CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் விழிப்புடனிருத்தலும்

ஜெபமும் விழிப்புடனிருத்தலும்

டேவிட் பிரைனர்ட் (David Brainered) அவர்களுடைய பரிசைத் திருடிவிட வேண்டும் என்கிற தீர்மானத்தோடு மாயக்கார எதிரி அவரைத் தொடர்ந்து சென்றான். தன்னுடைய போர்க்கவசத்தை ஒருபோதும் விட்டுவிடக்கூடாதென்றும் படுத்து இளைப்பாறும்போதும் அதை அணிந்திருக்க வேண்டுமென்றும் அவருக்குத் தெரியும். அவருடைய கவர்ச்சிகரமான ஆடையின் அழகைக் கெடுத்த கறைகள், பளிச்சென்று பிரகாசிக்கின்ற கேடயத்தில் ஏற்பட்ட புள்ளிகள் ஆகியவைகள் நமக்குப் பார்க்க முடியாதவைகள்; ஆனால் அவருக்கோ அவைகள் பெரும் வருத்தத்துக்கும் மிகுந்த வாஞ்சைக்கும் மூல காரணமாயிருந்தன.

எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் கிறிஸ்தவ இராணுவ வீரனைப்பற்றிக் கொடுத்துள்ள வர்ணனை கச்சிதமாகவும் முழுமையாகவும் இருக்கிறது. உயர்ந்ததும் தாழ்ந்ததுமான காலம், ஒளியும் இருளுமான காலம், வெற்றியும் தோல்வியுமான காலம் ஆகிய அநேக ஏமாற்றங்களும் இரக்கங்களுமான காலங்கள் நிறைந்த போராட்டத்திலேயே அவன் எப்போதும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுகின்றான். எல்லாக் காலங்களிலும் அவன் ஜெபிக்க வேண்டும். போர்க்களத்துக்குச் செல்லும் அணிகலனுடன் எல்லா ஜெபத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் ஜெபத்தின் முழு அணிகலன்களையும் அவன் அணிந்திருக்க வேண்டும். கிறிஸ்தவ இராணுவ வீரன் வெற்றி பெறுவதற்காகப் போராட வேண்டுமென்றால் அவன் அதிகமாக ஜெபிக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே அவன் பிசாசையும் அவனுடைய பல்வேறு தீய அந்தரகத் தூதுவர்களையும் முறியடிக்க முடியும். “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும்…” (எபேசியர் 6;18) என்பது நமக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீகக் கட்டளையாகும். இது எல்லாக் காலங்களையும் சகலவிதமான வேண்டுதல்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுகிற கிறிஸ்தவ இராணுவ வீரர்கள் தங்கள் ஜெபத்துக்காக தனியே ஓர் இடத்தைத் தேர்ந்து கொண்டு, அங்கே சென்று ஜெபிக்கின்றனர். அவசரத் தேவைக்கும், சகலவிதமான வேண்டுதலுக்கும், அதன் மூலம் இறுதியில் அவனுடைய அனைத்து எதிரிகளையும் வெற்றி கொள்ளத்தக்கதான விசுவாசத்தின் போராட்டத்தைப் போராடுவதற்கும், “எந்தச் சமயத்தி்லும் சகலவிதமான” வேண்டுதலும் செய்ய வேண்டும் என்பது தெளிவான அறிக்கையாகும்.

“எந்த சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.”

“சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றி பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக.”

“நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி, எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்.” (எபேசியர் 6:18-20)

ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கை ஒரு போர் என்றும், தீவிரமான மனப்போராட்டம் என்றும், வாழ்க்கை முழுவதும் நடைபெறும் போட்டி என்றும் கூறப்படுகிறது. அது ஒரு போர். மேலும், எப்போதும் பொறியில் சிக்க வைக்கவும், ஏமாற்றவும், ஆத்துமாக்களைப் பாழடிக்கவும் வகைதேடுகிற கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் தொடுக்கப்படும் போராகும். வேதாகமம் மனிதர்களை அழைக்கிற வாழ்க்கை ஒரு சுற்றுலாப் பயணமல்ல. அது ஒரு பொழுது போக்குமல்ல. ஒரு இன்பமான பயணமுமல்ல. கடினமாக முயற்சி செய்து எதிரியைத் தோற்கடித்து, மேலான , நிலையான நிலையை அடைய, ஆவியின் முழுபெலத்தையும் பயன்படுத்தும்படி அது வற்புறுத்துகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையானது ஆரம்பம் முதல் முடிவு வரை ஓர் போர்தான். முதன் முறையாக உறைவாளை உருவியது முதல் போர்க்கவசத்தை சுழற்றும் வரை கிறிஸ்தவ வீரன் “….இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்  தீங்கநுபவி”….க்க(2 தீமோத்தேயு 2:3) வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறான்.

கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து அநேகர் எவ்வளவு தவறான எண்ணம் கொண்டிருக்கின்றனர்! சாதாரண ஆலய அங்கத்தினர் அந்தப் போராட்டத்தின் தன்மையைக் குறித்தும் தாங்கள் செய்ய வேண்டியதைக் குறித்தும் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கின்றனர்! ஒருவன் தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்ய ஆர்வம் கொண்டு பரலோகத்தை அடையவும் ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டுமெனில் அவன் எதிர்கொள்ள வேண்டிய எதிரியைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அவன் தொடர்ந்து விழிப்புடனிருந்து இடைவிடாமல் ஜெபித்து, தன்னை ஒப்புக்கொடுக்கவில்லையென்றால் உலகமும், மாம்சமும், பிசாசும் அவனுடைய முன்னேற்றத்தை எதிர்த்து அவனை வீழ்த்திவிடும் என்பதை அவன் உணர வேண்டும்.

கிறிஸ்தவ இராணுவ வீரன் மாம்சத்துக்கும் இரத்தத்துக்கும் எதிராகப் போரிடவில்லை. அவன் பொல்லாத ஆவிகளோடு போரிடுகிறான். வேதாகமம் கூறுவதுபோல “…..வானமண்டலங்களிலிருக்கின்ற பொல்லாத ஆவிகளோடு…” (எபேசியர் 6:12) போர் செய்கிறான். இவ்வுலகத்தின் வனாந்தர வழியாக விண்ணகரத்தின் நுழைவாயிலுக்குச் செல்ல வேண்டிய அவனுக்கு எதிராக எவ்வளவு பயங்கரமான சக்திகள் விடப்பட்டிருக்கின்றன! எனவே, கிறிஸ்தவ வாழ்க்கையின் தன்மையையும், ஆண்டவருடைய சீடர்கள் எதிர்கொள்ள வேண்டிய எதிரிகளின் தீங்கு விளைவிக்கிற எண்ணத்தையும், எண்ணிக்கையையும் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டிருந்த பவுல், “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்” (எபேசியர் 6:11) என்றும் “….எந்த சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியிலே ஜெபம்பண்ணி…”(எபேசியர் 6:18) என்றும் தெளிவாக அந்த வீரனை வற்புறுத்துகிறார். வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தவிர்க்கமுடியாத இந்த முக்கியமான அடிப்படை உண்மையை நாம் அனைவரும் தெரிந்து கொண்டால் இந்தத் தலைமுறையினர் ஞானமும் அறிவும் உள்ளவர்களாயிருப்பார்கள்.

இங்கு தான் இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒருவர் அதனுடைய குறைபாட்டைக் காண்கிறார். இராணுவ வீரனுக்குரிய அடிப்படை அம்சங்கள் அதில் கொஞ்சமாக இருக்கின்றன அல்லது கொஞ்சங்கூட இல்லாமலிருக்கின்றன. இராணுவ வாழ்க்கையைப் போல, ஒழுக்கம், சுயநலமற்ற தன்மை, கடுந்துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் நிலை. உறுதிப்பாடு ஆகியவைகள் யாவுமே தேவைப்படுகின்றன. ஆனாலும் கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதும் ஒரு யுத்தமாகும்.

பிசாசை ஏமாற்றிவிட்டு தன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்ள நோக்கமாயிருக்கிற கிறிஸ்தவ இராணுவ வீரனுக்கு பவுலுடைய வழிகாட்டுதல் எவ்வளவு முழுமையாக , கூர்மையாக பொருள் உள்ளதாக இருக்கின்றது! முதலாவது, அவன் எடுத்துக்கொண்ட வாழ்க்கையின் தன்மையைப்பற்றிய தெளிவான கருத்து அவனுக்கு இருக்க வேண்டும். பிறகு, தன்னுடைய ஆத்துமாவின் எதிரிகளின் சக்தி, திறமை, தீயநோக்கம் ஆகியவைப்பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். எதிரியின் குணத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருப்பதற்கும், அவைகளை மேற்கொள்வதற்கும் ஆயத்தம் தேவை என்பதை உணருவதற்கும் அப்போஸ்தலரின் திட்டமான முடிவைக் கேட்க தயாராயிருக்க வேண்டும்.

“கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.”

“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும் படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:10-11)

“ஆகையால் தீங்க நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும் படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.“(எபேசியர் 6:13)

இந்த ஆலோசனைகளெல்லாம் ஒரு உச்சகட்டத்தில் முடிகின்றன. அந்த உச்சகட்டமே ஜெபமாகும். கிறிஸ்துவின் ஜெபவீரன் இன்னும் எவ்வாறு பெரிய வீரனாக முடியும்? வலிமை வாய்ந்த இராணுவ வீரன் எவ்வாறு இன்னும் அதிகமாக வல்லமை வாய்ந்தவனாக முடியும்? வெற்றிவாகை சூட களமிறங்கும் வீரன் எவ்வாறு இன்னும் அதிக வெற்றியை ஈட்ட முடியும்? இந்த முடிவுக்கான பவுலுடைய தெளிவான அறிவுரைகள் இவை:

“எந்த சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடு சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.”(எபேசியர் 6:18)

ஜெபமும் மிகுதியான ஜெபமும் தேவனுடைய நல்ல போராட்டத்தைப் போராடும் மனிதர்களுக்கு நிச்சயமாக வெற்றி கொடுக்கின்றன. போராட்டத்தின் இரைச்சலுக்கும் சச்சரவுக்கும் மத்தியில் ஜெபம் வலிமையுள்ளதாகிறது.  எல்லாவற்றுக்கும் மேலாக பவுல், சிறப்பான சிலுவை வீரனாவார். அவருக்கு வாழ்க்கை ஒரு மலர்படுக்கையல்ல; அவருடைய வாழ்க்கை தீவிரமான மனப்போர் புரிவதாகவும், பல்வேறு எதிரிகளை நேருக்கு நேர் சந்திப்பதாகவும், உறங்காமல் விழிப்புணர்வோடும் தொய்வில்லாத முயற்சி செய்வதாகவும் இருந்தது. அதன்முடிவில் அவர் தம்முடைய இறுதி ஜெய கீதத்தைப் பாடுவதை நாம் கேட்கிறோம்:

“நல்ல போராட்டத்தைப் போராடினேன்…..” (2 தீமோத்தேயு 4:7)