CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

துக்கத்தை தூக்கியெறியுங்கள்

துக்கத்தை தூக்கியெறியுங்கள்

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார். (சங்கீதம் 37:4)

கவலை ஒரு கலையா?

மனிதர்களை மரணம் தேடி வருவதில்லை, கவலைப்படுவதினால் இவர்களே தேடிபோய் தங்களை தாங்களே அழித்துக்கொள்கிறார்கள் என்றார். ஒரு பிரபல மனநல மருத்துவர். தேவன் தங்களுக்கு வைத்துள்ள சந்தோஷத்தை அனுபவியாமல், தேவையில்லாத மனக்குழப்பத்தால் தங்கள் ஆயுளை குறைத்து கொள்வோர் பலர்.

கிறிஸ்தவர்களால் அதிகம் வாசிக்கப்பட்டும், பலருக்கு மனப்பாடமாய் தெரிந்திருந்தும், ஒருமுறைகூட கீழ்ப்படியாத வசனம் “கவலைப்படாதிருங்கள்” என்பதாகத்தான் இருக்கும். இயேசு இந்த வசனத்தை ஆலோசனையாக சொல்லாமல் கட்டளையாக சொல்லுகிறார். எனவே நாம் கவலைப்படும்போது கட்டளையை மீறுகிறோம், அதாவது பாவம் செய்கிறோம். ஆம்! கவலைப்படுவது பாவம்.

சிலர் நேரம் ஒதுக்கி கவலைப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் கட்டாயம் கவலைப்பட்டே ஆக வேண்டும் என்பதுபோலவும், கவலை என்பது ஒரு கலை, அதில் கைத்தேர்ந்தவர்களாக வேண்டுமென்பதுபோலவும் சிலர் அதில் பயிற்சி எடுக்கிறார்கள். கவலைப்படாமல் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் அக்கரையில்லாதவர்கள் என மற்றவர்கள் நினைத்து விடுவார்களோ என பயப்படுகிறார்கள்.

கவலைப்படாமல் வாழ முடியுமா? என்பதுதான் பலர் என்னிடம் கேட்கும் கேள்வி. கவலையோடு வாழ்வது வேறு, கவனத்தோடு வாழ்வது என்பது வேறு. திகைப்பது என்பது வேறு, திட்டமிடுவது என்பது வேறு.

ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்” (மத் 6:34) நாளைய தினத்தைக் குறித்து கவனத்தோடு வாழ்வதோ, திட்டமிடுவதோ கூடாது என்று இயேசு சொல்லவில்லை.

கவலையோடு வாழ்வது வேறு

கவனத்தோடு வாழ்வது என்பது வேறு

திகைப்பது என்பது வேறு

திட்டமிடுவது என்பது வேறு.

ஒரு பணக்கார அம்மையாரிடம் ஒருவர் “அம்மா உங்களுக்குத்தான் எல்லாம் சௌகரியமும் இருக்கிறதே பின்பு உங்களுக்கு என்ன கவலை” என்று கேட்டாராம். அதற்கு அந்த அம்மா “கவலைப்படுவதற்கு ஒன்றுமே இல்லையே என்பதுதான் என் கவலை” என்கிறார்களாம். இப்படி கவலையோடு கலந்துவிட்டார்கள், ஜெப வாழ்க்கையில் முன்னேறிபோக முடியாது என்பதை சுட்டிக்காட்டவே இந்த அத்தியாயம்.

 ஜெபமும் கவலையும்

 பலருக்கு ஜெபம் என்றாலே சோகம் குடிகொண்ட முகமும், கண்ணீர் நிறைந்த கண்களும், கவலை பொங்கும் இருதயமும் தான் நினைவுக்கு வருகிறது. துக்கம் வந்த பின்பு தான் சிலர் ஜெபிக்கவே செய்கிறார்கள். ஆனால் வல்லமையான ஜெப வாழ்க்கை கண்ணீரில் மட்டுமல்ல களிப்பிலும் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஜெபம் என்பது ஒரு பரவசமான அனுபவம். எப்பொழுதும் நம்மால் அதிக நேரம் ஜெபிக்க முடிவதில்லை. அப்படி ஜெபிக்கின்றபொழுதும் நம்மைக்குறித்தே நாம் அதிகம் நினைக்கிறபடியால், தேவனுடைய வல்லமையை அனுபவிக்க முடிகிறதில்லை. அதனால்தான் “மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன்வாருங்கள்.” (சங் 100:2) என்று வேதம் அழைக்கிறது.

கெத்செமனே தோட்டத்தில் சீஷர்களால் ஏன் வல்லமையாய் ஜெபிக்க முடியவில்லை. ஏன் அவர்கள் தூங்கினார்கள் தெரியுமா? லூக்கா சொல்வதை கேளுங்கள். “அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக்கண்டு” (லூக்கா 22:45)

களிகூருதல் கர்த்தருக்கு பிரிமானது

 “உம்மை தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக” என்று சங்கீதக்காரன் ஜெபிக்கிறான்.(சங் 40:16)

“என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்…..”(ஏசா 56;7) என்பதே ஆண்டவரின் வாக்கு. நாம் அழுதால்தான் அவர் மனமிரங்குவார் என்று நினைப்பதால்தான் ஜெபத்தில் மகிழ்ச்சியில்லாமல் போகிறது. நம்முடைய ஜெபத்திற்கு பதில் பெறுவதற்கு மனமகிழ்ச்சி ஒரு வழி என்று வேதம் சொல்லுகிறது.

“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்”(சங் 37:4)

“கர்த்தாவே உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூறுகிறார்! அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்கு தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர்” (சங் 21:1-2)

களிகூருதல் பெரிய காரியங்களைச் செய்யும். சிலர் தேவன் அற்புதத்தை செய்தபிறகு களிகூறலாம் என்று காத்திருக்கிறார்கள். ஆனால் தேவனோ எப்போது இவர்கள் களிகூருகிறார்களோ அப்பொழுதே அற்புதத்தை செய்துவிடலாமே என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார். நாம் சந்தோஷப்படும்பொழுதும், களிகூரும்பொழுதும் நம்முடைய விசுவாசத்தின் அளவு அதிகரிக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

“தேசமே பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.”(யோவேல் 2:21)

இயேசுவும் களிகூர்ந்தார்

 நமக்கு இயேசு சிரித்ததுபோல் கற்பனைசெய்து பார்க்கவே முடியவில்லை. இயேசுவை புகைப்படங்களில் பல கோணங்களில் பார்க்கும் நீங்கள் எங்காவது இயேசு சிரிப்பதுபோல் பார்த்ததுண்டா? அது மிக அரிது. சிறு பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்கும் முதல் வசனம் “இயேசு கண்ணீர் விட்டார்” என்பதுதான். குழந்தைகளுக்கு இயேசுவை தவறான முறையிலேயே அறிமுகப்படுத்துகிறோம்.

இயேசு இரத்தம் வியர்வையாகும்வரை வியாகுலப்பட்டு ஜெபித்தார். “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணி்ரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து…….”(எபிரெயர் 5:7) என்ற வசனத்தின்படி அவர் கண்ணீர்விட்டு ஜெபித்தார் என்பது மறக்க முடியாது. ஆனால் இயேசுவின் இன்னொரு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார் என்றும்” (எபி 1:9)  என்று எழுதப்பட்டுள்ளது இயேசுவை குறித்து வசனம். இயேசுவை தேவன் ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணியிருந்தார். அதனால்தான் அவர் சிலுவையை சகித்தும் கூட. “தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச்சகித்து” (எபி 12:2) என்று எழுதப்பட்டுள்ளது.

இயேசு கெத்செமனேயில் கண்ணீர் விட்டு

ஜெபித்ததைக்குறித்து 100 பிரசங்கங்கள்

கேட்கும் நாம், இயேசு களிகூர்ந்து ஜெபித்ததை

குறித்து 10 பிரசங்கங்கள் கூட

கேட்பதில்லையே ஏன்?

 இயேசு கெத்செமனேயில் கண்ணீர்விட்டு ஜெபித்ததை குறித்து 100 பிரசங்கங்கள் கேட்கும் நாம், இயேசு களிகூர்ந்து ஜெபித்ததைக் குறித்து 10 பிரசங்கங்கள் கூட கேட்பதில்லையே ஏன்? என்பது தான் என் ஆதங்கம். இயேசுவால் ஊழியத்துக்கு அனுப்பப்பட்ட எழுபதுபேரும் வெற்றியின் அறிக்கையோடு திரும்பி வந்தார்கள். அதற்கு நன்றி சொல்லி இயேசு ஜெபிக்கும் பொழுது “அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து” (லுக்கா 10:21) என்று எழுதப்பட்டுள்ளது. களிகூர்ந்து என்று எழுதப்பட்டுள்ளதை (கூத்தாடி, குதித்து) என்றும் மொழி பெயர்க்கலாம்.

கண்ணீர்விட்டு ஜெபிப்பதே தவறு என்று நான் சொல்லவில்லை. ஜெபிக்கும் பொழுதெல்லாம் கண்ணீர்விட வேண்டியதில்லை என்று சொல்கிறேன். “நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமூகத்தில் களிகூர்ந்தேன்” (நீதி 8:30)

 இயேசு ஜெபத்தை குறித்து சொல்லும்பொழுது அது நம் சந்தோஷம் நிறைவாவதற்கு என்றுதான் சொல்கிறார். “கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” (யோவான் 16:24)