CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் முன்மாதிரி

உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் முன்மாதிரி

“நண்பனே , என்னைக் கடந்து செல்வதற்கு முன் சற்றே நில். நீ இப்பொழுது எப்படியிருக்கிறாயோ அப்படியேதான் நானும் இருந்தேன். இப்பொழுது நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே நீயும் ஆவாய். ஆகவே நண்பனே, ஆயத்தப்படு, என்னைப் பின்பற்று.”

இது இங்கிலாந்து தேசத்தில் வின்ட்சர் கேசில் (Windsor castle) அருகிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் ஒரு கல்லறையில் எழுதப்பட்டிருந்த கல்லறை வாசகம். இதைப் பார்த்த பார்வையாளர் ஒருவர் இப்படியொரு விமர்சனம் செய்தார். “நீ எந்த வழியாய்ச் சென்றாய் என்பதை நான் அறிந்து கொள்ளாதவரை நான் உன்னைப் பின்பற்ற முடியாது.” அவர் சொல்வது சரியே. மரணத்திற்குப் பின்னான நித்திய வாழ்வில் இயேசுவோடு சதாக்காலமும் வாழத்தக்கதான சரியான வழியில் செல்கிறோமா என்பதுதான் காரியம் ஏனென்றால், மரணம் தற்செயலாக ஏற்படுகிற நிகழ்வு (Accident)  அது ஒவ்வொருவருக்கும் நியமிக்கப்பட்ட ஒன்றாகும். (Appointment) (Death is not an accident, it is an appointment) ஆனால், அந்த நியமிக்கப்பட்ட நாள் மாத்திரம் நமக்குத் தெரியாது. “ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.”(எபி 9:27) அந்த நியாயத்தீர்ப்பில் நாம் நமது நற்கிரியைகளின் பிரதிபலனைப் பெற்றுக்கொள்ளப்போகிறோமா அல்லது ஆக்கினைத் தீர்ப்படையப்போகிறோமா என்பதே காரியம்.

ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்பால் மரணத்தைச் சந்திக்காமலேயே தேவனோடு எடுத்துக்கொள்ளப்படுகிற (Caught up) ஒரு அனுபவத்தை வேதம் சொல்லுகிறது. அதன், முதல் முன் உதாரணத்தைத்தான் (First Precedence) முதற் புத்தகமாகிய ஆதியாகமம் 5:24-ல் “ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.” என்று வாசிக்கிறோம். ஏனோக்கு ஆதாமிலிருந்து ஏழாம் தலைமுறையைச் சேர்ந்தவன். “ஏனோக்கு” என்ற எபிரெயச்சொல்லுக்கு அர்ப்பணம் (Dedication) அல்லது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை (Dedicated life)  என்று அர்த்தம். ஏனோக்கு அவனுடைய பெயருக்கு ஏற்ப அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் வாழ்ந்த முன்னூற்று அறுபத்தி ஐந்து (365) ஆண்டுகளில், முன்னூறு (300) ஆண்டுகள் தேவனோடு சஞ்சரித்தான். (He walked with God) குமாரர்களையும், குமாரத்திகளையும் பெற்றான் என்று காண்கிறோம். (ஆதி 5:22) அவன் மரணத்தைக் காணாமல் தேவனால் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அவனிடத்திலிருந்த சிறப்பான காரியங்கள்தான் என்ன?

அவன் தேவனோடு சஞ்சரித்தான். “இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?” என்று ஆமோஸ் 3:3-ல் வாசிக்கிறோம். ஆகவே, அவன் தேவனோடு ஒருமித்து நடந்திருக்கிறான். ஒருமனப்பட்டிருக்கிறான். தேவனுடைய மனதும், ஏனோக்கின் மனதும் இசைந்து ஒன்றாக்கப்பட்டு இருந்திருக்கிறது. வேறுவிதமாகச் சொன்னால் ஒரே அலைவரிசைக்கு இசைவாக்கப்பட்டு இருந்திருக்கிறது. (tuned to the same wave length) ஆகவே, தேவனோடு கருத்து ஒருமித்து நிலவரத்தில் வாழ்ந்துள்ளான். ஆகவே, ஒன்றாகவே முன்னூறு ஆண்டுகள் அவரோடு நடந்திருக்கிறான். என்றால் தேவனோடு அவனுக்கிருந்த ஐக்கியம் எவ்வளவு மேன்மையானது!

எபிரெய நிரூப ஆக்கியோன் இந்த மேலான உறவுக்கு, ஏனோக்கு தேவன் மீது வைத்திருந்த விசுவாசமே காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார். அந்த விசுவாசமே தேவனுக்குப் பிரியமானவன் என்று தேவனிடத்தில் சாட்சிபெற உதவியது என்றும் குறிப்பிடுகிறார். ஆகவேதான், அவன் மரணத்தைக் காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்டான். என்று காண்கிறோம். (எபி 11:5) ஆகவே, அடுத்த வசனத்தில் “விசுவாசமில்லாமல் தேவனுக்குப்பிரியமாயிருப்பது கூடாத காரியம்” (எபி 11:6) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போஸ்தலனாகிய யூதா ஏனோக்கைக் குறித்து மிகத் தெளிவாக விவரித்துள்ளார். “இதோ எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்து வந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.” யூதா 14,15-ல் வாசிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை முன்னறிவித்த முதல் தீர்க்கதரிசி என்றும், எச்சரித்து சுவிசேஷம் அறிவித்த நல்ல சுவிசேஷகன் என்றும் காண்கிறோம். ஆனால், வேத வல்லுநர்கள் யூதா 14,15-ல் சொல்லப்பட்ட காரியம் தள்ளுபடி ஆகமமாகக் கருதப்பட்ட ஏனோக்கின் ஆகமத்தின் (Book of Enoch) அதிகாரம் 1-ன் வசனம் 9-ஐ எடுத்து யூதா மேற்கோள் காட்டியிருக்கிறார். என்று கருதுகின்றனர். அப்படி ஒரு ஆகமம் இருந்ததாகவும் தெர்த்துல்லியன் என்ற வரலாற்று ஆசிரியர் உறுதி செய்கிறார். எனினும், இது உண்மையான முன்னறிவித்தல் என்று கருத இடமிருக்கிறது. தேவனின் நியாயத்தீர்ப்பு ஒன்று வர இருக்கிறது என்பதை ஏனோக்கு எச்சரித்துள்ளான். ஏனெனில், அன்று இருந்த உலகம் சகல சீர்கேடுகளினாலும், கொடுமையினாலும், அக்கிரமங்களினாலும் நிறைந்திருந்தது. ஆகவே தான், ஏனோக்கை அடுத்த மூன்றாம் தலைமுறையில் அதாவது, நோவாவின் தலைமுறையில் ஜலப்பிரளயம் வந்து முழு உலகமும் அழிக்கப்பட்டது. உத்தமனும் நீதிமானுமாய் நடந்த நோவாவும் அவனுடைய குடும்பத்தார் மாத்திரம் காக்கப்பட்டனர் என்று வேதம் கூறுகிறது.

ஆகவேதான், அப்போஸ்தலனாகிய பேதுரு ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்ட பூர்வ உலகத்தையும், சோதோம் கொமோரா பட்டணங்களையும் மேற்கோள்காட்டி “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.” என்று     2 பேதுரு 2:9-ல் வாசிக்கிறோம். பூர்வ உலகமாகிய நோவாவின் காலமும், சோதோம் கொமோரா பட்டணங்களிலிருந்த அக்கிரமச் செயல்களும் இன்று உலகில் நிரம்பி வழிகிறது. ஆகவேதான், இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள் நிறைவேறி வருகின்றன. அவரை சந்திக்க ஆயத்தப்படுங்கள் என்ற எச்சரிக்கையின் முன்னறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவர் வரும்போது பெருங்கூட்ட மக்களுக்கு அது நியாயத்தீர்ப்பாகவும், ஒரு கூட்டத்தாருக்கு சரீர மீட்பாகிய கடைசி இரட்சிப்பாகவும் அமையும். நாம் எந்த கூட்டத்தில் இருப்போம். என்பதை இப்பொழுதே நிதானிப்போம். சீர்படுத்திக்கொள்ள தாமதிக்க இது காலம் அல்ல. அநேக தேவ மனிதர்கள் நாமே கடைசி சந்ததியினராக இருப்போம் என்றும் அவருடைய வருகையின் நாளுக்கு மிக அருகாமையில் வந்துவிட்டோம். என்றும் எச்சரிப்பின் குரல்களைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். நாம் உயிரோடிருப்போமானால் ஏனோக்கைப்போல பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட ஆயத்தமாவோம் பழைய ஏற்பாட்டில் ஏனோக்கு முதல் முன்மாதிரி. புதிய ஏற்பாட்டில் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குச் சென்ற இயேசு கிறிஸ்துவே நமது முதல் முன்மாதிரி, நன்மாதிரிகளை (Role Model) பின்பற்றுவேன். நாம் உயிரோடிருந்தால் மறுரூபமடைந்து எடுத்துக்கொள்ளப்படத் தகுதிகளைப் பெற்று ஆயத்தமாயிருப்போம்.