[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு அவருடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக வளர காலம் எடுக்கும். ஆண்டவர் தமது மிகுந்த இரக்கத்தின்படி நீங்கள் அவருக்குள் வளரத் தேவையான சகலத்தையும் தருகிறார். மோசேயினுடைய குழந்தைப் பருவம் இதைத்தான் நமக்குக் காட்டுகிறது.
சத்துரு தேவ ஜனங்களை உச்சக்கட்டமாய் தாக்கின வேளையில்தான் கர்த்தர் தமது இரட்சகன் மோசேயை அவதரிக்கச் செய்தார். வெள்ளம் போல சத்துரு வரும் போது கர்த்தருடைய ஆவியானவர்தாமே அவனுக்கு விரோதமாய் எப்பொழுதும் கொடியேற்றுகிறார். (ஏசா 59:19)
மோசே பிறந்தபொழுது லேவியராகிய அவன் பெற்றோர் அந்த அழகிய ஆரோக்கியமான குழந்தையைக் கண்டு மூன்று மாதம் ஒளித்து வைத்தனர். ஒரு வேளை அந்தப் பிள்ளைக்குள் சிறப்பான ஏதோ ஒன்றை அவர்கள் தீர்க்கதரிசன கண்களால் பார்த்திருக்கலாம். அதை அப்புறம் ஒளித்து வைக்கக் கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து அதிலே பிள்ளையை கிடத்தி நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தார்கள். அதின் தமக்கை அதற்கு என்ன சம்பவிக்கும் என்று பார்க்கும்படி தூரத்திலே நின்று கொண்டிருந்தாள். சரியான நேரத்தில் பார்வோனின் குமாரத்தியை ஸ்நானம்பண்ணும்படி தேவன் வரச்செய்தார். பிள்ளை அழுவதைக் கண்ட அவள், பிள்ளையின் தாயையே அழைத்து, அதை வளர்க்க சம்பளமும் கொடுத்தாள்.
இயேசு உங்கள் உள்ளத்தில் பிறந்துவிட்ட பிறகு அவர் உங்களுக்குள் தாராளமாய் வளர இடம் கொடுங்கள். கிறிஸ்துவுக்குள் அவருடைய எல்லா ஆற்றலும் சுபாவங்களும் உங்களுக்குள் இருக்கிறது. ஆனால் நீங்கள் சிறுகி, அவர் உங்களுக்குள் பெருகும்வரை அவர் உங்கள் மூலம் வெளிப்படமாட்டார். (யோவான் 3:30)
இந்தக் குழந்தை பருவத்தில் உங்களை சத்துருவுக்கு மறைத்துப் பாதுகாக்கவும், கிறிஸ்து உங்களில் உருவாகும்படி கர்ப்ப வேதனைப்படவும் ஆவிக்குரிய பெற்றோர் உங்களுக்குத் தேவை. (கலா 4:19) இயேசுவுக்கே கூட இந்தப் பருவத்தில் பெற்றோரின் கவனிப்பும், பாதுகாப்பும் தேவைப்பட்டது. அவர் போதகர்கள் நடுவே அமர்ந்து நியாயப்பிரமாணங்களைக் கற்றுக் கொண்டார். (லூக் 2:41-52) ஆவிக்குரிய தலைவர்களின் விசுவாசமும் தேவ பக்தியுமே உங்களுடைய ஆரம்ப கால கிறிஸ்தவ வாழ்வைக் காத்தது. ஆண்டவர் அநேக ஆவிக்குரிய சகோதர சகோதரிகளைக் கொடுத்து உங்களைக் கண்காணித்து வருகிறார்.
இந்தப் பருவத்தில், தேவனே உங்களைப் பொறுப்பெடுத்து, உங்களுக்கு எல்லாவற்றையும் சுமுகமாக நடக்கச் செய்கிறார். (ஏசா 40:11) உங்களது உலகக் கல்வி மற்றும் பயிற்சி ஏன் அவிசுவாசிகளையும்கூட உங்கள் வளர்ச்சிக்கு தேவன் பயன்படுத்துகிறார். கர்த்தர் மோசேக்கு புறஜாதிப் பார்வோனின் அரண்மனையில் பயிற்சியளித்தார். அடிமைகளை ஒரு அடிமையின் மூலம் விடுவிக்க முடியாது. ஆகவே தேவன் அவனுக்கு ராஜ வாழ்க்கையைத் தந்து அடிமைத்தன மனநிலையிலிருந்து முற்றிலும் அவனை விடுதலையாக்கினார்.
கிறிஸ்துவுக்குள் நீங்கள் தேவனால் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே தெரிந்துகொள்ளப்பட்டீர்கள். எனவே உங்கள் வாழ்வின் சகலமும் கண்ணுக்குத் தெரியாத பரலோகக் கரங்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. (எபே 1:4)
கிறிஸ்துவுக்குள் நீங்கள் தேவனுடைய விசேஷமான நோக்கத்துக்காக தெரிந்தெடுக்கப்பட்ட விசேஷ பிள்ளை. ஆண்டவர் உங்களை மிக விசேஷமான பாதையில் நடத்தி உங்கள் முழு வாழ்வையும் அவருடைய திட்டத்திற்கு பொருந்தி வரும்படி ஒழுங்குபடுத்துகிறார். உங்களுடைய எதிர்மறையான பாதக அனுபவங்கள் கூட ஒருநாள் தேவ திட்டத்திற்கு பயன்படும். இதை மனதில் கொண்டு வாழ்வில் எல்லா சவால்களையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். நீங்கள் இந்த நிலைக்கு வரக்காரணமான யாவருக்கும் நன்றி உள்ளவர்களாயிருங்கள். அவர் தம்முடைய சரியான நபரை, சரியான செய்தியோடு, சரியான நேரத்தில் உங்களிடத்தில் அனுப்பிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அனுபவிக்கிற இவ்வுலக அனுகூலங்களுக்காகக் கூட அவரைத் துதியுங்கள்.
ஜாக்கிரதை – சத்துரு உங்களை உங்கள் பிஞ்சுப்பருவத்திலேயே அழித்து விட தன்னால் ஆனதைச் செய்து பார்ப்பான். ஆனாலும் பயப்படத்தேவையில்லை. ஆண்டவர் சத்துருவை எப்படி முட்டாளாக்கி மோசேயைத் தப்புவித்தார் என்பதை நினைவுகூருங்கள். பார்வோனின் முட்டாள்தனத்தைப் பாருங்கள். எபிரெயக் குழந்தைகளைக்கொல்லும்படி எபிரெய மருத்துவச்சிகளுக்கே கட்டளையிட்டானாம். பாவம் அவன். பிள்ளையை வளர்க்கும் தாதிதான், பிள்ளையின் சொந்தத்தாய் என்பது பார்வோனின் குமாரத்திக்கும் தெரியாது. எகிப்தையே அழிக்கப்போகிறவன், அவர்கள் அரண்மனையிலேயே பயிற்சி எடுத்து, வளருகிறான் என்பது அரண்மனைக்காரருக்குத் தெரியுமா? தன்னுடைய சதித்திட்டங்களையெல்லாம் அழிக்கும் வீரன் தன் மடியிலேயே வளருவது பார்வோனுக்குத் தெரியுமா? உங்களைப் பாதுகாப்பவரின் ஒப்பற்ற ஞானத்தைக் கண்டீர்களா?
அன்பானவர்களே, நீங்கள் தேவனால் பிறந்தவர்கள். உங்கள் ஜீவன் தேவனுடைய அரவணைப்புக்குள்ளும், அபார ஞானத்திற்குள்ளும் பத்திரமாயிருக்கிறது. கர்த்தர் தம் செயலில் எல்லாம் கெட்டிக்காரர். பிசாசு தந்திரசாலியே தவிர அறிவாளி அல்ல. உங்கள் வாழ்க்கையில் அவன் செய்ய நினைப்பதெல்லாம் நாசமாய் போகும். ஆண்டவர் உங்கள் வாழ்வை முற்றிலும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]