CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

கிறிஸ்துவுக்குள் ஆயத்தம்

கிறிஸ்துவுக்குள் ஆயத்தம்

மோசே நாற்பது வயதானபோது தன் சகோதரர்களிடத்தில் போய் அவர்கள் சுமைசுமக்கிறதை கண்டான். அவன் ஒரு எகிப்தியன். எபிரெயனை அடிக்கிறதைக் கண்டு அந்த எகிப்தியனைக் கொன்றுவிட்டு பயத்தினால் ஓடிப்போனான் (அப் 7:24) அவன் தன்னுடைய தரிசனத்தை இழந்து சராசரி குடும்பஸ்தனாகவும், மேய்ப்பனாகவும் வாழ்ந்துவிடுவதில் திருப்தியடைந்து விட்டான். (யாத் 2:21) ஆனாலும் கர்த்தரோ தனது மனிதனை மாபெரும் பணிக்காக மவுனமாய் உருவாக்கிக்கொண்டிருந்தார்.

காலகட்ட சோதனை :

இது கிறிஸ்துவுக்குள்ளான பற்பல பருவநிலையைக் குறித்த வரைபடம் இங்கு தெரிகிறது. ஆண்டவருடைய தரிசனமும், வைராக்கியமும் இந்த காலக்கட்டத்தில் நமக்குள் தீவிரமாய் வளரும். இப்பருவத்தில் வரும் ஒரே சோதனை “ஏற்ற காலம்தான்”. உங்களுடைய தனிப்பட்ட வாழ்வில், உங்களுக்குண்டான கிறிஸ்துவுக்குள்ளான ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க அதற்குரிய காலமென்று ஒன்று இல்லை. ஆனால் அவரது ராஜ்யத்தில் கனிகள் தந்து, நாடுகளை அசைப்பதற்கு தேவன் குறித்த நேரமும் காலமும் ஒன்று உண்டு.

சாத்தானுடைய சகல வல்லமைகளையும் முறியடிக்கும் அபார சக்தி உங்களுக்குள் இன்றும் இருக்கிறது. ஆனாலும் தேவனுடைய நிகழ்ச்சி நிரலில் உங்களுக்கான காலம் குறிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அந்த நேரத்தை முன் கூட்டியே கொண்டு வரமுடியாது. ஆனால் அவருடைய திட்டத்திற்கு ஒத்துவராமல் அதைத்தள்ளிப்போடலாம். எப்படி ஒவ்வொரு மரங்களுக்கும் கனி தருகிற ஒரு பருவம் இருக்கிறதோ, அப்படியே ஒவ்வொரு ஊழியருக்கும் வல்லமையான ஊழியத்திற்கும் ஒரு காலம் உண்டு (சங் 1:3, பிர 3:1-11) ஒரு பிறந்த குழந்தைக்கும் வளர்ந்த பிள்ளைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. நீங்கள் அவருடைய பிள்ளைகளாய் மாறியபோதே புத்திர சுவிகார ஆவியை நீங்கள் பெற்றீர்கள். (ரோமர் 8:15-16) நீங்கள் இந்த தெய்வீக வாழ்வில் வளரும் போது புத்திரர் என்கிற முதிர்ச்சிக்கு வளருவீர்கள். (கலா 4:7-8)

கட்டுப்பாட்டின் சோதனை :

இந்த உருவாகும் காலகட்டத்தில், கர்த்தருடைய ஆவியானவர் உங்கள் ஐம்புலன்களையும் தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து, உங்களைக் கட்டுப்படுத்தி, உங்கள் மூலம் காட்டாற்றுப் பெருவெள்ளம்போல பாயத்துவங்குவார். இயேசு உங்களுக்குள் இருப்பது ஒன்று, அவரது முழுக்கட்டுப்பாட்டுக்குள் நீங்கள் வந்து விடுவது வேறொன்று. உங்கள் சுயவிருப்பங்களையும், திறன்களையும் வெறுத்து நாளுக்கு நாள் உங்களை அவர் கையில் ஒப்புக்கொடுப்பதை நீங்கள்தான் செய்யவேண்டும். உங்கள் சுய பெலனும், அடங்காத ஐம்புலன்களும்தான் அவரது ஜீவன் உங்களுக்குள் பெருகும்படி நீங்கள் சிறுகத்தான் வேண்டும். (யோவான் 3:30) சிலர் இதை உடைக்கப்படுதல் அல்லது சுயத்திற்காக மரித்தல் என்று சொல்லுவார்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் அவருடைய பூரண நிறைவோடு இருக்கிறீர்கள். ஆனாலும் நீங்கள் நினைத்தால் மாம்சத்திற்கும், உலகத்திற்கும் உரியவர்களாக வாழ முடியும். (1 கொரிந்தியர் 3:3-4)

மோசே இன்னும் 40 ஆண்டுகள் இத்தகைய நொறுக்கப்படும் அனுபவத்திற்குள் கடந்து சென்றான். தேவனுடைய தரிசனம் மோசேயின் உள்ளத்தில் தூவப்பட்டபொழுதோ அவசரப்பட்டு பணிக்களத்தில் குதிக்கப்பார்த்தான். அவனுடைய மாம்ச பெலனும், அறிவும் அவனை ஆளுகை செய்தது. அவன் மாம்சத்தில் நன்மை வாசமாயிருக்க முடியாது. (ரோமர் 7:18) என்று அறியாமல் தன்னுடைய சொந்த பெலனைப் பயன்படுத்தினான். அவன் அங்கும் பார்த்தான், அவன் ஒருவரும் இல்லையென்று அறிந்தான், சகோதரர்கள் தன்னை யார் என்று அறிந்து கொள்ளுவார்கள் என்று அவன் நினைத்தான்…… அவன் வெட்டினான், அவன் புதைத்தான். (யாத் 2:11-12, அப் 7:25) எல்லாமே அவன்தான். “தேவ பணியை, தேவ பலத்தில், தேவ நேரத்தில் செய்ய வேண்டும்” எனும் அரிய பாடத்தை அவன் இன்னும் கற்கவில்லை.

அவன் மாம்ச தைரியம் மாண்டுபோனது. அவன் பயந்து ஓடினான். (யாத் 2:12-14) அவன் என்றுமே மற்றவருடைய உரிமைக்குக் குரல் கொடுப்பவன். எத்திரோவின் குமாரத்திகளுக்கு மேய்ப்பர்களுக்கெதிராக உதவியதிலிருந்து இதைப்பார்க்கலாம். நம்முடைய இயற்கையான வைராக்கியத்திற்கும், வலிமைக்கும் ஆயுள் கொஞ்ச காலமே. ஆதலால் மோசே சீக்கிரத்தில் தனது தரிசனத்தை மறந்து மாமனார் வீட்டு மந்தையை மேய்ப்பதில் திருப்தி கண்டான். கர்த்தர் இக்காலங்களில் அவனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.

புறக்கணிப்பின் சோதனை :

இயேசு புறக்கணிக்கப்பட்டது போலவே, கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் வாழ்வும் ஆரம்ப காலத்தில், உங்கள் சொந்த ஜனங்களாலேயே புறக்கணிக்கப்படும். கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் என்ற வெளிச்சத்தில் வாழ்ந்து, அதைப் போதிக்கும் பொழுது மக்கள் உங்களை பெருமைக்காரன் என்று ஒதுக்கி வைப்பார்கள். உங்கள் போதனைகளைக்கூட “ஆசீர்வாத உபதேசம், செழிப்பின் உபதேசம், விசுவாச உபதேசம்”, என்று பரிகசிப்பார்கள். இது தான் மோசேக்கு நேரிட்டது. ஜனங்கள் அவனுடைய அழைப்பை தரிசனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தான். ஆனால் மறுநாளே அவன் சண்டைபண்ணிக்கொண்டிருந்த இரண்டு பேருக்கு எதிர்ப்பட்டு சமரசம் செய்ய முற்பட்ட பொழுது ஏமாற்றமடைந்தான். அப்பொழுது ஒருவன், அவனைப் பிடித்துத்தள்ளி, “எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் வைத்தவன் யார் என்றான். சொந்த மக்களின் புறக்கணிப்பு பார்வோனின் உக்கிரகோபம், மாமனாரின் வியாபாரத்தின் ஈர்ப்பு. என பல்வகை சூழ்நிலை அவனது வீரத்தையும், தரிசனத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக உரிந்து கொண்டது.

அன்பானவர்களே, கர்த்தருடைய காலம் வரும் வரை காத்திருக்க முடியாமல் அவசரப்படுகிறீர்களா? உங்கள் சொந்த அறிவையும், திறனையும் அதிகமாய் சார்ந்து கொண்டீர்களா? மற்றவரின் புறக்கணிப்பு உங்களை மனமடியச்செய்துவிட்டதா? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை. இந்த நிலையில் நீங்கள் இருக்கும் வரை உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் ஜீவனை பூரணமாய் வெளிப்பட முடியாது.

இயேசு தன்னை இந்த உலகத்திற்குக் காட்டுவதற்கு முப்பது ஆண்டுகள் காத்திருந்தார். தாமாய் அவர் ஒன்றையும் செய்யவில்லை. தன்னுடைய பிதாவையும் ஆவியானவரையும் மட்டுமே சார்ந்திருந்தார். (யோவான் 5:19) அவர் அதிகமாய் புறக்கணிக்கப்பட்டார். ஆனாலும் கண்ட தரிசனத்தில் பிடியாய் இருந்தார். இன்றும் அவர் உங்களுக்குள் வாழுகிறார். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். உங்களை ஆயத்தம் செய்யும் இக்காலங்களில் அவரே உங்களுக்குள் வாழட்டும்.

ஆண்டவர், இன்று உங்களைப் புறக்கணிக்கும்  அதே மனிதர்கள் முன்பு ஒரு நாள் உயர்த்துவார். (அப் 7:35) எகிப்தில் அடிமைப்பட்டுக்கிடந்த திரளான ஜனங்களை மோசே மீட்டது போல நீங்களும் அபார விசுவாசத்தோடு ஆயிரங்களை மீட்டெடுப்பீர்கள். அதுவரை இரண்டாந்தர வாழ்வுக்குள் சிக்கிவிடாதீர்கள். தேவ அழைப்பை விட்டு ஓடிவிடாதீர்கள். எழும்புங்கள் உங்கள் வேளை வருகிறது.

ஆண்டவரே,

ஏற்ற காலத்தில் நீர் என்னை உயர்த்தும்படிக்கு உமது பலத்த கைக்குள் அடங்கியிருக்கிறேன். மிகுந்த பலனுக்கேதுவான என்னுடைய தைரியத்தை நான் விட்டு விடமாட்டேன். நான் உம்முடைய சித்தத்தின்படி செய்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெறும்படி பொறுமை எனக்கு இருக்கிறது. எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால் உமக்கே நன்றி . 1பேதுரு 5:6, எபி 10:35-36