார்கள், ”உங்களைப் போன்று எங்களிடம் இங்கு 5 பேரை, மனிதர்களைப் பிடித்துத் தின்பவர்கள் என்று எண்ணி அவர்களைக் கொன்று போட்டோம். எங்களுக்கு ஏற்ப்பட்ட பயத்தின் காரணமாக நாங்கள் அவர்களைப் பிடித்துக் கொன்றது தவறுதான் என்பதை உணர்கிறோம் என்று அவர்களிடத்தில் சொன்னார்கள். ஔகா இனத்தைச் சேர்ந்த பலர் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். அதில் சிலர் நல்ல பிரசங்கியாராக இருக்கிறார்கள்.

.

அந்த சுவிசேஷ ஊழியர்களை தேவன் இரத்த சாட்சியாக மரிக்க அனுமதித்ததற்குக் காரணங்கள் இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். அது தற்செயலாக நடந்த காரியமல்ல தேவன் அவருடைய நித்திய நோக்கத்தின் படியும், சித்தத்தின்படியுமே யாவற்றையும் செய்கிறார் என எலிசபெத் எலியட் தம் புத்தகத்தில் எழுதியுள்ளார். 1956 ஜனவரி 8ம் திகதி 5 இளம் சுவிசேஷ ஊழியக்காரர்கள் ஔகா இனத்தவர்களால் கொல்லப்பட்டது அவர்கள் குடும்பத்தாருக்குப் பேரிழப்பாகத் தோன்றலாம். ஆனால் அவர்கள் குடும்பத்திலிருந்து வைராக்கியமான சுவிசேஷ ஊழியர்களை தேவன் எழுப்பினார்.

.

அவர்களுடைய ஊழியத்தின் மூலம் மற்றவர்களைக் கொலை செய்வது கொடூர பாவம் என்பதையும் மற்றவர்களுக்காக ஜீவனைக் கொடுத்த அன்பு மகா பெரிய அன்பு என்பதையும் ஔகா மக்கள் விளங்கிக் கொண்டனர். இனிமேல் மனிதனை மனிதன் கொல்லக் கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்தனர். யாவும் அவருடைய சித்தத்தின்படியே நடக்கிறது. 5 பேர் இரத்த சாட்சியாக மரித்ததும் தேவசித்தமே. அதைத் தொடர்ந்து வைராக்கியமான உழியம் தொடங்கியதும் தேவசித்தமே. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.(1 யோவா 2:17).

.

ஔகா இனத்தவர் மத்தியிலான ஊழியம் அத்துடன் முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இரத்த சாட்சியாக மரித்த மற்றொருவரின் மனைவியும் ஸ்டீபன், கார்த்தி என்ற இரண்டு பிள்ளைகளும் சென்றனர். எந்த மக்கள் மத்தியில் சென்று தங்கள் தகப்பனார் இரத்த சாட்சியாய் மரித்தாரோ, அதே மக்களுக்காக அவருடைய பிள்ளைகள் அவர்கள் மத்தியில் சென்றடைந்தனர். அவர்களிடம் சென்ற பின் அவர்கள் மத்தியிலிருந்து கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தனர். ஒருநாள் கராரே என்ற ஆற்றில் ஞானஸ்நானம் கொடுக்கும் படி அங்கு வந்திருந்தார்கள். இவர்களும் தங்கள் தகப்பனாரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொண்டனர்.  ஆயினும் அவர்கள் மீது இவர்களுக்கு விரோதம் ஏற்படவில்லை. ஏனெனில் அவர்கள் இரட்சிக்கப்பட்டு இப்போது கிறிஸ்துவின் சுவிசேஷ பணியைச் செய்வதால் கிறிஸ்துவுக்குள் சகோதரர்கள் ஆகிவிட்டனர்.

.

ஸ்டீபன், கார்த்தி செயின்ட் இருவரும் அந்த ஔகா சுவிசேஷ பிரசங்கயிடம் ஞானஸ்நானம் எடுக்க தீர்மானித்தனர். அதே ஆற்றில் தங்களது தந்தையைக் கொன்றவர்களிடத்திலே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். ஞானஸ்நானத்தில் நாம் கிறிஸ்துவுக்குள் மரிக்கிறோம். நீரோட்டத்தின் இனிமையான இரைச்சல் நடுவே, பறவைகளின் இனிமையான சத்தங்கள் மத்தியில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டது ஒரு ஆச்சரியமான அனுபவமாயிருந்தது. தண்ணீரை விட்டுக் கரையேறும் போது, ”உண்மையிலேயே நான் ஔகா மக்களுடன் மிகவும் நெருங்கி வந்துவிட்டேன். ஏனெனில், என் அப்பாவைக் கொன்றவரின் கையாலேயே நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன். அவர்களும் தங்களது குற்றத்தை உணர்ந்து மனந்திரும்பி இப்போது இயேசுவுக்கு ஊழியக்காரராக இருக்கிறார்களே” என்று ஸ்டீபன் சொன்னான்.

.

ஞானஸ்நானம் கொடுத்து முடிந்ததும் யாவரும் அருகிலுள்ள பொதுவான கல்லறைத் தோட்டத்திற்கு சென்றனர். அங்கு தான் ஊழியத்தின் நிமித்தம் இரத்த சாட்சிகளாக மரித்த 5 பேர்களும் புதைக்கப்பட்ட இடம் உள்ளது.  கல்லறையில் காட்டுப் பூக்கள் மலர்ந்து அழகுபடுத்தியது. கிமோ ஜெபம் பண்ணத் தொடங்கினார். ”பிதாவாகிய கர்த்தாவே கடந்த முறை நாங்கள் சுவிசேஷர்களை புதைக்க இந்த இடத்திற்கு குற்றவாளியாகவே வந்திருந்தோம் அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்பதை இப்போது நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நிச்சயத்தோடு வந்திருக்கிறோம். அது என்னவெனில் திரும்பவும் அவர்களைப் பரலோகத்தில் சந்திப்போம்” என்று ஜெபித்தார்.

.

ஜெபம் முடிந்ததும் அவர்கள் அந்த 5 பேரும் மரிப்பதற்கு முன்பு பாடிய ஒரு அருமையான பாடலைப் பாடினார்கள். ”எங்கள் கேடகமும் எங்கள் பாதுகாவலருமான கர்த்தாவே உம்மில் நாங்கள் சார்ந்து கொள்கிறோம்”, என்ற பாடல் தான் அது. அந்தக் காட்சி அவர்கள் இருதயங்களையே அசைத்தது.

.

முழு அப்பம் ஒருவேளை ஒரு சிறிய பையனைத் திருப்திப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதே அப்பம் பிட்கப்பட்ட போது அது திரளான மக்களைத் திருப்திப்படுத்தும் உணவாக மாறுகிறது. கர்த்தருடைய கரத்தில் உங்களை ஒப்புவித்து விடுங்கள். அப்போது அவர் உங்களுடைய ஜீவியத்தை பலருக்கும் பயன்படும் படி மாற்றுவார். முற்றுமாய் எந்த வித நிபந்தனையுமின்றி அவருக்கு ஒப்புவியுங்கள். காத்தர் ஒருபோதும் தவறு செய்கிறவரல்ல!!!