Zion Church

கட்டு மீறிய மகன்

(உவில் லாங்நெக்கர் ஓர் அமெரிக்க மிஷனெரி. ரோதா அவரது மனைவி. அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தவன் ப்ராட். ப்ராட் எப்படி மனம்மாறினான் என்பதை தந்தை உவில் இங்கே சாட்சியாகச் சொல்லுகிறார்).

.

 “நானும் வரணுமா? சே, மோசம்! காரும் ஓட்டக்கார்! அதில் எட்டுப்பேர் பள்ளி மூட்டைபோல் அடைய வேணும்! அப்படி 6000 மைல் கை, காலை அசைக்க முடியாது. நீங்கள் எல்லாரும் போங்கள். நான் வீட்டில் என் நண்பரோடு இருக்கிறேன்” என்றான் என் மூத்த மகன் ப்ராட்.

.

1976-ம் ஆண்டு ஈஸ்டருக்கு முன் என் பிள்ளைகளுக்கு விடுமுறை. டொரண்டோ நகர்ப் பகுதியில் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டேன். குடும்பமாகச் சென்று ஊழியம் செய்வது மிகுந்த பயன்தரும் எனக்கருதி குடும்பமாகப் புறப்பட்டோம்.

.

என் மூத்த மகன் ப்ராட். அவனுக்கு அப்போது வயது 15. நல்ல பையன்தான். ஆனாலும் வயது கூடக்கூட அவனது எதிர்ப்பு மனப்பான்மையும் வளர்ந்து கொண்டே வருவதைக் கண்டோம்.

.

குடும்பமாக ஆண்டவருக்குச் சாட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அதன்படி பிள்ளைகள் அன்போடும், கண்டிப்போடும் வளர்க்க விரும்பினோம். தேவை ஏற்படும் போதெல்லாம் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் அன்பிலும் வளர்த்து வந்தோம்.

.

பல சமயங்களில் ப்ராட் கட்டுமீற விரும்பினான். சிறுசிறு மோதல்கள் ஏற்படும், என்றாலும் நிலைமை மோசமாகி விடவில்லை. எப்படியும் கடைசியில் கண்டிப்புக்கு அடங்கிவிடுவான்.

.

மொரண்டோ நகர்ப் பகுதிக்குக் குடும்பமாக சென்றோம். ஊழியத்தை நிறைவேற்றி வீடு திரும்பினோம். ப்ராட்டும் கூடுமானவரை ஊழியத்தில் கலந்து கொண்டான். நாங்கள் திரும்பிய பின், ப்ராட் கட்டுமீறும் நிலைமைக்குள் வருவதைக் கண்டு வேதனைப்பட்டோம். இதுவரை உள்ளாக அடங்கிப் புகைந்து கொண்டிருந்த கோபம், எதிர்ப்பு, பணியாமை முதலிய சுபாவங்கள் இப்பொழுது கொந்தளித்துப் பீறியெழ ஆரம்பித்தன.

.

அவனுடைய நண்பர்களை நாங்கள் விரும்பவில்லை. அவனுடைய முடியலங்காரம், பாடல்கள் எங்களுக்கு வெறுப்பை ஊட்டின. அவனது வாழ்க்கைப் போக்கே எங்கள் விருப்பத்திற்கு நேர் மாறாக மாறிற்று. எங்களுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு குறைய நேரிட்டது. தொடர்பு கொள்வதும் வெளியரங்கமான மோதல்ககுக்குள்ளாகிற்று. என் இதய ஆழத்தில் பெரும்மனக்கசப்பு வளர்வதை உணர்ந்தேன்.

.

இந்த சூழ்நிலையின் பலன்? ஊழியத்திற்குத் தடை, மற்ற பிள்ளைகளின் வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பு. கலங்கினோம், திகைத்தோம். இந்த அவலநிலையை நானும், ரோதாவும் ஆண்டவர் முன் சமர்ப்பித்தோம். று என்னதான் நாங்கள் செய்யக் கூடும்? கண்ணீரோடு ஜெபித்தோம். “ஆண்டவரே, ப்ராட் மனதை மாற்றும். அவன் நடத்தை மற்ற பிள்ளைகளையும் பாதிக்கிறதே, நீர் அவனை மாற்றித்தான் ஆக வேண்டும். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டும்” எனக் கண்ணீருடன் மன்றாடினோம்.

.

வழிகாட்டும் என ஜெபித்தேன். வழியைக் காட்டினார். ஆனால் அவர் காட்டிய வழியை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை என்னிடம் இல்லை.

 .

“உவில், உன் மகனுடைய மனமாற்றத்திற்கு ஒரு ஆள் தடை.”

.

“நீயே அந்த ஆள்”

 .

(அதிர்ச்சியுற்றேன்) “என் கடமையில் தவறவில்லையே, ஆண்டவரே.”

 .

“ஆ, நீதான் தடை, நான் அவனை மாற்றக்கூடாதபடி என் கைகளை கட்டி வைத்திருப்பவன் நீயே!”

.

“புரியவில்லை ஆண்டவரே.”

.

“அவன் பேரிலுள்ள மனக்கசப்பையும், அரவணைக்கும் தொடர்பை துண்டித்தலையும், அவன் குற்றவாளியெனத் தீர்ப்பளித்தலையும் நீ மாற்றிக் கொள்வாயா? மாற்றிக் கொள்ளும் வரை என் கைகள் கட்டப்பட்டேயிருக்கும்!”

.

பிரமித்து, பேதலித்து நின்றேன். தொடர்ந்து பேசினார். “பல ஆண்டுகளுக்கு முன் நான் உன்னை ஏற்றுக் கொண்டேன், அதை நினைத்துப் பார்; பரிசுத்தத்தோடு வா என்று சொன்னேனா? நீதியுள்ளவனாய் வா என்றேனா? நான் அருவருக்கும் அநேக காரியங்கள் உன்னில் இருக்கும் நிலையில் தானே உன்னை ஏற்றுக்கொண்டேன், அரவணைத்தேன். என் குமாரன் இயேசுவினிமித்தம் உன்னை நேசித்தேன்.”

 .

“உண்மைதான் ஆண்டவரே, அப்படியானால் நான்…நான்”

 .

“நேரே, உன் மகனிடம் போ! உன் தவறான மனோநிலையை அறிக்கையிடு! உன்னுடைய மனக்கசப்பை, ஒதுக்கின துண்டிப்பை, குற்றவாளியெனத் தீர்த்தலை அறிக்கையிடு. இவ்வாறு நீ உன் மகனுக்கு விரோதமாகச் செய்த பாவத்தை அவன் மன்னிக்கும் படி அவனைக் கேள்!!!”

.

ஆனால் ஆண்டவரே, அவன் குற்றவாளிதானே? அவன் கட்டுமீறிய நடத்தைகளும் உமக்குப் பிரியமில்லாதவைதானே? இப்படிச் செய்தால்….. என் மகனே, நான் எல்லாம் அறிவேன். அவனை உபயோகிக்க நீதான் தடையாய் இருக்கிறாய். என் கட்டுக்களை நீ அவிழ்த்தெறியும் வரை நான் பொறுமையோடு உன் இதயக் கதவைத் தட்டிக் காத்திருப்பேன்.

.

ஆம், திட்டமான உத்தரவு; கடினமான வழி. நானே தடை என்ற உண்மையை ஆமோதித்து ஜீரணித்தல் சுலபமாயிருக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உண்மையை உண்மையை பூரணமாய் அங்கீகரித்தேன். அறிக்கையிட வேண்டும். மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் ஊழியம் பாழ், ப்ராட் தன் துன்மார்க்கத்தில் அழிவான். மற்றப் பிள்ளைகளும் பாதிக்கப்படுவார்கள். சிந்தித்தேன். இந்த அவல நிலை மாற என்னைத் தாழ்த்த தீர்மானித்தேன்.

.

ஆம், என் மகனுக்காக அல்ல, என்னுடைய கீழ்படிதலுக்காகக் காத்திருக்கும் ஆண்டவர், என் மகனுடைய பாவ வாழ்க்கையை அங்கீகரிக்கும் படி அவர் என்னைக் கேட்க, நேசிக்கவும் ஏற்றுக்கொள்ளவுமே கேட்கிறார் என்பதை உணர்ந்தேன். கீழ்படிந்தேன். சென்றேன், அன்போடு நோக்கினேன், அரவணைத்தேன், அறிக்கையிட்டேன், மன்னிப்புக் கேட்டேன், அழுதேன். என் கண்ணீரில் என் மனக்கசப்புகளெல்லாம் கரைந்து மறைந்து ஒழிந்தன.

.

அற்புதமும் நிகழ்ந்தது. கட்டவிழ்க்கப்பட்ட கர்த்தரின் கரங்கள் ப்ராட்டின் இதயத்தைத் தொட, அவனும் அழுதான். இதயம் நொருங்கினான். தன் கலக வழிகளை அறிக்கையிட்டான். மன்னிப்புக் கேட்டான். அன்னையிடம் சென்று அவளை மார்போடணைத்து மன்னிப்புக் கேட்டான். புது வாழ்வுக்கு வாக்களித்தான்.

.

இந்த அற்புத நிகழ்ச்சிக்குப் பின் வருடங்கள் உருண்டோடியுள்ளன. ப்ராட் கர்த்தரின் கிருபையால், அவருக்குள் படிப்படியாக வளர்ந்து வருகிறான். நான் சில சமயங்களில் தடுமாறினாலும், அவன் கர்த்தருக்குள் பூரணப்பட்டு வருகிறான். ஆண்டவருக்கே மகிமை.

.

“எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்” (சங்கிதம் 16:7).