[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்தஆவியின் பெலத்தோடும், உதவியோடும், தேவனுடைய சித்தத்தின்படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும். “நீயோ ஜெபம் பண்ணும் போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல நீங்கள் செய்யாதிருங்கள். உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:6-8) என்று இயேசு கட்டளையிட்டார்.
தேவனுடைய வார்த்தைக்கு உட்பட்டு ஜெபிக்கும்போது தான் உண்மையிலேயே நாம் ஜெபிக்கிறோம். தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்டு நம்முடைய ஜெபம் இருக்குமானால் அது தேவதூஷணம் அல்லது வீண் அலப்புதலாகும், அது ஜெபமல்ல. ஆகவேதான் தாவீது ஜெபிக்கும் போது அவனது கண்களை தேவனுடைய வார்த்தையிலே பதித்துக்கொண்டு ஜெபித்தான். “என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்”, “சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது. உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.” (சங்கீதம் 119:25,28) தேவனுடைய வார்த்தை அல்லாமல் கிறிஸ்தவர்கள் ஜெபிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் உடனடியாக வந்து இருதயத்தைத் தூண்டி உயிர்ப்பித்து விடுவதில்லை. ஆனால் வார்த்தையினால், வார்த்தைகளோடு, வார்த்தைகள் மூலமாக ஜெபிக்கும்போது பரிசுத்தஆவியானவர் உயிர்ப்பிப்பவராக இறங்குகிறார். பரிசுத்தஆவியானவர் வார்த்தையை நம்முடைய இருதயத்திற்குள் கொண்டுவருகிறார். அதை நமக்கு வெளிப்படுத்தித் தருகிறார். அதன் மூலமாக நாம் மேலும் தேவனை நோக்கி ஜெபிக்கத் தூண்டப்படுகிறோம். வார்த்தையை நாம் அனுபவிப்பதைக் குறித்து ஜெபத்தில் அவரிடம் சொல்லுகிறோம். வார்த்தையின்படி பணிந்து விண்ணப்பிக்கிறோம்.
இதுவே தேவனுடைய வல்லமையான தீர்க்கதரிசியாகிய தாவீதின் அனுபவம். தேவனுடைய வார்த்தையின் மேன்மையை விளங்கிக்கொண்ட தானியேல் வேதத்தின் அடிப்படையில் ஜெபித்த காரணத்தால் இஸ்ரவேல் மக்களின் சிறையிருப்பை முடிவுக்குக் கொண்டுவர முற்பட்டு முடிவை நெருக்கினான்.
“கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன். நான் உபவாசம் பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி (னேன்)” தானியேல்9:1-3
ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஆவியானவர் நமக்கு உதவியாளராக, ஆத்துமாவை ஆளுகிறவராக இருக்கும்போது, நாம் தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்கும்போது ஜெபத்தில் தேவனுடைய வார்த்தையாலும், வாக்குத்தத்தங்களினாலும் வழிநடத்தப்பட வேண்டும். ஆகவேதான் இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவன் ஆபத்துக்குள்ளான சூழ்நிலையில் இருந்தாலும் தமது விடுதலைக்காக ஜெபிப்பதை நிறுத்திக்கொண்டார். “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச்செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்” (மத் 26:53-54) என்று காண்கிறோம். ஏனென்றால் தேவனுடைய வார்த்தை நிறைவேற வேண்டியதிருந்தது. நம்முடைய பாவங்களுக்காக அவர் மரிக்க வேண்டியதிருந்தது .
ஆகவே உண்மையான ஜெபம் என்பது தேவனுடைய வார்த்தையின் படியும் வாக்குத்தத்தங்களின் படியும் இருக்கவேண்டும். ஜெபத்தின் முறைமைக்காகவும் ஜெபிக்கவேண்டிய காரியங்களுக்காகவும் ஆவியானவர் வார்த்தைகளைக்கொண்டு நம்மை வழிநடத்த வேண்டும். பவுல் அப்போஸ்தலன் “நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன். நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்”(1கொரி 14:15) என்று கூறுகிறார். தேவனுடைய வார்த்தையின்றி அறிவு அல்லது கருத்து செயல்பட முடியாது. “கருத்தோடு” என்ற பதத்திற்கு UNDERSTANDING என்று ஆங்கில வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனினும் சில வேத விளக்க உரையாளர்கள் UNDERSTANDING என்ற சொல்லுக்கு பதிலாக MIND அதாவது சிந்தை என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். ஜாண் பன்யன் MIND என்ற அர்த்தத்தில்தான் இதைக் குறிப்பிடுகிறார். மக்கள் தேவனுடைய வார்த்தையை நிராகரிப்பார்களானால் இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப் போட்டார்கள். அவர்களுக்கு ஞானமேது? (எரே 8:9) என்று எரேமியா தீர்க்கதரிசி எழுப்பும் கேள்வி அவர்களுக்கு பொருந்தும்.
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே, பவுல் ஜெபத்தில் ஆரோக்கியமான வார்த்தைகளையும் பரிசுத்த ஆவியாவரின் நடத்துதலையும் விரும்பிக்கேட்பது போல நானும் அதே போல ஜெபிக்க வேதத்தின் வார்த்தைகளையும், தேவனுடைய வாக்குத்தத்தங்களையும் எனக்கு வெளிப்படுத்தித் தாரும். என்னுடைய வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஜெபிக்க எனக்கு உதவி செய்யும். ஜெபத்தில் உம்முடைய சித்தத்தின்படியே ஜெபிக்கவும், வார்த்தைகளை உபயோகித்து ஜெபிக்க எனக்கு வழிகாட்டும். அப்பொழுது மகிமையான உமது அன்பின் வல்லமை வெளிப்படுவதை நான் காண முடியும் இயேசுவின் நாமத்தினால் ஆமென்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]