[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
சீடத்துவத்தின் அக்கினிச் சுவாலை
“கிறிஸ்து ஒருவரை கடந்து வந்து மரிப்பதற்காகவே அழைக்கிறார்.” 20-ம் நூற்றாண்டின் கிறிஸ்தவ சாட்சிகளில் பிரதானமானவரான டீட்றிச் போண்ஹோபரின் வார்த்தைகள் தான் மேலே எழுதப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள குடிமக்களிடம் அநியாயமான உரிமைகளை நிலைநாட்டும் தேசிய சோஜலிசத்தை கடுமையாக எதிர்த்த போண்ஹோபர் நாசிப் படை வீரர்களால் கொல்லப்பட்டார்.
காள்லட்விங்-பவுள போண்ஹோபர் தம்பதிகளில் மகனாக ஜெர்மனியிலுள்ள பிரஸ்லோவில் 1906 பிப்ரவரி 4-ம் நாள் டீட்றிச் பிறந்தார். நாடி வைத்தியம், மனநல மருத்துவம் போன்ற சிகிச்சையில் பிரபலமான இவரது தந்தை ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். இரட்டைச் சகோதரிகள் உட்பட நான்கு சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் போண்ஹோபருக்கு இருந்தனர். பெற்றோரின் மாதிரியான வாழ்க்கையும், குணநலன்களும் உயர்ந்த நிலையிலிருந்தது போண்ஹோபருக்கு மிகவும் உதவியாக இருந்தது. தந்தையிடமிருந்து நன்னடத்தையும், நீதியுணர்வையும், கடமை உணர்வையும், பொறுமையையும் கற்றுக்கொண்டார். 1912 வரை பிரஸ்லோவிலும் பின்னர் பெர்லினிலும் தங்கியிருந்தார்ககள்.
பெற்றோரின் அன்பான பாதுகாப்பு போண்ஹோபரை தனித்தன்மை வாய்ந்தவராக மாற்றியது. மேலும் தனது கவர்ச்சியான அணுகுமுறை மூலம் ஏராளமான நண்பர்களையும் பெற்றுக்கொண்டார். மலைகளையும், பூக்களையும், மிருகங்களையும் மிக அதிகமாய் நேசித்தார்.
தனது பதினான்காம் வயதில் இறையியல் கற்க போண்ஹோபர் தீர்மானித்தார். போண்ஹோபரின் பரம்பரையில் பிரசித்தி பெற்ற இறையியலாளர்களும் இருந்தனர். 17-ம் வயதில் தும்பிங்கன் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். மேலும் பெர்லின் பல்கலைக்கழகத்திலும் படிப்பைத் தொடர்ந்தார். ஒரு உதவி போதகராக பார்சிலோனாவில் ஊழியம் செய்த போண்ஹோபர் தனது 24-ம் வயதில் பல்கலைகழகத்தில் இறையியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஆசிரியப்பணியை துவங்கும் முன் நியூயார்க்கிலுள்ள யூனியன் தியாலஜிக்கல் செமினரிக்குப் போனார்.
1933-ல் ஹிட்லர் பதவிக்கு வந்தபோது போண்ஹோபர் தனது ஆசிரியப்பணியிலிருந்து விலகினார். ஹிட்லரின் நடவடிக்கைகளை மிகத் தெளிவாக அவர் அறிந்திருந்தார். தேசிய சோஸலிசம் என்பது தேவனை விட்டு விட்டு மனித சக்தியில் மட்டும் அஸ்திபாரம் இடப்பட்ட மிருகத்தனமான முயற்சி என்பதையும் அவர் அறிந்திருந்தார். நாட்டை அழிவுப்பாதையில் நடத்திச் செல்லும் ஹிட்லரை கடவுளாக, விக்கிரமாக மாற்றிக்கொண்டிருக்கும் தேசிய அமைப்பை வானொலி மூலம் கடுமையாகச் சாடினார். திருச்சபை மூலம் ஆறுமாதம் நடத்திய கண்டனங்களுக்குப் பின் 1933-ல் போண்ஹோபர் இலண்டன் போனார். அங்குள்ள ஜெர்மானிய குடியிருப்புகளில் ஊழியம் செய்தார்.
ஜெர்மனியிலுள்ள கண்பஷனல் சபையின் தலைவராக மாறிய போண்ஹேபர் 1935-ல் ஜெர்மனிக்குத் திரும்பினார். பொலரேனியாவில் ஒரு சபைப்பயிற்சி மையத்தைப் பொறுப்பேற்கவே மீண்டும் ஜெர்மன் வந்தார். மிகவும் ஒழுங்காக இந்த ஸ்தாபனம் செயல்பட்டது. போண்ஹோபரின் நயமான நடவடிக்கைகள் அதற்குப் பெரிதும் உதவியது. ஹிட்லரின் ஆட்சியின் கீழிருந்து பல பகுதிகளிலிருந்தும் வாலிப போதகர்கள் அங்கு ஒன்றாகக் கூடியிருந்தார்கள். சகோதரத்துவ வாழ்வை அங்குக் கற்றுக்கொண்டார்கள். ஆனால் 1940-ல் கஸ்ற்றபோ இந்த ஸ்தாபனத்தை இழுத்து மூடினான்.
போர் மூளும் என்று உறுதியான போது அயல்நாடுகளிலுள்ள போண்ஹோபரின் நண்பர்கள் ஜெர்மனியிலிருந்து மாறிச் செல்ல அவரிடம் கூறினார்கள். ஏனெனில் இராணுவத்தோடு இணைந்து உழைப்பதை போண்ஹோபர் கடுமையாக எதிர்த்து வந்தார்.
ஒருமுறை போர் வந்தால் என்ன செய்வீர்கள் என்று சுவீடன் நாட்டைச் சார்ந்த ஒருவர் கேட்டபோது, “ஆயுதம் எடுக்காமல் இருக்கத் தேவையான வல்லமை தரும்படி ஆண்டவரிடம் மன்றாடுவேன்” என்று போண்ஹோபர் பதிலுரைத்தார். 1939-ல் தனது அமெரிக்க நண்பர்கள் அவரை அழைத்துச் சென்றபோதிலும் போண்ஹோபரின் மனம் முழுவதும் ஜெர்மனியையே சுற்றிக்கொண்டிருந்தது. ஒடுக்கப்படும், துன்புறுத்தப்படும் ஜெர்மனிய மக்களுக்கு தனது அருகாமை தேவையென்று உணர்ந்தபோது மீண்டும் அங்கு திரும்பி வந்தார்.
1943 ஏப்ரல் 5-ம் நாள் போண்ஹொபரை அவரது சகோதரி கிறிஸ்டல் மற்றும் கணவனார் ஹான்ஸ்போண்ட் ஆகியோருடன் கஸ்ற்றபோ என்ற நாசிப்படையின் இரகசிய போலீஸ் கைது செய்தான்.
சிறையில் தள்ளப்பட்ட போண்ஹோபர் அசாதாரணமான வீரமுடன் நிலைத்து நின்றார். சக கைதிகளிடமும், காவலாளிகளிடமும் தொடர்பு வைத்துக் கொண்டார். சிறையில் வைத்து போண்ஹோபர் எழுதிய கவிதைகளையும், கடிதங்களையும் காவலாளிகள் பத்திரமாகக் கடத்திச் சென்று உதவினார்கள். சிறைக்கதவை மன்னிப்பு கேட்டு அடைத்து வைத்தனர். போண்ஹோபர் அந்த அளவிற்கு செல்வாக்கு பெற்றிருந்தார். விரக்தியடையும் சக கைதிகளை ஆறுதல்படுத்த போண்ஹோபர் கவனம் செலுத்தினார். இயேசுவின் அன்பைக் கூறி அவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்ற அவரது சிறை வாழ்க்கை உதவியது. செய்த குற்றங்களுக்காக மனஸ்தாபப்பட்டு இயேசுவிடம் கடந்துவர அவர்களிடம் அறைகூவினார். நோயாளிகளான சக கைதிகளைப் பராமரிக்கவும் போண்ஹோபர் முயற்சி செய்தார்.
1944 அக்டோபர் 5-ல் போண்ஹோபரை கஸ்ற்றபோயின் பிரதான சிறைச்சாலையான பெர்லினிலுள்ள பிரின்ஸ் ஆல்பச் டிராஸ்ஸாவில் மாற்றினார்கள். வெளியுலகத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட போதும் போண்ஹோபர் சஞ்சலப்படாமல் இருந்தார். பெர்லினிலுள்ள சிறைச்சாலை குண்ட வீச்சால் உடைந்த போது பூச்சன் வார்டி சிறைச்சாலைக்கு மாற்றினார்கள். இந்தவேளைகளிலெல்லாம் போண்ஹேபரிடம் இருந்த நம்பிக்கை பலரை கவர்ந்தது. 1945 ஏப்ரல் 9-ம் நாள் போண்ஹோபரை பிளேசன்பெர்கிலுள்ள சிறைச்சாலையில் வைத்து தூக்கிலிட்டுக் கொன்றார்கள்.
சிந்தனைக்கு
திடமான தீர்மானமும், தியாக மனப்பான்மையும், வெற்றியின் வீரமும் நிறைந்தவர் தான் போண்ஹோபர். சபை விசுவாசிகளிடம் மிகவும் உன்னதமான ஒரு ஊழியம் செய்தார். ஹிட்லரின் மனித உரிமைக்கெதிரான நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தார். தேவப் பிரமாணத்திற்கு எதிரான ஒரு அரசாங்கத்தை எதிர்க்கக் கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டென்று போண்ஹோபர் நிரூபித்தார். உடன் வசிப்பவர்களிடம் அன்பும், இரக்கமும் செலுத்த மிகவும் கவனம் செலுத்தினார். சிறைச்சாலையின் நடைமுறைகள் போண்ஹோபரை வேறுபட்டவராக மாற்றியது. சுயநலமின்மையும், சேவை மனப்பான்மையும் போண்ஹோபருக்கு அநேக நண்பர்களை உருவாக்கித் தந்தன. பிரசித்திப்பெற்ற இறையியல் வல்லுனரான போண்ஹோபர் கிறிஸ்தவ சீடத்துத்தின் தீச்சுவாலையாகத் திகழ்ந்தார்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]