You can enable/disable right clicking from Theme Options and customize this message too.
logo

கொள்ளைக்காரன் பர்க்

கொள்ளைக்காரன் பர்க்

பர்க் பயங்கரக் கொள்ளைக்காரன். அவனின் துணிகரக் கொள்ளைகளுக்கு கணக்கில்லை. இருபது ஆண்டுகள் சிறையில் இருந்தவன். சிறைச்சாலை அதிகாரிகள் பயப்படும் முறையில் சபிப்பான்.

.

மூடிப் பிரசங்கியார் லூயிப் பட்டணத்தில் கூட்டங்கள் நடத்த அழைப்புப் பெற்றார். பட்டணத்திலுள்ள ஒரு பிரபல பத்திரிகை மூடியின் ஒவ்வொரு வார்த்தையையும் பிரசுரிப்பதாக விளம்பரம் செய்தது. எனவே மூடிப் பிரசங்கியார் தம் பிரசங்கங்களில் வேத வசனங்களையே மிகுதியாகத் தொகுத்துச் சொல்லத் தீர்மானித்தார்.

.

ஒவ்வொரு பிரசங்கத்தையும் கவர்ச்சிகரமான தலைப்புக்களுடன் கொட்டை எழுத்துக்களில் பத்திரிகை வெளியிட்டது. லூயி பட்டணத்துச் சிறையில் பர்க் அடைபட்டிருந்தான். அவன் அறைக்குப் போக காவலாளருக்கும்கூட பயம்தான். ஜெயில் அதிகாரியை வாயில் வந்தபடியெல்லாம் திட்டுவான்.

.

வழக்கமாக அவன் அறையில் நாள்தோறும் ஒரு தினப்பத்திரிகை போடப்படும். அன்று அப்பத்திரிகையில், “சிறை அதிபர் பிடிபட்டார்” என்று பெரிய எழுத்துக்களில் எழுதி இருக்கக்கண்டான். பர்க்கிற்கு ஒரே மிகிழ்ச்சி. ஆவலுடன் பரபரவென்று படிக்க ஆரம்பித்தான். அதுவோ அவன் நினைத்தபடி அந்தச் சிறை அதிபரைப் பற்றியதல்ல. அது மூடியின் பிரசங்கமாயிருந்தது.

.

பவுலும் சீலாவும் அடைபட்டிருந்த சிறையின் அதிபர் இயேசுவின் அன்பு விலையில் அகப்பட்ட விபரம் அதில் இருந்தது. பர்க் மிகவும் எரிச்சல் கொண்டான். செய்தித்தாளை எறிந்து விட்டான். அங்குமிங்கும் தன் அறைக்குள் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போல நடந்தான்.

.

நேரம் போகாததால் மீண்டும் அச்செய்தித்தாளை எடுத்தான். மீண்டும் எறிந்தான். நடந்தான். எடுத்தான், வீசினான், நடந்தான், எடுத்தான், நிம்மதியற்ற நிலையில் மிகுதியாய் இருந்த அக்கதையைப் படிக்க ஆரம்பித்தான். திடீரென்று அவன் மனதில் ஒரு வினோதமான உணர்ச்சி. அதை அவனால் புரிய முடியவில்லை. இருபது வருட கொள்ளைக்கார வாழ்க்கையிலும் சிறை வாழ்க்கையிலும் ஒருவித வெறுப்பும் சலிப்பும் தட்டி இருந்தது.

.

                “இரட்சிக்கப்பட்ட வாழ்க்கையா? அது என்ன? அதைத் தருபவர் ஒரு ஆண்டவரா? அப்படியானால் இந்த வாழ்க்கைக்குப் பதில் அதைப் பெற்று வாழ்ந்தால் என்ன?”

.

 நடுநிசி. தூக்கம் வரவில்லை. விரயமாக்கப்பட்ட வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. ஜெபித்ததே கிடையாது. ஜெபிக்கவும் தெரியாது. ஏதோ சொல்லிப்பார்த்தான். தினத்தாளில் எழுதியிருந்தபடி, “இயேசுகிறிஸ்து தன்னை மன்னிக்க விரும்புகிறார். தன் பாவத்திற்காக சிலுவையில் மரித்தார்” என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டான். பின்பு நம்பினான். உளறி உளறி ஜெபித்தான். அன்று இரவிலேயே இரட்சிப்பின் இன்பம் கண்டான். மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தான்.

.

காலையில் காவலாளன் வந்தான். இனிய முகத்துடன் “வணக்கம்” கூறினான் பர்க், காவலாளனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் கழித்து ஜெயில் அதிபர் வந்தார். இனிய வார்த்தைகளுடன் வரவேற்றான். இரவின் அனுபவத்தைச் சொன்னான். அதிபர்அதை நம்பவில்லை. பக்திப்பாசாங்கு பண்ணி ஓடிவிடத் திட்டமிடுவதாக நினைத்தார். காவலாளர்களைக் கவனமாக இருக்கும்படி கூறிவ்டுப் போய்விட்டார்.

.

பர்க்கோ கிறிஸ்துவின் அன்பில் நிலைபெற்றான். விசாரணை நடந்தது. அவன் மீதுள்ள குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை. அவன் விடுதலை பெற்றான். விடுதலை பெற்ற பர்க் பழைய வாழ்க்கையை வெறுத்தான். மீண்டும் அதற்குத் திரும்பாதிருக்க தீர்மானித்தான்.

.

லூயி பட்டணத்தில் அவன் ஒரு பயங்கரக் கைதியாகவே அறியப்பட்டிருந்தான். அவன் முகத்தோற்றம் இன்னும் பயங்கரமாகவே இருந்தது. வேலை கொடுக்க யாரும் ஆயத்தமாயில்லை. சோதனைகள் அதிகரித்தன, ஆயினும் இயேசுவைப் பலமாக பற்றிக் கொண்டான். “ஆண்டவரே, என் முகத்தோற்றத்தை மாற்றும்” என்று கூட ஜெபித்தான். “சில மாதம் கழித்து, நான் அவனை சிக்காக்கோ நகரில் சந்தித்த போது அவன் பயங்கரத் தோற்றம் முற்றிலும் மாறி இனிய தோற்றத்தோடு இருந்தான்” என்று மூடி எழுதியிருந்தார்.

.

ஒருநாள், “உடனடியாக நீதிமன்றம் வருக” என்று பழைய ஜெயிலதிபர் எழுதி இருந்தார். “ஏதோ ஒரு பழைய குற்றத்திற்காக விசாரிக்கப்படப் போகிறேன் இனி பொய் சொல்லமாட்டேன். உண்மையையே உரைப்பேன்” என்ற உறுதியோடு நீதிமன்றம் சென்றான்.

.

ஜெயில் அதிபர் அன்போடு பேசினார்.

.

“இவ்வளவு நாட்களாக எங்கே போயிருந்தாய் பர்க்”

.

“நியூயார்க் நகரில்”

.

”அங்கே என்ன செய்தாய்?”

.

“வேலைக்காகப் பிரயாசப்பட்டேன்”

.

“நீ அன்று  சொன்ன அனுபவத்தில் நிலைத்திருக்கிறாயா?”

.

“இயேசுவின் பலத்தில் நிலைத்திருக்கிறேன். பலத்த சோதனைகள் நேரிட்டன. ஆயினும் கடவுள் ஆச்சரியமாக என்னைத் தாங்கி வருகிறார்.” “பர்க், உன் அனுபவத்தை நான் முதலில் நம்பவில்லை. ஏமாற்றுகிறாய் என்றே நினைத்தேன். நியூயார்க் நகரில் ஆள் வைத்து உன்னை நிழல்போல் பின் தொடர்ந்து உன் செயல்களைக் கவனித்து வந்தேன்.” உண்மையுள்ள கிறிஸ்தவனாக நீ வாழ்வதைக் கண்டேன். எனக்கு ஓர் உதவி ஜெயிலதிபர் தேவை. நீ விரும்பினால் அந்த வேலைக்கு வரலாம்.

.

பர்க் கடவுளைத் துதித்தான். அதிபருக்கு நன்றி சொன்னான். வேலையை ஒப்புக் கொண்டான். பட்டணத்திலுள்ள அனைவர் பாராட்டையும் பெற்றான். ஆறு லட்சம் டொலர் பெறுமான வைரங்கள் பர்க்கின் பாதுகாப்பில் இருந்தன.

.

 “இந்தக் கொள்ளைக்காரப் பாவியில் கடவுள் செய்துள்ள மாற்றத்தை” எண்ணி எண்ணி அதே இடத்தில் பர்க் அநேகருக்கு ஆசிர்வாதமாக இருந்தான்.

.

“நீங்கள் கிறிஸ்துவின் நிருபமாய் இருக்கிறீர்கள்” (2 கொரி 3:3)