“நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்து வருகிற படியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.” (ஆதி 50:20)
சோர்வடையாமல் முன்னேறின ஒரு மனிதன், யோசேப்பு. அவர் பதினேழாவது வயதில், தன் சகோதரர்களுடைய சுக நலன்களை விசாரிக்கப் போன போது, அவரை அடித்து, கொலை பண்ண முயற்சித்தார்கள். பாழும் குழிக்குள் போட்டார்கள். பிறகு, எகிப்துக்குச் செல்லுகிற, மீதியானியர் வியாபாரிகளிடம், இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர், மொழிதெரியாத எகிப்திலே, அடிமையாய் விற்கப்பட்டார். அங்கே, போத்திபாரின் மனைவி, யோசேப்பின் மேல் அநியாயமாய் குற்றஞ்சாட்டினாள். இதனால் யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார். ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்.
உண்மையும் உத்தமமுமாயிருந்த அவர், துன்பத்தின் மேல் துன்பமே அனுபவித்து வந்தார். ஆனாலும் கர்த்தர் மேல் கொண்டிருந்த நம்பிக்கையில், அவர் சோர்ந்து போகவில்லை. காரணம் என்ன? “என் சகோதரர்கள், எவ்வளவு தான் எனக்கு தீமை செய்தாலும், கர்த்தர் அதை எனக்கு நன்மையாய் மாற்றுவார்” என்கிற விசுவாசம்.
கர்த்தர் எனக்கு கொடுத்த சொப்பனங்களும், தரிசனங்களும் நிச்சயமாகவே நிறைவேறும். சூழ்நிலைகள் எவ்வளவுதான் எனக்கு எதிரிடையாயிருந்தாலும், கர்த்தர் ஒரு நாள், என் துக்கத்தை சந்தோஷமாய் மாறப்பண்ணுவார். என்பதே, மூலக்காரணம். “அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” (ரோமர் 8:28)
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டல்லவா? யோசேப்பு அநியாயமாய் குற்றிஞ்சாட்டப்பட்டு, பாடுபடுவதற்கு ஒரு காலம் இருந்தது. அதற்குப் பிறகு அவர் உயர்த்தப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுவதற்கு ஒரு காலம் இருந்தது. “யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒருகாலம் வரும்” என்பது பழமொழி. ஆம், பொறுமையோடிருக்கிறவர்கள் கர்த்தரால் உயர்த்தப்படுவதற்கு, ஒரு காலம் உண்டு.
யோசேப்பு சோர்ந்து போகாமலிருந்ததினாலே, சிறைக்கைதி என்ற நிலைமை மாறி “எகிப்தின் அதிபதி” என்ற உயர்வு வந்தது. கர்த்தர் அவரை கீர்த்தியும், புகழ்ச்சியும், மகிமையுமாய் உயர்த்தினார். பஞ்சகாலத்தில் போத்திபாருடைய மனைவி, பிள்ளைகள், யோசேப்பிடம் தானியம் வாங்க வந்திருக்கக்கூடும். அதுபோல, சொந்த சகோதரர்களே, யோசேப்புக்கு முன்பாக பணிந்து, குனிந்து, தானியம் வாங்க வந்தார்கள். அவர்களுக்கு அவர் ஜீவரட்சணை செய்தார்.
யோசேப்பின் முப்பதாவது வயதிலே, அவருடைய பாடுகள், கஷ்டங்களெல்லாம் முடிந்து போனது. அதற்கு பிறகு, அடுத்த எண்பது வருடங்கள் தொடர்ந்து அவர், உன்னத நிலைமையிலே இருந்தார். 110 வயதிலே அவர் மரிக்குமளவும், தன் சகோதரர்களுக்கு உதவி செய்தார். முழு எகிப்தையும், பஞ்சகாலத்தில் பாதுகாத்த பெருமை, அவரையே சேர்ந்தது. கர்த்தர் ஏன் யோசேப்புக்கு சொப்பனங்களையும், தரிசனங்களையும் கொடுத்தார்? ஆம் , அதை உறுதியாய் பற்றிக்கொண்டு, சோர்வின் நாட்களை கடந்துச் செல்ல வேண்டும். முயற்சியை விட்டுவிடாமல், கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
நினைவிற்கு – “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு. அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.” (சங் 37:5)