Zion Church

உபவாசம் உன்னத அனுபவம்

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். (யோவேல் 2:15)

உபவாசத்தின் அவசியம்

நம்முடைய ஜெப வாழ்க்கையை அனல் மூட்டுவதற்கு உபவாசம் அவசியமாகிறது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் உபவாசத்திற்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். இன்றைக்கு பலர் உபவாசம் என்பதை ஒருமுறை கூட இருந்ததில்லை என்கிறார்கள். ஒரு சமயம் பத்து நபர்களிடத்தில் நீங்கள் உபவாசம் இருந்ததுண்டா? என்று கேட்டேன். ஆறுபேர் இதுவரை இருந்ததில்லை என்கிறார்கள். இரண்டு பேர் எப்பொழுதாவது இருப்போம் என்கிகிறார்கள். இரண்டு பேர் மட்டும்தான் உபவாசத்தை பழக்கமாக்கிக் கொண்டிருந்தவர்கள். பத்தில் எட்டு பேர் உபவாசத்தின் வல்லமையை அறியாதிருப்பது வேதனைக்குரியது இல்லவா?

மனிதனுக்கு ஏற்பட்ட முதல் சோதனையே உண்பதில்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருதயத்திற்கு செல்ல வயிறுதான் வழி என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி . நோவா அளவுக்கு மீறி குடித்து நிர்வாணியானான். ஏசா உணவிற்காக தன் சேஷ்ட புத்திரப்பாகத்தை விற்றான். இஸ்ரவேலர்கள் எப்படி விக்கிரகாராதனைக்காரர்கள் ஆனார்கள் என்பதை பவுல் விளக்குகிறார். “ஜனங்கள் புசிக்கவும், குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாரதனைக்காரர் ஆனது போல நீங்களும் ஆகாதிருங்கள்.” (1கொரி 10:7)

இயேசு உபவாசத்தை முடிக்கும்பொழுது வந்த முதல் சோதனை கல்லை அப்பமாக்கி சாப்பிட சொன்னதுதான். பவுல் சொல்வதுபோல  சிலருக்கு “அவர்களுடைய தேவன் வயிறு” (பிலி 3:19)

கடைசி காலத்தைக் குறித்து இயேசு எச்சரித்தபொழுது “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும், லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும்…. எச்சரிக்கையாயிருங்கள்” (லூக் 21:34) நாம் இதிலிருந்து தப்பவேண்டுமானால் “எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்” என்பதுதான் நம் ஆண்டவரின் ஆலோசனை.

எனவே உபவாசத்தை உடனடி பழக்கமாக்குவோம். அது நம் ஜெப வாழ்க்கையின் புரட்சிகரமானதாக மாறிவிடும்.

தேவனால் விடப்பட்ட அழைப்பு

தம்முடைய நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் பெறுவதற்கு மோசேயை தேவன் மலையின் மீது அழைத்தார். (யாத் 24:12) அங்கே நாற்பது நாட்கள் மோசே அப்பம் புசியாமலும்  தண்ணீர் குடியாமலும் இருந்தான். அதே போல் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்திற்கு போகும் முன்பு நாற்பதுநாள் உபவாசம் இருக்கும்படி ஆவியானவராலே வனாந்திரத்திற்கு கொண்டு போகப்பட்டார்.

“இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத்திரும்பி, ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டு போகப்பட்டு, நாற்பது நாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்.” (லூக் 4:1,2)

யோவான் ஸ்நானகனுடைய வாழ்க்கையே உபவாசமாகத்தான் இருந்தது. “… யோவான் ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்” (லூக் 2:33) என்று இயேசு கூறியுள்ளார். இப்படிப்பட்ட உபவாசங்கள் தேவனாலே விடுவிக்கப்பட்ட அழைப்பாக இருக்கிறது.

யோவேல் தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தைகளை சொல்லும்பொழுது “ பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்” (யோவேல் 1:14)

“சீயோனிலே எக்காளம் ஊதுங்கள். பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்” (யோவேல் 2:15) என்று அழைக்கிறார். ஆகவே நாமும் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு நம்முடைய வாழ்க்கையில் உபவாசத்திற்கு முக்கிய பங்கு கொடுப்போம்.

வேண்டாம் தவறான கருத்து

சிலருக்கு உபவாசத்தைக் குறித்து தவறான கருத்து உள்ளது. சாதாரணமாக ஒரு பொருளை கேட்டு பெற்றோர் கொடுக்காவிட்டால் குழந்தை அடம் பிடித்து வாங்கி கொள்கிறதே. அதுபோல்தான் நாமும் உபவாசம் இருந்து தேவனிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரசங்கித்தார் ஒருவர். இவையெல்லாம் தேவனைக் குறித்த சரியான கருத்து நமக்கு இல்லாததினாலே உண்டாகிற சிந்தனைகள். அடம்பிடிக்கிற குழந்தைக்கு அடிபணிகிறவர் அல்ல நம் ஆண்டவர்.

உபவாசத்தினால் தேவனை பயமுறுத்தவோ, தேவனுடைய திட்டத்தை மாற்றவோ முடியாது. தாவீது தன் பிள்ளைக்காக உபவாசம் இருந்தும் தேவன் அந்த பிள்ளையை எடுத்துக்கொண்டார். (2சாமு 12:22,23) ஆனால் சிலவேளைகளில் நாம் உபவாசத்தால் காரியங்கள் மாறும் என்பதை தேவனே திட்டம் பண்ணி வைத்திருப்பார். நினிவே மக்களுக்கு அவர் யோனாவை அனுப்பி தேசத்தை அழிக்கப்போகிறேன் என்றார். ஆனால் அந்த மக்கள் உபவாசித்தபொழுது அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார். இங்கே தேவன் மாறவில்லை மக்கள்தான் மாறினார்கள். தேவனுடைய திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

உபவாசம் என்பது பரலோகத்திற்கு எதிராக நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டம் அல்ல.

வரங்களை பெறுவதற்கும், வல்லமையை அடைவதற்கும் தான் உபவாசம் என்று நினைக்கக்கூடாது. இவைகளையெல்லம் நாம் உபவாசம் இருக்காமலேயே நமக்கு தருவதற்கு தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.

உபவாசம் என்பது பரலோகத்திற்கு எதிராக நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டம் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

உபவாசம் என்பது உபனுடன் வாசமாயிருப்பது அதாவது தேவனுடன் வாசம்பண்ணுவது என்று அர்த்தமாம். உபவாசங்கள் நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக மாற்றும். “இந்த உலகத்தின் இன்பங்களை விட உம்மைத்தான் அதிகம் நேசிக்கிறேன்” என்பதை காட்ட ஒரு அரிய சந்தர்ப்பம். உபவாசம் இருக்கையில் நாம் அதிக நேரம் தேவனோடு தனித்து தரித்திருக்க முடிகிறது. நம்முடைய சரீரப்பிரகாரமான ஆசைகள் கீழ்ப்படுத்தப்படுவதினால் ஆவிக்குரிய காரியங்கள் மேல் நம் பசிதாகம் அதிகமாகிறது. நம்முடைய எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதின் மூலம் நம்மால் வல்லமையாய் ஜெபிக்க முடிகிறது.

உபவாசத்தினால் ஏற்படும் நன்மைகள்

உபவாசித்து ஜெபிப்பதின் மூலம் பல நன்மைகளை நாம் அடைய முடியும். இங்கு மிக முக்கியமான மூன்று காரியங்களை நாம் பார்க்கலாம்.முதலாவதாக உபவாசித்து ஜெபிப்பதின் மூலம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துகிறோம். “அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும்… நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்” (எஸ்றா 8:21) வேதத்தில் ஜனங்கள் தங்களை தாழ்த்துவதற்கும், மனந்திரும்புவதற்கும் உபவாச ஜெபத்தை தேர்ந்தெடுத்ததை பார்க்கலாம். அப்படி அவர்கள் தாழ்த்துகிற பொழுது தேவன் அவர்களுக்கு இரங்கினார்.

இரண்டாவதாக உபவாசித்து ஜெபிக்கும்பொழுது தேவ சத்தத்தைக் கேட்கலாம். மோசே தேவசத்தத்தை கேட்டதும், வெளிப்பாடுகளைப் பெற்றதும் உபவாச ஜெபத்தில்தான். அப்போஸ்தலர் உபவாசித்து ஜெபிக்கும்பொழுது பரிசுத்த ஆவியானவர் திருவுளம் பற்றினதை தெளிவாக கேட்டனர். (அப் 13:2)

மூன்றாவதாக நாம் உபவாசிக்கும் பொழுது ஆவிக்குரிய போராட்டங்களில் ஜெயம் எடுக்கிறோம்.