[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
பில்லி சண்டே (Billy Sunday) தன்னுடைய பிரசங்கத்தில் ஒரு சம்பவத்தை விளக்கினார். அவிசுவாசியான கொல்லன் (Black smith) ஒருவனிருந்தான். ”எந்த ஒரு கிறிஸ்தவனும் என்னிடத்தில் வந்து கிறிஸ்தவத்தைப் பற்றி பேச முடியாது. நான் அவர்களோடு தர்க்கித்து அவர்களை வாயடைத்து விடுவேன்” என்று எப்பொழுதும் சவால் விட்டுப் பேசிப் பெருமைப்பட்டுக் கொள்வான். இதை அறிந்த அவ்வூர் சபையைச் சேர்ந்த வயது முதிர்ந்த மூப்பர் ஒருவர் (Deacon of the church) இந்தக் கொல்லனை இயேசு எப்படியேனும் சந்திக்க வேண்டும் என்று சிந்திக்கலானார். தன்னுடைய மனைவியோடு சேர்ந்து இந்தக் காரியத்திற்காக ஜெபிக்கத் தீர்மானித்து ஜெபிக்க ஆரம்பித்தார். ஒருநாள் காலை அந்த மூப்பர் அந்தக் கொல்லனுடைய பட்டறைக்குச் சென்று அவனைச் சந்தித்தார். ”நண்பனே, நேற்று இரவு விடியற்காலை 3 மணி வரை நானும் என் மனைவியும் உனக்காக ஜெபித்தோம்” இதைச் சொல்லும் பொழுதே அவருடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தன. அதற்கு மேல் அவரால் எதுவுமே பேச முடியவில்லை. உடனே திரும்பி தன் காரில் ஏறி வீட்டிற்கு வந்து விட்டார். அவருடைய மனைவி ”என்ன நடந்தது என்று ஆர்வத்தோடு கேட்டார்கள். ”நான் ஒரு முட்டாள் மனிதன். அவனைக் கண்டவுடன் என் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. நான் செயலற்றுப் போனேன். அவனோடு எதுவும் பேச முடியவில்லை” என்று சொன்னார். நீங்கள் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். நீங்கள் விட்ட கண்ணீரை கொண்டு கர்த்தர் அவனில் செயல்படுவார்” என்று அவருடைய மனைவி சொன்னார்கள். வயது முதிர்ந்த சபை மூப்பரின் வார்த்தைகளும் கண்கலங்கிய அவரது தோற்றமும் கொல்லனுடைய இருதயத்தை அசைத்தது. அவன் தன்னுடைய வீட்டிற்குச் சென்று தன் மனைவியினிடத்தில் ”இன்று காலை விநோதமான காரியம் ஒன்று நடந்தது. நம் ஊர் சபை மூப்பர் அவரும் அவருடைய மனைவியும் நேற்று இரவு விடியற்காலை 3 மணிவரை எனக்காக ஜெபித்தார்களாம். இதை அவர் என்னிடத்தில் சொல்லும் போது அழுது விட்டார். அதற்கு மேல் அவரால் பேச முடியாமல் திரும்பிப் போய்விட்டார்., நான் இப்போதே அவருடைய வீட்டிற்குச் சென்று அவரைச் சந்திக்கப் போகிறேன்” என்று சொன்னான். கொல்லன் சபை மூப்பருடைய வீட்டிற்குச் சென்றான். அவருடன் அவனிடத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சொல்லி அவர் முன்பாக தன்னைத் தாழ்த்தி முழங்கால் படியிட்டான். தேவனிடத்தில் அவனுடைய பாவங்களை எல்லாம் அறிக்கை செய்தான். தேவன் அவனுடைய மனந்திரும்பிய இருதயத்தைக் கண்டார் (Repentant Heart). தேவனுடைய பிள்ளையாக மாறினான். ”அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவா 1:12) ”இயேசு” என்ற நாமத்தின் அர்த்தமே ”அவர் தம்முடைய ஜனங்களின் பாவங்களை நீக்கி (மன்னித்து) அவர்களை இரட்சிக்கிறவர்” (மத் 1:21) என்பதுதான். அழிந்து கொண்டிருக்கும் ஆத்துமாவைக் குறித்து இருதயத்தின் பாரத்தோடும், கண்ணீரோடும், நாம் ஜெபிக்கத் தவறுவோமானால் அவர்களுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. நம்முடைய மற்ற முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தான் பாவியாகிய ஒருவனின் பாவங்களைக் குறித்தும் நீதியைக் குறித்தும் உணர்த்துகிறவர் (யோவா 16:8). ஆகவே சொல்லப்படுகின்ற வார்த்தை மூலம் பரிசுத்த ஆவியானவர் அவனுடைய இருதயத்தில் செயல்பட்டு ஆயத்தப்படுத்த நாம் கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும். வார்த்தை செயல்பட ஆரம்பிக்கும் போது மனந்திரும்புதலுக்கு ஏதுவான தேவ துக்கம் ஏற்படும். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகில் ஊழியம் செய்த காலத்தில் பாவிகளின் மனந்திரும்புதலுக்காக பிதாவாகிய தேவனை நோக்கி அழுகையோடும் கண்ணீரோடும் ஜெபித்தார் என்று வேதத்தில் காண்கிறோம். சபைகளுக்காகவும், ஒவ்வொருவருடைய இரட்சிப்பிற்காகவும் அப்போஸ்தலனாகிய பவுல் கண்ணீரோடே ஜெபித்தார் என்று காண்கிறோம். ஆகவே பாவக்கட்டுகளால் சிக்கித் தவிக்கும் மக்களின் இரட்சிப்பிற்காக ”இரவும் பகலும் நதியளவு கண்ணீர் விடு (Let tear run down like a river day and night) ஓய்ந்திராதே” ( புல 2:18) என்று எரேமியா தீர்க்கதரிசி சொல்லியது போல நம்முடைய ஆத்தும ஆதாயப் பணியில் கண்ணீரோடு ஜெபிக்கக் கற்றுக் கொள்வோம். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல ”வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்” (அப் 20:19) என்று நாமும் சொல்லுவோம். ”பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியங்களை கைகூடி வரப்பண்ணுவார். அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்” (நெகே 2:20) என்று நெகேமியா சொன்னது போல நாமும் சொல்லுவோம்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]