[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்த ஆவியின் பெலத்தோடும், உதவியோடும், தேவனுடைய சித்தத்தின்படியும் அவர் வாக்களித்திருப்பதின்படியோ அல்லது அவருடைய வார்த்தையின்படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும்.
பரிசுத்த ஆவியானவரின் உதவி இல்லாமலிருக்குமானால் நாம் பலவீனராகவே இருப்போம். வேறு எந்த வகையிலும் தேவனைக்குறித்தோ கிறிஸ்துவைக்குறித்தோ அல்லது அவரை நேசிப்பவர்களுக்கு அவர் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களைக் குறித்தோ நாம் எண்ணிப்பார்க்கவே முடியாது. ஆகவே தான் துன்மார்க்கரைக்குறித்து சங்கீதக்காரன் சொல்லும்போது “துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே” (சங் 10:4)
துன்மார்க்கன், தேவனும் தன்னைப்போன்ற சிந்தையுள்ள ஒருவர்தான் என்று நினைக்கிறான். ஜலப்பிரளயத்திற்கு முன்பாக தேவன் பூமியை நோக்கிப்பார்த்தார். “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு” (ஆதி 6:5) என பார்க்கிறோம். ஜலப்பிரளயத்திற்குபிறகு நோவா தேவனுக்கு பலி செலுத்தினான். “சுகந்தவாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை” (ஆதி 8:21) என்று தேவன் சொன்னதை வாசிக்கிறோம்.
நமது பெலவீனத்தில் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்யாவிட்டால் நாம் யாரிடத்தில் முறையாக ஜெபிக்க வேண்டும், யார் மூலமாக ஜெபிக்க வேண்டும்; என்ன காரியங்களுக்காக ஜெபிக்க வேண்டும் எப்படி தேவனிடத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பன போன்றவற்றில் நமக்கு அறிவில்லாது போய்விடும் பரிசுத்த ஆவியானவர் தான் நமக்கு காரியங்களை வெளிப்படுத்தித் தருகிறவர். அவரே நமக்கு அறிவையும் தருகிறவர். ஆகவே தான் இயேசுகிறிஸ்து தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை உங்களுக்கு அனுப்புவேன் என்று வாக்களித்துள்ளார். “அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்” (யோவான் 16:14) சுருக்கமாகச் சொன்னால்: “நீ இயல்பாகவே என்னுடைய காரியங்களைக் குறித்து அறிந்துகொள்ளும் விஷயத்தில் அறியாமையிலும் இருளிலும் இருக்கிறாய். நீ எந்தவகையில் முயற்சித்துப்பார்த்தாலும் உன்னுடைய அறியாமை தொடர்ந்து இருக்கும். உன்னுடைய இருதயம் ஒரு திரைபோட்டு மூடப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மட்டுமே திரையை நீக்கி ஆவிக்குரிய அறிவை உனக்குத்தர முடியும்” என்று சொல்வதுபோலிருக்கிறது.
சரியான ஜெபம் வெளிப்படையாக வெளிப்படுத்துகிற தன்மையிலும் உள்ளான நோக்கத்திலும் சரியாக இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தைக் கொண்டு ஆத்துமா உணர்ந்து ஜெபிப்பதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஜெபம் வீணானதாகவும் அருவருப்பானதுமாகத் தள்ளப்பட்டுவிடும். ஏனென்றால் இருதயத்தின் நோக்கமும் நாவின் அறிக்கையும் இணைந்து வரவேண்டும். அப்படியானால் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் நம்முடைய பலவீனத்தில் உதவி செய்ய முடியும். தாவீது இந்தக் காரியத்தை நன்கு அறிந்திருந்தான். ஆகவேதான் “ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்” (சங் 51:15) என்று கூறுகிறான். தீர்க்கதரிசியாகிய தாவீது தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தான். ஆகவேதான் தேவனை ஆராதிக்கும்படிச் செல்லும்போது தன்னுடைய இயலாமையை அறிக்கை செய்து அவ்வாறு ஜெபிக்கிறான். பரிசுத்த ஆவியானவரின் உதவி இல்லாமல் சரியாக ஒருவார்த்தை கூட பேசமுடியாது என்பதை உணர்ந்திருந்தான். பவுலும் இதே கருத்தை “அந்தப்படியே ஆவியானவரும் நமது பெலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டிய தின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோமர் 8:26) என்று கூறுகிறார்.
ஜெபம்:
தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின், ஆவியின் ஆசீர்வாதங்களுக்காய் நன்றி செலுத்துகிறேன். ஏனென்றால் உம்முடைய வார்த்தையைக்கொண்டு உம்மிலே உள்ள அநேக ஆழமான காரியங்களை அறிந்து கொண்டேன். உம்முடைய ஆவியின் மூலமாக அவற்றை என்னுடைய வாழ்க்கையில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும் மற்றவர்களோடு உரையாடும்போது அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் விளங்கிக் கொண்டேன். என்னுடைய பலவீனத்தையும் என்னுடைய இயலாமையையும் நான் உணர்ந்து கொள்ளும்போது அவற்றிலிருந்து விடுதலையளிக்க வல்லமையுள்ள பரிசுத்த ஆவியானவரையே நாடுகிறேன். என்னுடைய கஷ்ட நேரங்களிலும் பலவீன நேரங்களிலும் பரிசுத்த ஆவியானவர் என்னோடிருக்கிறார் என்பதை உணர்ந்து நான் நன்றி செலுத்துகிறேன். தொடர்ந்து என்னை நீதியின் பாதையிலேயே நடத்தும். இயேசுவின் நாமத்தினாலே ஆமென்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]