இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அவருடைய பாதங்கள் எங்கெல்லாம் பட்டதோ அந்த இடத்திலுள்ள ஜனங்கள் நன்மை பெற்றார்கள்! பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்! அவருடைய வல்லமையுள்ள வார்த்தைகள் ஜனங்களைச் சந்தித்து அறியாமையை போக்கியது.
‘பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம்’ என்று ஒரு பக்தன் பாடினான். இயேசுவின் பாதங்களை நாம் பற்றிப் பிடித்துக் கொள்ளும் போது அது நமக்கு புகலிடமாக அமைகிறது.
பெத்தானியா என்ற கிராமத்தைச் சேர்ந்த மரியாளைக் குறித்து நாம் வேதத்தில் மூன்று இடங்களிலே வெவ்வேறான சூழ்நிலைகளில் காண்கின்றோம். இதிலே ஒரு விசேஷம் என்னவென்றால் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் மரியாள் இயேசுவின் பாதத்தண்டையிலேயே காணப்பட்டாள் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டாள். மரியாள் இயேசுவின் பாதத்தில் பெற்றுக்கொண்ட மூன்று அனுபவங்களைக் குறித்து வேத வசனத்தின் ஆதாரத்தோடு நாம் விவரமாக தியானிப்போம்.
1.இயேசுவின் பாதத்தில் வசனத்தைக் கேட்டாள்.
‘மரியாள் இயேசுவின் பாத்தருகே உட்கார்ந்து வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்’ (லூக்கா 10:39)
இயேசுக் கிறிஸ்து ஒரு போதகர். அவருடைய பாதத்தருகே உட்கார்ந்து வசனத்தைக் கேட்பது எத்தனை பாக்கியமான அனுபவம். பாதத்தருகே அமர்ந்திருப்பது என்பது ஒரு தாழ்மை உணர்வை நமக்குள் கொண்டு வருகிறது. இயேசுவின் பாதத்தில் நம்மைத் தாழ்த்தும்போது நம் இருதயம் தேவ வசனங்களை பெற்றுக் கொள்ள ஆயத்தமாகிறது அவருடைய வார்த்தைகளை கேட்பது மாத்திரமல்ல அவர் பாதங்களை நாம் நோக்கிப் பார்க்கும் போது அது நம்மை பரவசப்படுத்தும். ‘நாம் அவருடைய அடிச்சுவடுகளை தொடர்ந்து வரும்படி நமக்கு மாதிரியை பின் வைத்துப் போனார். (1பேதுரு 2:21)’
ஒரு மனிதன் வனாந்தரமான பகுதியிலே தன் பாதையை தவற விட்டுவிட்டான். வீடு திரும்ப வழி தெரியாது திகைத்துக் கொண்டு நின்றான். அங்கே ஒரு அடிச்சுவடு அவனுடைய கண்களுக்கு தென்பட்டது. வேறொன்றையும் கவனிக்காமல் அந்த அடிச்சுவடுகளின் மீது தன் கால்களை வைத்து தொடர்ந்து நடந்து தான் அடையவேண்டிய இடத்திற்கு சரியாக போய்ச் சேர்ந்தான். தீமைகள் நிரம்பிய இவ்வுலகத்திலே நம் கால்கள் சறுக்கும் போது நாம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பார்த்து அதிலே நடப்போமானால் அதுவே நம்மை நித்தியத்திற்குள் கொண்டு செல்லும்.
இயேசுக் கிறிஸ்துவை வீட்டில் ஏற்றுக்கொண்டது மார்த்தாளே. ஆயினும் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்திருக்க அவளால் முடியவில்லை. பற்பல வேலைகளைச் செய்வதில் வருத்தமடைந்து இறுதியிலே தேவையானதை இழந்து போனாள். மார்த்தாள் இயேசுவுக்காக அநேக ஆயத்தங்களைச் செய்வதிலேயே ஆர்வம் காட்டினாள் அது போல அநேக அலுவல்களும் ஊழியங்களும் இயேசுவின் பாதத்திலே நாம் அமர்ந்து அவருடைய வசனத்தைக் கேட்க முடியாதபடி நம்மை நெருக்கி விடுகின்றன. எதுவாயிருந்தாலும் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருப்பது கண்டிப்பாக நம் ஒவ்வொருவருக்கும் தேவையானது.
‘நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய் கேட்டு’ (யாத்-15:26) என்கிற நிபந்தனையே எல்லா வாக்குத்தத்தங்களுக்கும் முன்பாகத் தொனிக்கிறது. கேட்கிறதற்கு நாம் தீவிரமாக இருக்க வேண்டும். (யாக்-1:19) அப்பொழுது நம் ஆத்துமா போஷிக்கப்படுகிறது. அதுதான் நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்கு. நம் அலுவல்கள் மத்தியிலும் ஒரு மணி நேரமாவது தினமும் இயேசுவின் பாதத்திலே அமர்ந்திருக்க வேண்டும் என்று முயற்சித்து அதனை அன்றாட பழக்கத்தில் கொண்டுவருவோமானால் அது நம் வாழ்க்கையில் பல திருப்பங்களைக் கொண்டுவரும்.
2. இயேசுவின் பாதத்தில் எல்லாவற்றையும் கொடுத்தாள்
‘மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு ராத்தல் கொண்டு வந்து அதை இயேசுவின் பாதங்களில் பூசி தன் தலைமயிரினால் பாதங்களைத் துடைத்தாள்‘ (யோவான்-12:3)
நளதம் என்ற தைலம் களங்கமற்றது. மிகவும் விலையேறப்பெற்றது. இந்த தைலத்தின் மதிப்பு 300 பணம் என்றால்இ ஒரு சாதாரண மனிதன் 300 நாட்கள் வேலை செய்து பெற்றக் கொள்ளக்கூடிய கூலியாகும். மரியாள் ஒரு ஏழைப் பெண்மணி! பல வருடங்கள் தான் சேமித்து வைத்த பனத்தைக் கொண்டே அவள் அந்த தைலத்தை வாங்கியிருக்கக் கூடும் அவள் இயேசுவின் மேலுள்ள அன்பினால் தனக்குள் உண்டான நன்றி உணர்வினால் தனக்கு மிகவும் அருமையான விலையேறப் பெற்ற தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்ற தாமதிக்கவில்லை. தனக்கென்று எதையுமே வைக்காமல் எல்லாவற்றையும் இயேசுவின் பாதத்தில் ஊற்றினாள்.
பெண்கள் தங்கள் தலைமுடியை எவ்வளவு அருமையாக பேணி வளர்க்கிறார்கள் என்பதும் கூந்தலை அலங்கரிப்பதற்கு அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே. பெண்களுடைய தலைமுடி அவர்களுக்கு மகிமை! அந்த மகிமையான முடியினால் இயேசுவின் பாதத்தில் தன்னை முற்றிலும் நொறுக்கி தியாகமாக அர்ப்பணிக்கிறாள்.
அவளுடைய தியாகச் செயலை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அநேகருடைய பார்வையிலே அது வீண் செலவு என்று எண்ணப்பட்டது. ஆனால் இயேசு கிறிஸ்துவோ அவளுடைய அன்பையும் தியாகத்தையும் புரிந்து கொள்கிறார். அவள் என்னிடத்தில் நற்கிரியை செய்தாள். தன்னால் இயன்றதைச் செய்தாள்.. (மாற் 14:6-8) என்று பாராட்டுகிறார்
நாம் கர்த்தருக்காக செலவழிக்கும் நேரம் வீணாக்கப் படுவதில்லை. கர்த்தருடைய ஊழியங்களுக்காக நாம் செலவழிக்கும் பணம் வீண் செலவு அல்ல. இயேசுவின் நாமத்திற்காக நீ எடுக்கும் ஒவ்வொரு பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்கு அவர் அநீதியுள்ளவரல்லவே. கர்த்தர் அவைகளை எண்ணியிருக்கிறார். அங்கீகரிக்கிறார். அவைகள் ஒவ்வொன்றும் அவருடைய ஞாபகப்புத்தகத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
நாம் இன்று நமக்குள்ளவற்றை வைத்து பெருமிதம் கொள்வதை விட்டுவிட்டு நமக்கு அருமையும் முதன்மையுமானவைகளை இயேசுவின் பாதங்களிலே வைத்து எல்லா மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்த வேண்டும். இயேசுவின் பாதங்கள் நம்மை தாழ்த்துகிற, முற்றிலும் நம்மை வெறுமையாக்குகிற இடமாக இருக்கிறது. இயேசுவின் பாதத்தில் நம்மை முழுவதுமாக நொறுக்கி நம்மையும் நமக்குள்ளான யாவற்றையும் ஊற்றிவிடும்போது அதன் மணமானது எல்லா இடத்தையும் நிரப்புகிறது. நாம் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். (11கொரி-2:15)
3. இயேசுவின் பாதத்தில் அற்புதங்களைப் பெற்றுக் கொண்டாள்
‘இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்’ (யோவா 11:32).
ஆபத்திலும் இக்கட்டிலும் சிக்கிக்கொள்ளும் போது யாராவது தங்களை தப்புவிக்க மாட்டார்களா? என்று அநேகர் மனிதர்களுடைய கால்களிலே விழுகிறார்கள். அந்தோ பரிதாபம்! மனிதர்களைச் நாடிச் சென்றும் தாங்கள் எதிர்பார்க்கிற விடுதலையை பெற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிற எண்ணற்றோர் இன்றும் உண்டு. இயேசு கிறிஸ்துவினுடைய பாதங்களில் வந்தடைந்த பிணியாளிகள் அனைவரும் சுகம் பெற்றனர். நம்பிக்கையில்லாமல் வாழ்நாளெல்லாம் துயரப்பட்டுக் கொண்டிருந்த அநேகருக்கு இயேசுவின் பாதங்கள் தஞ்சமாக அமைந்தது. இயேசுவின் பாதத்தண்டையில் வந்த எல்லாரும் அற்புதங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
தனக்கு ஆதரவாய் பக்கபலமாக இருந்த ஒரே அன்பு சகோதரன் மரித்து விட்டான் என்று துயரத்திலிருந்தாள் மரியாள். இதோ இயேசு வந்து விட்டார் என்று கேட்ட மாத்திரத்திலே ஓடோடி அவர் பாதத்தில் விழுகிறாள். கேள்விகள் கேட்கவில்லை. கூக்குரலிடவில்லை. அவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டு கதறுகிறாள். மரியாள் அழுகிறதைக் கண்ட இயேசுவும் ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார். ‘இயேசு கண்ணீர் விட்டார்’ என்று யோவான் அப்போஸ்தலன் தெளிவாக எழுதிவைத்திருக்கிறார். தன் பாதங்களில் விழுந்த மரியாளுடைய துக்கத்திலே இயேசுவும் பங்குகொண்டார்.
இயேசு கிறிஸ்துவின் பாதங்கள் அதிகாரத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. ‘ஏனெனில் தேவன் எல்லாத் துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் வல்லமைக்கும் மேலாக உயர்ந்திருக்கத் தக்கதாக எல்லாவற்றையும் இயேசுவின் பாதத்திற்கு கீழ்ப்படுத்தினார்’ (1கொரி- 15:27). அதிகாரமுடையவர்கள் மாத்திரமே அந்த அதிகாரத்தைப் பிரயோகிக்க முடியும். எல்லா அதிகாரங்களையும் உடைய இயேசுவின் பாதங்களிலே நாம் விழுந்து அவருடைய அதிகாரத்திற்கு நாம் அடிபணியும் போது இயேசு கிறிஸ்துவின் அதிகாரமும் வல்லமையும் நம் வாழ்க்கையிலே பாய்ந்தோடுவதைக் காணமுடியும்.
மரியாள் இயேசுவின் பதத்தில் விழுந்து அழும்போது இயேசு அவளோடு கூட துயரப்பட்டதோடு நின்று விடவில்லை. இயேசுவின் உயிரோடு எழுப்பும் வல்லமை அங்கே கிரியை செய்ய ஆரம்பித்தது. மரித்துப் போய் நாலுநாளாகி பிணமாக நாறிப்போயிருந்த லாசருவின் சடலத்தை கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வந்தது. இயேசுவின் வல்லமை பாதாளம் மட்டும் ஊடுருவிச் சென்று லாசருவை விடுவித்தது. மரித்துப் போன லாசரு உயிரோடே எழும்பினான். என்ன ஆச்சரியம்! என்னே இயேசுவின் வல்லமை!
அருமையான சகேதரியே உன் வாழ்க்கையிலே அற்புதங்களையும் தேவனுடைய வல்லமைகளையும் ஏன் உன்னால் உணரமுடியவில்லை? அற்புதங்களைச் செய்கிற தேவன் இல்லையா? அல்லது தேவனுடைய வல்லமை குறுகிப் போயிற்றா? இல்லவே இல்லை. தேவனை குறைகூறிக் கொண்டிருக்கிறாயல்லவா? கேள்விகள் கேட்டு தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்து கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறாயா? தேவனுடைய வல்லமை உனக்காக கிரியை செய்ய முடியாதபடி தேவனுக்க விரோதமாக எழும்பி நிற்கிறாயா?
ஆம் அருமையான சகோதரியே இப்பொழுதே இயேசுவின் பாதத்தில் விழு! இயேசுவின் அதிகாரத்திற்கு அடிபணி! ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவருடைய பாதத்தைப் பிடித்துக் கொண்டு மன்றாடு! வேதனையோடு வியாதியில் மிகுதியாய் சோர்ந்து போயிருக்கிற உன்னை இயேசு குணமாக்குவார். உன்னை நெருக்கிக் கொண்டிருக்கிற பலவிதமான பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாமல் மறைவதைக் காண்பாய். இயேசு கிறிஸ்துவினுடைய பாதங்களில் வந்தடைந்த பிணியாளிகள் அனைவரும் சுகம் பெற்றனர். நம்பிக்கையில்லாமல் வாழ்நாளெல்லாம் துயரப்பட்டுக் கொண்டிருந்த அநேகருக்கு இயேசுவின் பாதங்கள் தஞ்சமாக அமைந்தது. இயேசுவின் பாதத்தண்டையில் வந்த எல்லாரும் அற்புதங்களைப் பெற்றுக் கொண்டார்கள். உன் வாழ்க்கையிலும் அற்புதங்கள் வேண்டுமா? இந்த மரியாளைப் போல எந்த நேரத்திலும் எல்லாவற்றிலேயும் அவருடைய பாதத்தை உறுதியாய் பற்றிப் பிடித்துக் கொள் நிச்சயம் உன் வாழ்க்கையில் இயேசு அற்புதங்களைச் செய்வார்.
- இயேசுவின் பாதத்தில் வந்து அமர்ந்து நல்ல பங்கை தெரிந்துகொள்!
- இயேசுவின் பாதத்தில் பணிந்து உன்னை நற்கந்தமாக்கிக்கொள்!
- இயேசுவின் பாதத்தில் விழுந்து அற்புதங்களைப் பெற்றுக்கொள்!