துன்புறுத்தியோருக்கு நன்மை செய்தவர்
“என்னிடம் கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிக்காமல் உங்களுக்கு நியாயமாகத் தெரிவதை எந்தத் தண்டனையாக இருந்தாலும் தாருங்கள்” என்ற குப்றியானோசின் வார்த்தைகள் ஆட்சியாளரை அதிர்ச்சியடையச் செய்தது. “இவனை வெட்டி கொலை செய்யுங்கள் என்று ஆணை பிறப்பிக்கப்பட்ட போது “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறிய விசுவாசப் போர் வீரன்தான் கார்த்தேஜைச் சார்ந்த குப்றியானோஸ்.
ஆப்பிரிக்காவிலுள்ள கார்த்தேஜில் ஒரு செல்வந்தரின் மகனாக கி.பி 200-ல் பிறந்தார் குப்றியானோஸ். ரோமிலுள்ள புறஜாதிகளின் தேவர்களிடத்தில் நம்பிக்கை வைத்திருந்த குப்றியானோஸ் தனது பேச்சுத் திறமையால் அநேகரைக் கவர்ந்திழுத்தார். ஆடம்பர வாழ்க்கை குப்றியானோசை அகங்காரமடையச் செய்தது. எல்லா சுகங்களையும் அனுபவிக்கத்தான் மனிதர்ககள் படைக்கப்பட்டுள்ளனர். என்று குப்றியானோஸ் எண்ணினார்.
விக்கிரகங்களை சேவித்த குப்றியானோசின் வாழ்வில் மாறுதல் வரத்தொடங்கியது. கோசிலயஸ் என்ற கார்த்தேஜைச் சார்ந்த கிறிஸ்தவர் குப்றியானோசை சத்திய வழியில் நடத்தினார். வேதபுத்தகத்தை கவனமாக தியானித்த போது அவர் ஒரு உண்மைக் கிறிஸ்தவராக மாறினார். தனது சொத்து முழுவதையும் ஏழைகளுக்கு தானதாக வழங்கினார். இப்போது ஒரு எளிமையான வாழ்க்கை வாழத் தீர்மானித்தார். ஞானஸ்தானம் பெற்றவுடனேயே சபைப்போதகராக நியமிக்கப்பட்டார். தனது ஊழியத்தின் மூலமாக அநேகர் தொடப்பட்டனர். கி.பி 248-ல் டோணாற்றசிஸ் மரித்த பின்பு குப்றியானோஸ் கார்த்தேஜின் பிஷப்பாகப் பதவியேற்றார். தனக்குக் கீழே பணியாற்றும் போதகர்களிடம் மனந்திறந்து பழகினார். முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது அவர்களது அபிப்பிராயங்களைக் கேட்டார்.
வெற்றிப்பாதையில் குப்றியானோஸ் தனது ஊழியத்தைச் செய்து கொண்டிருக்கையில் புறஜாதி தேவர்களை வழிபடுகிறவர்கள் அவரைக் காட்டிக்கொடுத்தனார். ‘ஆணை மீறியவன்’ என்று அவர் மீது பழிசுமத்தி டீசியஸ் என்ற மன்னன் குப்றியானோசுக்கெதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
“குப்றியானோசை சிங்கத்திற்கு இரையாக்குங்கள் அவனை கொடிய மிருகங்களுக்கு இரையாகப் போடுங்கள்.” என்று ஒரு கும்பல் அலறியது. ஆபத்து சூழ்ந்திருப்பதையறிந்த குப்றியானோஸ் தமது சகோதரர்களின் ஆலோசனைப்படி வனாந்திரத்திற்கு தப்பியோடினார். அங்கு இவ்வாறு ஓடி வந்த பல கிறிஸ்தவர்கள் இருந்தனர். எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு சங்கமாகச் செயல்பட்டனர்.
கார்த்தேஜில் பெய்த பயங்கரமான மழையின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் செத்துக் கொண்டிருந்தனர். இதையறிந்த குப்றியானோசும் அவரது குழுவினரும் ஜனங்களை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி சிந்தித்தனர். தங்களைத் துன்புறுத்தி, நிந்தித்தவர்களென்றபோதிலும் அவர்களை காப்பாற்றும் கடமையிலிருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. உங்களை உபத்திரவப்படுத்துவோருக்கு நன்மை செய்யுங்கள் என்ற கற்பனை குப்றியானோசைத் தொட்டது.
இப்படி அவர்கள் கார்த்தேஜில் போய்ச் சேரும்முன்பு அங்குள்ள நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. நோயாளிகள் செத்தொழிவதற்காக வீதிகளில் வீசியெறியப்பட்டிருந்தனர். பட்டணம் முழுவதும் உதவியை எதிர்பார்த்து அபயக்குரல்கள் ஒலித்துக்கொண்டேயிருந்தது. ஆனால் பயத்தின் காரணமாக மனிதர்கள் இரக்கமற்றவர்களாக மாறினார்கள். ஆனால் குப்றியானோசும் அவரது குழுவினரும் கார்த்தேஜ் பட்டணத்தை பல பாகங்களாகப் பிரித்து அந்தந்த இடங்களிலுள்ள கிறிஸ்தவ விசுவாசிகள் செய்ய வேண்டிய சேவைகளைப் பிரித்துக் கொடுத்தனர். ஒவ்வொருவரும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்தனர். செல்வந்தர்கள் தமது பணத்தை ஏழைகளுக்காகச் செலவிட்டனர். இவ்வாறு அதிகாரப்பூர்வமாகக் கார்த்தேஜில் குப்றியானோசும், குழுவினரும் ஒளிமயமான ஊழியம் செய்தனர். பலன் எதிர்பாராமல் அவர்கள் செய்த உதவிகள் ஆயிரக்கணக்கானோர் விடுதலை பெற காரணமாக அமைந்தது.
கிறிஸ்தவர்களால்தான் இந்தப் பெரும் மழை வந்தது. என்று எதிரிகள் குற்றம் சுமத்தினார்கள். எப்படியாவது கிறிஸ்தவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியம். குப்றியானோசை விசாரணைக்குப்பின் கட்டப்பட்டவராக நாடு கடத்தத் தீர்மானித்தனர். ஒரு வருடகாலம் பரதேசியாய் அலைந்தார் குப்றியானோஸ். ஆனால் ஆப்பிரிக்காவில் புதிய ஆளுநர் பதவியேற்ற பின் தமது நாட்டுக்குத் திரும்பி வந்தார். ஆனால் உபத்திரவங்கள் குறைந்தபாடில்லை. குப்றியானோசிடம் ஆளுநரின் முன் ஆஜராகுமாறு கூறப்பட்டது.
விசாரனையைக் கேட்பதற்காக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். ஆளுநர் அவர்கள் எல்லாருக்கும் முன்னால் “தன் விருப்பம்போல் வாழ்பவர்களும், தேவ சிந்தையில்லாதவர்களுமான கிறிஸ்தவர்களின் தலைவன் நீ தான். தேவர்களுக்குப் பலி செலுத்துமாறு சக்கரவர்த்தி உன்னிடம் கட்டளையிட்டிருக்கிறார்.” என்று கூறினான். நான் பலி செலுத்த மாட்டேன் என்ற குப்றியானோசின் பதிலில் திருப்தியடையாத ஆளுநர் மேலும், “கீழ்படியாமைக் காட்டாமல் ஒழுங்காக நல்லதை சிந்தனை செய். நீர் ஏன் உனது உயிரை நஷ்டமாக்குகிறாய்” என்று கூறினான். ஆனால் குப்றியானோஸ், “சும்மா கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணாக்காமல் உங்களுக்கு நியாயமாய்ப் படும் தண்டனையைத் தாருங்கள். இங்கே வாக்குவாதங்களுக்கு விலை இல்லை” என்று கூறியபோது ஆளுநர் மேலும் கேட்க கேள்விகள் இல்லாமற் போனது.
குப்றியானோசின் வார்த்தைகளைக் கேட்ட ஆளுநர் கோபாவேசமானான். வெட்டிக் கொல்லுமாறு தீர்ப்பு வழங்கினான். இதைக் கேட்ட குப்றியானோஸ் தேவனுக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தார். மரண தண்டணையை நிறைவேற்ற குப்றியானோசை ஒரு திறந்தவெளி மைதானத்தில் கொண்டு வந்தனர். இந்த ஈனப் படுகொலையைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் மரங்களின் மேல் ஏறியமர்ந்தனர். குப்றியானோஸ் முழங்காலில் நின்று தமது கைகளால் கண்களை மூடினார். சில நிமிடங்களில் குப்றியானோசை வெட்டுவதற்காக ஆயத்தமானபோது அவரது சகோதரர்கள் தங்களது தலைவரின் இரத்தத்தில் கர்ச்சிப்பைத் தோய்த்து எடுப்பதற்காக முன்னால் வந்தனர். இவ்வாறு குப்றியானோஸ் கி.பி 258-ல் தமது ஊழியத்தை முடித்துக் கொண்டுச்சென்றார்.
சிந்தனைக்கு:
இயேசுவையறிந்தபோது செல்வந்தனான குப்றியானோஸ் தனது சொத்து முழுவதையும் ஏழைகளுக்கு வாரி வழங்கினார். ஏழைகளின் வேதனைகளை அவர் அறிந்திருந்தார். கார்த்தேஜில் பெரிய மழையினால் அழிவு உண்டான போது சேவை செய்ய குப்றியானோஸ் கடந்து சென்றார். தங்களைத் துன்புறுத்தியோருக்கு நன்மை செய்வதில் குப்றியானோஸ் கவனம் செலுத்தினார். புறஜாதி தேவர்களுக்கு பலியிடமாட்டேன் என்று உறுதியாகச் சென்னபோது ஆளுநரால் கூட தொடர்ந்து பேச முடியவில்லை. தேவ ஊழியத்தில் இறுதிவரையும் குப்றியானோஸ் உண்மையுள்ளவராக இருந்தார்.