CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

யாரைக் காப்பாற்றுவேன்!!!

யாரைக் காப்பாற்றுவேன்!!!

ஞாயிறு காலை ஆராதனை வேளை. பாடல்கள் முடிந்ததும் வயது முதிர்ந்த பாஸ்டர் தன் இருக்கையை விட்டு மெதுவாக எழும்பி மெள்ள நடந்து பிரசங்க பீடத்தை அடைந்தார். அன்று தேவ செய்தி அளிக்க வந்திருப்பவரைக் குறித்து மிகச் சுருக்கமாக சபையாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். “தேவ செய்தி அளிக்க வந்திருப்பவர் என்னுடைய இளமைக் காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்” என்று மாத்திரம் சொல்லி விட்டு இறங்கிவிட்டார். நடுத்தர வயதைத் தாண்டிய செய்தியாளர் பிரசங்கபீடத்தில் ஏறினார். பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

.

 “ஒரு தகப்பனார், அவருடைய மகன், மகனுடைய நண்பன் மூவரும் ஒருநாள் பசிபிக் கடலில் படகில் உல்லாசப் பயணம் செய்தனர். நண்பர்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. கரையை ஒட்டியுள்ள பகுதியில் தான் பயணம் செய்து கொண்டு இருந்தனர். திடீரென்று ஏற்பட்ட பெருங்காற்று காரணமாக கடல் கொந்தளித்து படகைக் கட்டுப்படுத்த முடியாத அளவு மிக்பெரிய அலைகள் தொடர்ந்து தாக்கின. கடலில் படகோட்டுவதில் அந்தத் தகப்பனார் கைதேந்தவர்தான். ஆனால் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. எழுந்து வந்த பேரலை படகை அடித்துத் தாக்கியதில் படகு கவிழ்ந்தது. தகப்பனாரின் கண் முன்பாகவே அவரது மகனும் மகனின் நண்பனும் தூக்கி எறியப்பட்டு கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். கடும்புயலின் மத்தியிலும், கவிழ்ந்த படகை சிரமத்துடன் புரட்டி அவர்களை காப்பாற்றும் பொருட்டு கயிற்றின் ஒரு முனையை யாரை நோக்கி வீசுவது என்ற எண்ணம் அவருக்குப் பளிச்சென்று ஏற்பட்டது. அதுவும் நொடிப்பொழுதில் அதைத் தீர்மானிக்கும் வேதனையான நெருக்கத்திலிருந்தார். தாமதித்தால் இருவரையும் இழக்க நேரிடும். “என்னுடைய மகன் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவன். அவனுடைய நண்பன் அப்படியல்ல”. வேதனை நிறைந்த முடிவு எடுத்தார். இனியும் தாமதிக்க முடியாது. “என் மகனே உன்னை நான் நேசிக்கிறேன்” (I love you my son) என்று உரத்த குரலில் கத்திக் கொண்டே அவனுடைய நண்பனை நோக்கி மீட்புக் கயிறை வீசினார். அவன் அதைப் பற்றிக் கொண்டான். கவிழ்ந்த படகுக்கு நேராக வெகு சிரமத்தோடு அவனை இழுத்து படகண்டை கொண்டு வந்து படகைப் பற்றிக் கொள்ள வைத்தார். அதற்குள்ளாக தத்தளித்துக் கொண்டிருந்த அவருடைய மகன் பொங்கி எழுந்த கடலில் அமிழ்ந்து மறைந்தான். அவனுடைய சரீரத்தைக் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. மகனின் நண்பன் அந்தத் தகப்பனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

.

ஆலயத்தின் முன்வரிசையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் ஆர்வத்தோடு நிமிர்ந்து உட்கார்ந்தனர். அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்று உன்னிப்போடு உற்று நோக்கினார்கள்.

.

“மரணத்திற்குப் பின்னாக நித்திய வாழ்வில் தன்னுடைய மகன் இயேசு கிறிஸ்துவோடு இருப்பான் என்ற நிச்சயம் அந்தத் தகப்பனாருக்கு இருந்தது. ஆனால் அவனுடைய நண்பன் அப்படிப்பட்ட சிலாக்கியம் இல்லை என்பதை எண்ணிப் பார்ப்பதைக் கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகவே தன்னுடைய மகனைத் தியாகம் செய்யத் தீர்மானித்தார். அந்த தகப்பனுடைய அன்பை எண்ணிப் பாருங்கள். தேவனுடைய மகா பெரிய அன்பின் பிரதிபலிப்பு தான் அந்தத் தகப்பனுடைய அன்பு. ஒருவருக்காக மாத்திரமல்ல முழுமனுக்குலத்திற்காகவும் தம்முடைய ஒரே பேறான குமாரனை கிருபாதார பலியாக ஒப்புக் கொடுத்த பரம தகப்பனாகிய தேவனுடைய அன்பு எத்தனை பெரியது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவா 3:16) என்று சொல்லி முடித்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். ஆலயம் முழுவதும் முழு அமைதி நிலவியது.

.

 ஆராதனை முடித்து செய்தியாளர் வெளியே வந்த மாத்திரத்தில் ஆலயத்தின் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த இரண்டு இளைஞர்களும் அவசரமாக அவரிடத்தில் வந்தனர். “ஐயா, நீங்கள் சொன்ன கதை இருதயத்தைத் தொடுவதாக அமைந்தது” என்று சொல்லி ஒரு இளைஞன் மிகுந்த சாந்தத்தோடு சொன்னான். அவர்களைப் பார்த்து அந்தச் செய்தியாளர் புன் முறுவல் செய்தார். ஏனென்றால் அது கதையல்ல உண்மைச் சம்பவமல்லவா? அந்த வாலிபன் “ஆனால் ஒரு தகப்பன் தன் மகன் கிறிஸ்தவன் என்ற காரணத்திற்காக அவனைக் காப்பாற்றாமல் கிறிஸ்தவன் கிறிஸ்தவன் அல்லாத அவனுடைய நண்பன் அவன் கிறிஸ்தவன் ஆகிவிடுவான் என்று நம்பி காப்பாற்றியது நடைமுறை உண்மையாகத் தோன்றவில்லை (Not realistic)” என்று தன்னுடைய கருத்தை சொன்னான். “நல்லது, நீ சரியான ஒரு கேள்வியைத் தான் கேட்டிருக்கிறாய்” என்றார் செய்தியாளர். தன் கையில் வைத்திருந்த பைபிளை சிறிது நேரம் உற்று நோக்கினார். ஒரு நிறைவோடு புன்முறுவல் செய்துகொண்டு அந்த இளைஞனைப் பார்த்தார். “நடைமுறை உண்மையாக இல்லை என்று நீ நிச்சயமாக நினைக்கிறாயா? என்று கேட்டார். இளைஞன் பதில் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான். செய்தியாளரும் பேசவில்லை. சிறிது நேரம் அமைதி. “நான் தான் அந்த மகனின் நண்பன். உங்களுடைய பாஸ்டர் தான் அந்தத் தகப்பன்” என்றார். இளைஞர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தவர்களாய் மெய்மறந்த நிலையில் நின்றனர்.