[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.” (லூக்கா 21:36)
ஜெபம் என்பது வல்லமையான சொல் மாத்திரம் அல்ல, அது நமது வாழ்க்கை. ஒரு குழந்தை பிறந்தவுடனே சுவாசிப்பதற்காக அழுவதுபோல, மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் இயற்கையாகவே ஜெப வாஞ்சை எழும்பும். ஆனால் பலர் அந்த வாஞ்சையை தொடர்ந்து வளர்க்காததினாலே ஜெபவாழ்க்கையில் சோர்ந்துபோய்விடுகிறார்கள். ஆசை இருந்தும் அப்பியாசிக்க முடிவதில்லை. எதிலும் வளருவது நின்றுவிட்டால் பின்பு மெதுவாக அது தானே அழிய ஆரம்பிக்கும். அதுபோலவே ஆரம்பத்தில் அனலாய் இருந்தவர்கள் பின்பு அதை அறியாதவர்கள் போல வாழத் தொடங்கிவிடுகிறோம். இங்கே இயேசுவின் வாழ்க்கையில் நான்கு கட்டங்களையும், அதில் அவருடைய ஜெபமாதிரியையும் நாம் தியானிக்கலாம்.
அவர் குழந்தையாய் இருந்த போது, பன்னிரெண்டு வயதை அடைந்தபோது, முப்பது வயதை அடைந்தபோது, முப்பத்தி மூன்று வயதை அடைந்த போது என அவர் வளர அவர் ஜெபவாழ்வும் வளர்வதைப் பார்க்கலாம். நீங்களும் வாசியுங்கள் வளருங்கள்..
சுமக்கப்படுவதில் சுகம்:
கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி…. அவரை எருசலேமுக்குக் கொண்டு போனார்கள்.(லூக்கா 2:24)
இயேசு இப்பொழுது நாற்பது நாள் குழந்தை. மரியாளும் யோசேப்பும் இயேசுவை தங்கள் கைகளில் சுமந்து கொண்டும், மார்பில் சாய்த்துக் கொண்டும் தேவாலயத்திற்குப் போனார்கள். ஆம் இயேசுவே ஆனாலும் குழந்தையாய் இருந்தால் மற்றவர்கள்தானே சுமந்து கொண்டு போக வேண்டும். கிறிஸ்தவ வாழ்வில் மற்றவர்கள் நம்மைச் சுமக்கவே நம்மில் பலர் விரும்புகிறோம். மற்றவர்கள் நமக்காக ஜெபிப்பதையோ அல்லது வேறு ஒருவர் நமக்குப் பதில் பெற்றுத் தருவதையோ விரும்புகிறோம். தானாகவே தேவ பிரசன்னத்திற்குள் நுழைய முடியாமல் வேறு ஒருவருடைய துணை நமக்குத் தேவைப்பட்டால் அது குழந்தை அனுபவம்.
சிறுபிள்ளையாய் இருக்கும்பொழுது அடுத்தவர் ஜெபத்தைச் சார்ந்து இருப்பதில் தவறில்லை. பல வருட விசுவாசிகளாய் ஆனப் பிறகும் சொந்தக் காலில் நிற்க முடியாத சப்பாணிகளாய் இருந்தால் நம் தகப்பனின் உள்ளம் எவ்வளவு பாடுபடும். நம் கத்தோலிக்க நண்பர்கள் மரித்துப் போன சீஷர்களிடத்தில் “எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்று சொல்வதை தவறு என்று கூறுகின்ற நாம் உயிரோடிருக்கிற எல்லா ஊழியர்களிடத்திலும் “எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்று செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது ஏன்? ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பது வேறு, ஒருவரே மற்ற எல்லோருக்காகவும் ஜெபிப்பது வேறு.
“இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினால் ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” (யோவான் 16:24)
வளரும் விருப்பம்:
”பண்டிகை நாட்கள் முடிந்து திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு” எருசலேமிலே இருந்து விட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. (லூக்கா 2:43)
இப்பொழுது இயேசு வாலிபப் பருவத்தை அடைந்துவிட்டார். இயேசு தேவாலயத்திற்கு வந்துவிட்டுத் திரும்பி போகும்பொழுது உறவினர்களுடன் வருவதுபோல் காண்பித்து விட்டு, தேவாலயத்திலேயே இருந்துவிட்டார். கூட்டத்தில் பெற்றோரைத் தவறவிட்டதினாலே, என்ன செய்வது தேவாலயத்திலாவது இருப்போம் என்று இருக்கவில்லை. தான் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்கவேண்டும் என்று அறிந்திருந்தபடியால் அங்கு அமர்ந்து விட்டார்.
இன்று ஜெபிக்கவும், வேதம் வாசிக்கவும் பிறர் நம்மை வற்புறுத்த வேண்டியது உள்ளதா? அல்லது எழுப்புதல் கூட்டங்களுக்கோ, ஜெபக்கருத்தரங்குகளுக்கோ சென்று வந்தால் அதை தொடர்ந்து சில நாட்கள் ஜெபிப்பதும் பின்பு மறந்து விடுவதுமாய் இருக்கிறதா? அதுவும் குழந்தை அனுபவம்தான். நாம் குழந்தையாயிருப்பதை விட்டுப் பிள்ளையாய் வளர ஆரம்பித்தால் தானாகவே ஜெபிக்க வேண்டும் என்ற ஆவல் பெருகும். வேறு எதையும்விட தேவன் பேரில் அன்பும் தேவனோடு இருக்க வேண்டும் என்ற ஆவலும் அடக்க முடியாதபடி எழும்பும்.
அவர் பேசுவதை கேட்கவும், பின்பு நாம் பேசுவதும் வளர்ச்சியின்படி. அதுமாத்திரமல்ல, இயேசு முதலாவது அவர்கள் பேசுவதைக் கேட்கவும் (பின்பு) அவர்களை வினாவவும் கண்டார்கள்.(லூக்கா 2:46) தேவனிடத்தில் நாம் மாத்திரமே பேசுவது முதல் கட்ட அனுபவமே. ஆனால் அவர் பேசுவதை கேட்கவும், பின்பு நாம் பேசுவதும் வளர்ச்சியின் படி, இப்படிப்பட்ட அனுபவத்தைப் பெறத்தான் வேதத்தை நன்கு வாசிக்க வேண்டும். “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுவதற்கு பொறுமையாயும் இருக்கக்கடவீர்கள்.”(யாக் 1:19)
சிலர் ஜெபத்தை ஒரு வழிப்பாதை என்று நினைத்து, பள்ளியில் பாடம் ஒப்புவிப்பதுபோல ஒரு மணிநேரம் மளமளவென்று பேசிவிட்டு நாம் ஜெபித்துவிட்டோம் என்று திருப்தி அடைகிறார்கள். அது அப்படியல்ல, ஜெபம் என்பது இருவழிப்பாதை. தேவனிடத்தில் இருந்து கேட்டு. பின்பு தேவனுக்குத் தெரியப்படுத்துவதுதான் ஜெபம்.
“நீ தேவாலயத்திற்கு போகும் போது உன் நடையைக் காத்துக்கொள். மூடன் பலியிடவது போலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம்…. ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.”(பிர 5;1)
நாம் மற்ற எல்லாக் காரியத்தை விட ஜெபத்தில் மாதிரியாய் வாழ்ந்து காட்ட வேண்டும்.
மற்றவர்களுக்கு மாதிரி:
“அவர் ஒரு இடத்தில் ஜெபம் பண்ணி முடித்த பின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவனை நோக்கி; ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்கும் போதிக்க வேண்டும் என்றான்.” (லூக்கா 11:1)
இயேசு இப்பொழுது ஊழியத்திற்கு வந்துவிட்டார். ஏறக்குறைய முப்பது வயது. அவருடைய ஜெப வாழ்க்கையும் அடுத்த கட்டத்தை எட்டிப்பார்க்கிறது. அவர் தம்முடைய சீஷர்களை வற்புறுத்தலினாலே ஜெபவீரர்களாய் மாற்றவில்லை. தம்முடைய மாதிரியினாலே அவர்களுக்குள் ஜெப வாஞ்சையை ஏற்படுத்தினார். அவர் ஜெபிப்பதைப் பார்த்துவிட்டு அதேபோல் ஜெபிப்பதற்கு தங்களுக்கும் ஜெபிக்கச் சொல்லித்தர வேண்டும் என்று கேட்டார்கள். நாம் மற்ற எல்லாக் காரியத்தை விட ஜெபத்தில் மாதிரியாய் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் நம் குடும்பத்திற்கும், பிள்ளைகளுக்கும் , சபைக்கும், வருங்காலச் சந்ததிக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய உதவி.
எலியாவைப் பாருங்கள், நம்மைப் போல பாடுள்ள மனுஷன். ஆனால் யாக்கோபு புத்தக ஆக்கியோனிடத்தில் எலியாவின் வாழ்க்கைச் சரிதையைக் கூறச்சொன்னால் ரத்தினச்சுருக்கமாக. அவன் ஜெபம் பண்ணினான். மறுபடியம் ஜெபம் பண்ணினான் என்று சொல்கிறார். (யாக் 5:17-18) நம்முடைய கல்லறைகளில் (RIP) என்பது Rest in Prayer என்று அர்த்தம் கொள்ளுமானால் எவ்வளவு நல்லது.
அடுத்தவர் மேல் அதிகாரம்:
“பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத் தொடங்கி: என்னுடைய வீடு ஜெபவிடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.” (லூக்கா 19:45-46)
இப்பொழுது இயேசு தன்னுடைய ஊழியத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கிறார். இது கல்வாரிக்குச் செல்லும் சில நாட்களுக்கு முன் நடந்த காட்சி. இயேசுவுக்கு இப்பொழுது ஏறக்குறைய முப்பத்துமூன்று வயது.
இன்று நம்மில் பலர் தங்கள் குடும்பத்தினரையோ அல்லது பிள்ளைகளையோ ஜெபிக்கச் சொன்னால் அவர்கள் சொல்லுக்கு அத்தனை மதிப்புக் கிடைப்பது இல்லை. அவர்கள் கட்டளையிடுகிறார்கள். ஆனால் அதில் அதிகாரம் இல்லை. சத்தம் உயர்கிறது. ஆனால் சத்து இல்லை. இங்கு இயேசு தேவாலயத்தை சுத்தப்படுத்தினபொழுது பிரதான ஆசாரியர்கள் கூட அவரை தடுக்க முடியவில்லை. இப்படிச் செய்ய உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்று தான் கேட்க முடிந்தது. அந்த அதிகாரம் எப்படி வந்தது? அவர் ஜெபத்தில் தன்னை மாதிரியாக்கி கொண்டதினாலே தேவனுடைய ஆலயத்தை சுத்தப்படுத்தும் அதிகாரம் அவருக்கு வந்தது. புகைந்து கொண்டிருந்த பக்தி வைராக்கியம் அவரை பட்சித்தது. மற்றவர்களைப் பார்த்து ஜெபிக்கச் சொல்லும் ஜெபத்தினால் உண்டாகும் ஆசீர்வாதங்களைப்பற்றி பேசுவதும் மிகவும் இலகுவான காரியம் ஆனால் அதை செயல் வடிவில் கொண்டுவரும் பொழுதுதான். வல்லமை வெளிப்படுகிறது. ஆகவே நாம் வளர நமது ஜெபமும் வளரட்டும். மாதிரியாய் மாறி மற்றவர்களையும் ஜெபிக்கச்சொல்லி ஜெபப் புரட்சியை ஏற்படுத்துவோம். கர்த்தர் தமது நிறைவான ஜெப அபிஷேகத்தால் உங்களை நிறைப்பாராக.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]