இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள். (எண்ணாகமம் 11:6)
தேவன் இஸ்ரவேலருக்கு தூதர்களின் உணவாகிய மன்னாவை அதிசயவிதமாக வனாந்திரத்தில் தினமும் கொடுத்து போஷித்து வந்தார். அதை சாப்பிட்டு வந்த அவர்கள், ஒரு நாளும் சுகவீனமாய் இருந்ததேயில்லை. அவர்கள் தினமும் அந்த வனாந்திரத்தில் நடக்கவேண்டிய சக்தியையும், பெலனையும் அந்த மன்னா உண்டதினால் கிடைத்ததுமன்றி, அவர்கள் சுகமாய் இருந்து வந்தார்கள். இலட்சம் இலட்சம் மக்களுக்கு வானத்திலிருந்து அதிசயவிதமாக வருகிறதே என்று அவர்கள் ஆரம்பத்தில் ஆச்சரியமாய் அதை பொறுக்கி சமைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் கொஞ்ச காலம் அவை கிடைத்து அதில் பழகிபோன பின்பு. அவர்கள் உள்ளம் அதை வெறுக்க ஆரம்பித்துவிட்டது. “ இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.” உலகத்தில் எந்த மக்களுக்கும் கிடைக்காத வானத்தின் மன்னாவை உண்பது அவர்களுக்கு வெறுப்பாக போனது.
நாமும் அப்படித்தான் சிலவேளைகளில் இருக்கிறோம். தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களை ஆசையோடு பெற்றுக்கொண்டிருக்கிற நாம், அதில் பழகிபோனபின்பு, இதைவிட வேறு கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்க ஆரம்பிக்கிறோம். ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து அதற்காக கர்த்தரிடம் ஜெபித்து, அவர் கிருபையாக நமக்கு ஒரு கார் கிடைக்க செய்தவுடன், நாம் இதற்கு பதிலாக வேறொரு ஜீப் வாங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அதிருப்தி பட்டுக்கொள்கிறோம். எனக்கு தெரிந்த ஒரு சிலர், மிக விலை உயர்ந்த காரை அப்போதுதான் வாங்கியிருப்பார்கள், மற்றவர்கள் வாங்கியிருக்கும் வேறு ஒரு இரகத்தை பார்த்து, ஆறு மாதத்திற்குள் தங்கள் காரை விற்றுவிட்டு, மற்ற காரை வாங்குவார்கள்! பணம் இருக்கிறது வாங்குகிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் சாதாரண கார் கூட இல்லாமல் இருந்திருந்த நாட்களை அவர்கள் அதிகமாய் நினைப்பதில்லை. இப்படி எத்தனையோ காரியங்களை கூறிக்கொண்டே போகலாம்! நாம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்களை மிகவும் தாழ்வாக நினைத்து, மற்றவர்களைப் போன்று நமக்கு கிடைத்திருந்தால் நலமாக இருக்குமே என்ற எண்ண ஆரம்பித்து விடுகிறோம்.
வானத்தில் நட்சத்திரங்கள் வருடத்தில் ஒருமுறை வந்தால், எல்லாரும் கண்விழித்து அந்த நட்சத்திரங்களை ஆவலாய் காண்பார்கள். ஆனால் தினமும் வருகிறபடியால் நாம் அதை கண்ணெடுத்துகூட பார்ப்பதில்லை. அப்படி தேவன் நமக்கு கொடுக்கிற ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் மிகவும் எளிதாக எடுத்து விடுகிறோம். நம் இருதயத்தை சோதித்து பார்த்து, கர்த்தருக்கு நன்றியாக ஜீவிப்போம். நமது கார் மிகவும் பழையதாகி சரியாக வேலை செய்யவில்லை என்றால் மாற்றி தான் ஆகவேண்டும். அது அல்ல நாம் சொல்வது, பணம் இருக்கிறது என்பதற்காக தினமும் ஒன்று என்று மாற்றுவது சரியல்ல.
என் நண்பர் ஒருவர், மிகவும் கஷ்டமான வேலையில் இருந்தார். அவர் குடும்பமாக ஜெபித்து வந்தார் “தேவனே எனக்கு ஒரு நல்ல வேலையை தாரும், நானும் உம்மை குடும்பமாக ஆலயத்திற்கு உம்மை தொழுதுகொள்ள வேண்டும்” என்று. கர்த்தரும் அதிசயவிதமாக நல்ல வேலையை கொடுத்தார். கொஞ்ச நாள் ஆனதும், அவர் வேலை செய்வதை போன்ற மற்ற கம்பெனிகளில், அவருடைய அனுபவத்திற்கு நல்ல சம்பளம் தருகிறார்கள் என்று கேள்விபட்டு, மனைவி “நீங்கள் அதிலே அப்ளை பண்ணுங்கள், உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்” என்று கூறினார். ஆனால் நண்பரோ, “தேவன் எனக்கு கொடுத்த வேலை இது, இதைவிட்டு நான் எங்கும் செல்லமாட்டேன், எவ்வளவு உயர்வான சம்பளம் கொடுத்தாலும் சரி” என்று உறுதியாக இருந்துவிட்டான். தற்போது வந்த பொருளாதார நெருக்கடியில் அநேகர் வேலை இழந்தனர். புதிதாக சேர்ந்தவர்களை அவர்கள் வேலையிலிருந்து எடுத்தனர். ஆனால், நண்பர் உறுதியாக இருந்தபடியால், அந்த பழைய வேலையிலேயே தேவன் அவரை வைத்து காத்துக்கொண்டார்.
தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களில் நிச்சயமாக திருப்தியோடு இருந்தோமானால், தேவன் இன்னும் நம்மை அதிகமாய் ஆசீர்வதிப்பார். நாம் அவருக்கு செலுத்தும் நன்றிபலிகளில் அவர் பிரியப்படுவார். அநேகர் தாங்கள் இந்த நிலையில் இருக்க காரணம் தேவன் என்பதை மறந்து ஜீவிப்பதினாலேயே அநேக ஆசீர்வாதங்களை இழந்து விடுகின்றனர். நாம் அவருக்கு எப்போதும் நன்றியோடு, தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களில் மகிழ்வோடு இருப்போம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென். அல்லேலூயா!