CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

நல்ல வார்த்தைகளையே பேசுவோம்

நல்ல வார்த்தைகளையே பேசுவோம்

உன் பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். – (எபேசியர் 4:29).

.

கர்த்தருடைய ஊழியர் ஒருவர் பிரசித்தி பெற்ற டாக்டர் ஒருவரோடு உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார். அவர் நரம்பு சம்பந்தமான சிகிச்சையில் மிகவும் பெயர் பெற்றவர். அவர் தேவ மனிதனிடம் சொன்னார், ‘சரீரத்திலுள்ள எல்லா நரம்புகளைக் காட்டிலும் பேச்சுக்கான நரம்புகளே நம் சரீரத்தை ஆளுகிறவைகளாக இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? தேவ ஊழியர்களாகிய நீங்கள் வேத வசனத்தை இடைவிடாமல் பேசுகிறதாலேயே வல்லமையுள்ளவர்களாக இருப்பதற்கு இதுவே காரணம்’ என்றார். அதற்கு அந்த ஊழியர் சொன்னார், ‘ஆம், இதை முன்பே வேறொருவர் சொல்லி விட்டார். அவர் பெயர் யாக்கோபு’ என்று சொல்லிவிட்டு வேதத்திலிருந்து யாக்கோபு மூன்றாம் அதிகாரத்தில் சில வசனங்களை எடுத்துக் காட்டினார். நாவு சிறிய அவயவமாயிருந்தும், சரீரம் முழுவதையும அடக்கி ஆள்கூடிய கடிவாளமாயிருக்கிது என்று அவரிடம் விளக்கினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேதத்தில் இப்படி எழுதப்பட்டிருப்பதை அந்த வைத்தியர் கண்டு ஆச்சரியப்பட்டு போனார்.

.

ஒரு டாக்டர் சொன்னார், ‘ஒரு மனுஷன் நான் பெவீனமாய் இருக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லும்போது அவனது நரம்புகள் அந்த செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. நமது மைய தொடர்பகத்திலிருந்து, நாம் பெவீனமாக வேண்டும் என்ற கட்டளை வந்தவுடன் நமது சரீரம் மிக வேகமாக பெலவீனப்பட்டு போகிறது’ என்றார். இது எத்தனை உண்மை!.

.

‘பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்’ (நீதிமொழிகள் 17:28) என்று வேதம் கூறுகிறது. அநேகர் தேவையற்ற வார்த்தைகளை பேசி தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள். கணவனும் மனைவியும் பேச வேண்டிய வார்த்தைகளை விட்டுவிட்டு, தேவையற்ற வார்த்தைகளை பேசுவதால் அவர்களது வாழ்வில் சந்தோஷம் இழந்து காணப்படுகிறது. தேவையற்ற வார்த்தைகள் பேசுவதால் உயிர் நண்பர்களும் பிரிந்து விடுகிறார்கள். தேவையற்ற வார்த்தைகளை பேசுவதால் அநேகருடைய இருதயம் புண்படுகிறது. விசுவாசமில்லாத தோல்வியான வார்த்தைகளை பேசுவதால் அநேகர் இந்த நாளில் நோய்வாய்பட்டிருக்கிறார்கள்.

.

எரிகோ மதிலை சுற்றி இஸ்ரவேலர் வரும்போது, ‘யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்’ (யோசுவா 6:10). ஏனெனில் அவர்கள் அவிசுவாசமாக இவ்வளவு பெரிய மதில் சுவர் எப்படி நாம் சுற்றி வருவதால் விழுந்துப் போகும், இதெல்லாம் நடக்கிற கதையா என்று அவிசுவாசத்தோடு பேசியிருந்தால் அவர்கள் எரிகோவை சுதந்தரித்திருக்க முடியாது. ஆகையால் உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம் என்று யோசுவா ஜனங்களுக்கு கட்டளையிட்டிருந்தார்.

.

இன்றைக்கும் அநேகர் தோல்வியான நம்பிக்கையில்லாத வார்த்தைகளையே பேசுகிறார்கள். அவ்வாறில்லாமல். விசுவாச வார்த்தைகளை கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து பேசும்போது நாம் பெலமடைகிறோம். ‘பெலவீனனும் தன்னை பெலவான் என்று சொல்வானாக’ என்று வேதம் கூறுகிறது. நான் கர்த்தருக்குள் பெலவான் என்று பெலவீனன் சொல்லும்போது, தேவனுடைய பெலன் அவனை சூழ்ந்துக் கொள்ளும்.

.

நாவை நம் அதிகாரத்திற்குள் வைத்து, கட்டுப்படுத்த பழகி கொள்வோம். தேவையற்ற மற்றவர்களை புண்படுத்தும், நம்மையே பெலவீனமடைய செய்யும் வார்த்தைகளை பேசுவதை விட்டு, விசுவாச வார்த்தைகளை பேசுவோம். கர்த்தரை துதிக்கும் துதி எப்போதும் நம் வாயில் இருக்கட்டும். அதினால் கர்த்தர் மகிமைப்படுவார். அவருடைய கிருபை நம் வாழ்வில் பெருகும். ஆமென் அல்லேலூயா!