‘என் தேவனே எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும்’ (நெகோமியா 13:31).
வேதத்திலுள்ள 66 புத்தகங்களும் ஒவ்வொரு விதமாக முடிவடைகின்றன. சில புத்தகங்கள் துதியோடு முடிவடைகிறது. பல புத்தகங்கள் வாழ்த்துக்களோடு முடிவடைகிறது தீர்க்கத்தரிசனங்களோடும் முடிவடைகிறது. ஏன் புலம்பலோடும் கூட ஒரு புத்தகம் முடிவடைகிறது. ஆனால் இந்த 66 புத்தகத்திலும் ஒரே ஒரு புத்தகம் ஜெபத்தோடு முடிவடைகிறது. ஆம்! நெகேமியா ஒரு பெரிய ஜெபவீராராக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் ஜெபத்தோடு கர்த்தருக்காக பெரிய காரியத்தை செய்து இறுதியில் ‘என் தேவனே எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும்’ என்று வேண்டிக்கொள்கிறார்.
ஒரு மனிதன் நம்மை நினைத்தருள வேண்டுமென நாம் எதையெதையோ செய்கிறோம். எப்படியாகிலும் அவரிடத்திலிருந்து நன்மையை பெறவேண்டுமென்று பல வழிகளில் பிரயாசப்பட்டு அவருக்கு பிரியமானதையெல்லாம் செய்கிறோம். முடிவில் அந்த குறிப்பிட்ட நபரிடமிருந்து எதிர் பார்த்த நன்மை பெற்றுக் கொள்ளாத போது நாம் ஏமாற்றமடைகிறோம். விரக்தியடைகிறோம். நாம் அவர்களுக்காக பட்ட பிரயாசங்களெல்லாம் வீண் என்று சலிப்படைகிறோம். இது ஒரு சாதாரண மனிதனுடைய இயல்பு.
ஆனால் கர்த்தர் மனிதனைப்போலல்ல. தம் பிள்ளைகளின் வாஞ்சையையும், தாகத்தையும் நிறைவேற்றுகிறவர்! தம் பிள்ளைகளுடைய பக்தியையும் ஜெபஜீவியத்தையும் அவர்கள் தனக்காக செய்கிற ஊழியங்களையும் கண்ணோக்கி ஆசீர்வதிக்கிறவர்! அவர் மனிதரைப்போல மனம் மாறுகிறவரல்ல. மறந்து விடுகிறதற்கு மனுபுத்திரருமல்ல!
மனம் மாறுகிற மனிதனிடமிருந்து நன்மை பெற்றுக் கொள்ள எத்தனையோ காரியங்கள் செய்கிறோம். ஆனால் நினைத்தருளுகிற தேவனிடமிருந்து நன்மையை பெற்றுக் கொள்ள நாம் ஒன்றையும் செய்வதில்லை. அவருக்காக எதைச் செய்தாலும் அதற்கேற்ற பலனை அருள மறுக்கிறதற்கு அவர் அநீதியுள்ளவரல்லவே.
நன்மையுண்டாக நினைத்தருளும்படி நாம் அவருக்காக எதையாகிலும் செய்ய வாஞ்சிப்போம். கர்த்தர் கட்டாயம் நினைத்தருளுவார்.
அன்னாளைநினைத்தருளினார்!
‘கர்த்தர் அன்னாளை நினைத்தருளினார்'(1சாமு-1:19)
வேதாகம காலத்தில் எல்கானா என்கிற மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அன்னாள் பெனின்னாள் என்ற இரண்டு மனைவிகள் இருந்தார்கள். பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கு குழந்தைப் பாக்கியமில்லை. அன்னாளுக்கு இருந்த வேதனை சாதரணமான வேதனையல்ல ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ளக்கூடிய நியாயமான வேதனை. அன்னாளுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாததினால் அன்னாளின் சக்காளத்தியான பெனின்னாள் ஒவ்வொரு நாளும் அவளுடைய இருதயம் காயப்படும் படியான வார்த்தைகளை பேசுவாள்.
ஒவ்வொரு நாளும் ஏளனமான வார்த்தையினால் தேனீபோல் கொட்டுவதை தாங்கிக் கொள்ளாத அன்னாள் ஆண்டவருடைய சமூகத்தில் கண்ணீர் வடித்து பொருத்தனை செய்கிறாள். (1சாமு-1:10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணிணாள்,) மலடியாயிருந்த அன்னாளைக் கர்த்தர் நினைத்தருளினார். அவளுடைய கர்ப்பத்திலிருந்து வாழ்க்கை முழுவதும் கறையேயில்லாத பரிசுத்தமான தீர்க்கத்தரிசி தோன்றும்படி செய்தார்.
ராகேலைநினைத்தருளினார்
அன்னாளை தேவன் நினைத்தருளியது போல ராகேலையும் நினைத்தருளினார். அவளுக்கு தேவன் செவிகொடுத்து அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார் என்று ஆதியாகமம்-30:22 இல் வாசிக்கிறோம். ராகேல் லேயாளைக் காட்டிலும் அழகானவள். யாக்கோபு அவளை மிகவும் நேசித்ததால் அவள் பெருமிதத்தோடு இருந்தாள். கர்த்தரோ அவள் கர்ப்பத்தை சிலகாலம் அடைத்து வைத்திருந்தார்.
யாக்கோபால் வெறுக்கப்பட்ட லேயாளுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. மலடியாயிருந்த ராகேல் எனக்கு பிள்ளை கொடும் இல்லையேல் நான் சாகிறேன் என்று கூற யாக்கோபு அவளை கடிந்து கொள்கிறான். இதனால் வேதனையுற்ற ராகேல் தன் பெருமையையெல்லாம் உதறிவிட்டு தன் சிறுமையையெண்ணி தனக்கு நன்மையுண்டாக தேவன் நினைத்தருள வேண்டுமென வேண்டுகிறாள். கர்த்தர் அவள் ஜெபத்தைக் கேட்டார். அவள் கர்ப்பத்தில் இஸ்ரவேல் கோத்திரத்தை காக்கக்கூடிய யோசேப்பு தோன்றினான்.
எனதருமை சகோதரியே நீயும் பல காரியங்களைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாயா? கர்த்தர் நம்மை நினைத்தருளும் தெய்வம். உன் பெருமைகளையும், சுய கட்டுப்பாடுகளையும் விட்டுவிட்டு சீக்கிரம் ஜெப அறைக்கு வந்து விடு. என்னை நினைத்தருளும் ஆண்டவரே என்று இருதயத்தை ஊற்றி கண்ணீர் விட்டு கதறியழுது ஜெபம்பண்ணு. கர்த்தர் உன் விண்ணப்பத்தை நிச்சயம் கேட்டு பதில் கொடுப்பார்.