ஒரு பெண் உடை உடுத்தும் விதமும் அவளது பார்வையும், செய்கைகளும் அவளைச் சுற்றியுள்ள டீன் ஏஜ் வாலிபர்களை மட்டுமல்ல, 60 வயது வயோதிபரையும், 80 வயது கிழவனையும் பார்வைகள் வழியாய் பாதிக்கின்றது. மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன, நான் என் விருப்பம்போல் என் அழகினை வெளிப்படுத்த எனக்கு உரிமையுண்டு எனக் கூறாமல் உன் உடலையும், அழகையும், மறைவாயிருக்கவேண்டிய மார்பகங்களையும் மூடும்படி நீ உடை உடுத்த வேண்டும்.
இதை உன்னிடம் யாராவது கூறினால் கோபம் கொள்கிறாய். ஆனால் நீ கவர்ச்சியாக உள் அவயங்கள் தெரியும்படி உடுத்தும்போது பிறர் பாவ இச்சைகளால் தூண்டப்பட்டு அதினிமித்தம் பாலியல் பாவங்கள் செய்ய நீ காரணமாகிறாயே. எனவே எந்த வகையிலும் உன் நடை, உடை, பேச்சு பிறரைப் பாவத்திற்கு உள்ளாக்காமல் இருக்க நீ கவனமாய் இருக்கவேண்டும். அதற்காகவும் நீ ஜெபிக்கவேண்டும். உன் அழகு ஆண்டவருக்குரியதே தவிர பிற ஆடவற்குரியதல்ல.
எதிர் பாலருடன் பழகுகையில் உன் பார்வைகள் முதல் சந்திப்பிலேயே தடுமாறுகிறது என்றால் அந்த நபருடன் நீயும் மிக கவனமாகப் பழகவேண்டும். தேவையற்று அலைபாயும் உன் கண்களுக்கு கலிக்கமிடு (வெளி 3:18).
உயிருக்குயிராய் நேசிக்கிறேன், காதலிக்கிறேன் எனக் கூறுகின்ற பலரும் இப்படிப் பார்வையில் சந்தித்து பின் உள்ளத்தால் நெருங்குகின்றார்கள். பின்பு அது காம உணர்ச்சியாக திசை திரும்ப சூழ்நிலைகள் வரும்போது விழுந்துபோகின்றார்கள். இந்த விஷயத்தில் ஆண்கள்தான் தவறு செய்கின்றவர்கள். ஆனால் பெண்கள் பேதைகள் என நிச்சயம் கூறமுடியாது.
இதோ அந்த பரிசோதனைப் பட்டியல்:
காதல், இச்சை, வாலிப ஆசை, பாவசோதனை, சிற்றின்பம் போன்ற சோதனைகளையெல்லாம் நீங்கள் வெற்றிகரமாக கடந்துவர சில எளியமுறைகள் இருக்கின்றன. அவைகளை கவனமாக பயிற்சியுங்கள்.
1. அனுதினமும் காலையில் ஆண்டவரிடம் கிருபை வேண்டி ஜெபியுங்கள்.
2. வேதத்தில் நீதிமொழிகள், சங்கீதம் புத்தகத்தை தவறாமல் படியுங்கள்.
3. எப்பொழுதுமே தனிமையில் இருக்காதீர்கள்.
4. பாவசூழல் வாய்ப்பிருக்கும் இடங்களுக்குச் செல்லாதிருங்கள்.
5. உங்கள் ஆடை பிறரை இச்சைக்கு நடத்தாதபடி உடுத்துங்கள்.
6. உங்கள் மேலாடைகள் உள்ளாடைகளைப் பிரதிபலிக்கக்கூடாது.
7. உங்கள் மார்பகங்களை மற்றவர்களுக்குக் காட்டும் வகையில் உடுத்தாதீர்கள்.
8. உங்கள் பாதம் வரைக்கும் உங்கள் ஆடை மூடி இருக்கட்டும்.
9. எந்த ஆணோடும் அதிகம் சிரித்துப் பேசாதீர்.
10. ஆண்களை தொட்டுப் பேசும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
11. தேவையற்ற பார்வை, நீண்ட நேரப் பார்வைகளை தவிர்த்துவிடுங்கள். 12. எந்தக் காதல் கடிதத்தையும் ஏற்றுக்கொள்ளாதிருங்கள்.
13. பெற்றோருக்கு தெரியாமல் எந்த ஆணுடனும் தொடர்புக்கொள்ளாதீர்
14. எவராயினும் எதிர்பாலரோடு நீண்ட நேரம் உரையாடக்கூடாது.
15. தேவைக்கு மிஞ்சிய அலங்கார ஆடம்பர அழகு செய்யக்கூடாது.
16. அந்தரங்க காரியங்களை எந்த ஆடவரோடும் பகிரக்கூடாது.
17. பள்ளி, கல்லூரியில் ஆண்களோடு அளவோடு பேசுங்கள்.
18. இரக்கப்பட்டு பரிதாபப்பட்டு அடுத்தவரை நேசிக்கக்கூடாது.
19. எந்த உறவுகளும் கர்த்தராலும், குடும்பத்தினராலும் அங்கீகரிக்க கூடியதாய் இருக்கட்டும்.
20. உங்கள் விருப்பங்களை ஜெபத்தில் ஆண்டவருக்கு சொல்லுங்கள்.
21. வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்க அவசரம் காட்டிவிடாதீர்கள்.
22. சரியான வாழ்க்கை வரும்போது குறைசொல்லி தட்டிக்கழிக்காதீர்.
23. திருத்திக்காட்டுகிறேன் என சவாலிட்டு ஒருவரை மணக்காதீர்கள்
24. சபையில் கேட்ட தேவசெய்தியை எப்பொழுதும் நினைத்திருங்கள்.
25. எந்த ஒரு பதிலையும் ஆண்டவரிடமிருந்து பெற்று முடிவெடுங்கள்.
இப்படி வாலிபப் பெண்களுக்குக் கூற பல்வேறு அறிவுரைகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சிலவற்றையே உங்களுக்கென கொடுத்திருக்கிறேன்.
உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் இயேசுகிறிஸ்து வரும்வரை குற்றமற்றதாய் காக்கப்படவேண்டுமென வேதம் கூறுகிறது (1தெச 5:23).
அப்படியே உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் உங்களுக்கொரு கணவன் வரும்வரை குற்றமற்றதாய் காக்கப்படவேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய், நானும் உன்னை சிநேகித்தேன்”(ஏசா 43:3). “அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன். ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னை கட்டுவிப்பேன்” (எரே 31:3-4) ஆகிய வாக்குத்தத்தங்கள் இதை வாசிக்கிற ஒவ்வொரு மகளுக்கும் உரியது.