[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்” (லூக் 13:10,11)
தேவாலயத்திலிருந்த அந்த ஸ்திரீயை நோக்கிப் பாருங்கள். உலகத்தாருடைய பார்வையிலே, அவள் ஒரு கூனி. முதுகு வளைந்திருந்தது. பூமியையே அவள் பார்த்து நடந்தாள். ஆனால் இயேசு கிறிஸ்து, அவளுக்குள்ளே பெலவீனப்படுத்தும் ஒரு ஆவி, இருந்ததைக் கண்டார். சாத்தான் பதினெட்டு வருஷமாய், ஒரு பெலவீனத்தால் அவளை கட்டி வைத்திருந்ததைக் கண்டார்.
மட்டுமல்ல, தன்னுடைய சிநேகிதனாகிய ஆபிரகாமின் குமாரத்தி என்று கண்டார். விடுதலையாக்கப்பட வேண்டியவள் என்று கண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தப் பெலவீனத்திலே சோர்ந்துபோகாமல், மற்றவர்களுடைய ஏளன பேச்சுக்களையும், கேலிகளையும், பொருட்படுத்தாமல், விடாமுயற்சியோடும், நம்பிக்கையோடும், ஆலயத்துக்கு வந்திருக்கிறதைக் கண்டார்.
“தேவாலயம்” என்பது, தேவ பிரசன்னத்தால் நிரம்பியிருக்கிற இடம். கர்த்தர் தம்முடைய கிருபையோடும், வல்லமையோடும், வரங்களோடும் அங்கே இறங்கி வருகிறார். ஏசாயா தேவாலயத்துக்குச் சென்ற போது, கர்த்தருடைய வஸ்திரத்தொங்கலால், தேவாலயம் நிறைந்திருக்கிறதைக் கண்டார். (ஏசா 6:1) தேவாலயத்திலே, நாம் தேவனை சந்திக்க வருகிறோம். நம்மையும், நம்முடைய தேவைகளையும் சந்திக்க வல்லவரான கர்த்தர், அங்கு வருகிறார். தேவாலயம், விசுவாசிகள், தேவ ஊழியக்காரர்கள் கூடி கர்த்தரை ஆராதிக்கிற ஒரு இடம். ஆகவே தாவீது சொல்லுகிறார், “கரத்தருடைய ஆலத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.”(சங் 122:1)
ஒருவேளை, பதினெட்டு வருடமாய் கூனியாயிருந்த ஸ்திரீ, சலிப்படைந்து, “வாரந்தோறும் நான் கர்த்தருடைய ஆலத்துக்குப் போய், என்னத்தைக் கண்டேன். எனக்கு சுகம் தராத கர்த்தரும் வேண்டாம், அவருடைய வேதமும் வேண்டாம்” என்று சலிப்போடு வீட்டிலே இருந்திருப்பாளானால், அவளுக்கு அன்று அற்புதம் கிடைத்திருக்காது. ஆனால் அவள், தன் முயற்சியை கைவிடவில்லை. விசுவாசத்திலே தளர்ந்துவிடவில்லை. கிறிஸ்துவோ, அவளை அன்போடு கண்டது மட்டுமல்ல, அவளை தன்னிடத்தில் அழைத்து, அவள்மேல் தமது கைகளை வைத்தார்.(லூக் 13:12,13)
உடனே அவள் நிமிர்ந்தாள். தேவனை மகிமைப்படுத்தினாள். ஆக நீண்ட காலம் என்று அற்புதம் நடக்கவில்லையே என்று, நீங்கள் சோர்ந்துபோக வேண்டாம். பொதுவாக, விஞ்ஞானிகள் சோர்ந்து போயிருந்திருந்தால், பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை, கண்டு பிடித்திருக்கமாட்டார்கள். மின்சார பல்புகளை கண்டுபிடித்த, தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரக்கணக்கான முறை, பல்பிலே பல்வேறு இழைகளை பொருத்தி, முயற்சி செய்து கொண்டேயிருந்தார். முடிவிலே டங்ஸ்டன் இழையே பொருத்தமானது என்று கண்பிடித்தார். அதன் விளைவாக, இன்றைக்கு நாம், இருளை பகலாக்கும்படி, மின்சார பல்புகளை உபயோகப்படுத்துகிறோம்.
அவர் சொன்னார், “முயற்சியை கைவிடாதிருங்கள். 999 முறை நீங்கள் தோற்றுப் போயிருந்திருக்கலாம். ஆனால் அடுத்த முறை நீங்கள் ஜெயிப்பீர்கள். எந்தமுறை ஜெயிப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. ஆகவே வெற்றி பெறும்வரை முயற்சித்துக் கொண்டேயிருங்கள்.” இது ஆவிக்குரிய ஜீவியத்திலும் உண்மையானது.
நினைவிற்கு :- “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள். அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” (யாக் 4:7,8)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]