அநேக சமயங்களில் நாம் விசுவாசத்தை விட்டு விட்டு தேவனுடைய வார்த்தைகளை எறிந்துவிட்டு சாத்தான் சொன்னதை விசுவாசிக்கிறோம். அவன் சொன்னதை நீ சொல்லும் போது அவனுடைய திறமையை வெளிப்படுத்துகிறாய்.
பயம் சாத்தானை செயல்படச் செய்கிறது.
விசுவாசம் தேவனை செயல்படச் செய்கிறது.
நீ நினைத்ததைச் சொல்வதற்கு முன் “யார் அதைச் சொன்னது, அது எங்கிருந்து வருகிறது” என்று பார். அது வசனத்திற்கு ஏற்றதாக இராவிட்டால் அது யாரிடமிருந்து வருகிறது என்று உனக்குத் தெரியும். அது சாத்தானிடமிருந்து வந்தால் அதைச் சொல்லாதே. அதைச் சொன்னால் வஞ்சிக்கப்படுவாய்.
சாத்தானுக்கு விசுவாசியின் மீது ஒரு அதிகாரமுமில்லை என்பது உனக்குத் தெரியுமா? அவனிடமிருக்கும் ஒரே ஒரு திறமை உன்னை ஏமாற்றுவதுதான். அவனது பொய்களை உன்னை நம்பும்படி செய்துவிட்டால் அவன் உன்னைத் தன் கைக்குள் போட்டுக்கொள்வான். அவன் சொன்னதையே நீ சொல்லிக் கொண்டிருந்தால் அதை அவன் உன் தலையின்மீது வைத்துவிடுவான். சகோதரனே, உன் ஜெபம் உனக்கு உதவாமற் போய்விடும்.
நீ தேவனை அந்த இடத்தைவிட்டு வெளியேற்றி விட்டது உனக்குத் தெரியுமா? “மோசமாகிக்கொண்டு வருகிறது, முன்னேற்றமில்லை” என்று சொல்லும் போது உடனே நீ தேவனின் திறமையை செயல்படாதபடி தடுத்து நிறுத்திவிடுகிறாய். நீ பூமியில் சாத்தானின் வார்த்தையை நிலைநிறுத்தி விட்டாய். ஆகவேதான் முன்னேறாமல் மோசமாகிக்கொண்டு போகிறது.
தேவனுடைய வார்த்தை “கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது” என்கிறது (சங் 119:89) தேவனுடைய வார்த்தை ஏற்கனவே பரலோகத்தில் நிலைநிறுத்தப்பட்டு விட்டது. “பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” என்று வசனம் சொல்கிறது“(மத் 16:19)
பூலோகத்தில் நீ கட்டுவது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். தேவனுடைய ஆவியானவர் ஒருநாள் என்னிடம், “சபையின் இன்றைய பிரச்சனை என்னவென்றால், அநேகர் தங்கள் பணத்தைக் கட்டுகிறார்கள். பிசாசு என்னை முன்னேறாதபடி தடுக்கிறான் என்று சொல்லித் தங்களது ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் கட்டிவிடுகிறார்கள்” என்றார்.
பிசாசு சொல்வதைக் கவனிக்காதே; அவனைக் கேட்காதே நீ போய் உன் வேலையைச் செய். சில சமயங்களில் நாம் அவனோடு உட்கார்ந்து உரையாடுகிறோம். அவன், “உன்னால் அது முடியாது” என்கிறான். அவன் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு நமது வாயினால் கூறுகிறோம். இந்த வாரம் முழுவதும் சாத்தான் எனக்கு தடை செய்து கொண்டே இருக்கிறான். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறோம். “சாத்தான் மகா கெட்டிக்காரன், உனக்குத் தெரியாமலேயே உன் தலையின் மீது பாரத்தைச் சுமத்தி விடுவான். நீ எதிர்பாராத நேரத்தில் உன் காலைத் தட்டிவிட்டு உன்னை விழச்செய்வான்” என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அப்படிச் சொல்லும் போது நாம் சாத்தானின் திறமையை வெளியாக்கி அதனை ஏற்றுக்கொள்கிறோம். அவன் உன்னை கீழே விழச்செய்வான் என்று நீயே ஏற்றுக்கொள்ளும் போது தேவன் அதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் தனது வார்த்தையையே மீற வேண்டும். ஏனென்றால் அவர், “நீ உன் வாயால் சொல்வதைப் பெற்றுக் கொள்வாய்” என்று சொன்னார் சாத்தான் தேவனை விட கெட்டிக்காரன் என்று உன்னையறியாமலேயே நீ சொன்னாய். அதற்கு வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
விசுவாசமே ஜெயம்:
தேவன் சாத்தானை விட வல்லமையுள்ளவர். வசனத்தின்படி நடந்தால் உன்னை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெற்றிபெறச் செய்வார். அதற்கு வேதாகமத்தில் ஏராளமான ஆதாரமுண்டு. உனக்குள் உலகத்தை ஜெயிக்கக்கூடிய விசுவாசம் இருக்கிறது. “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவான் 5:4)
தேவன் பிசாசை விட கெட்டிக்காரர் என்பதற்கு ஏராளமான வசன ஆதாரமுண்டு. ஆனால், பிசாசு உன்னை விட, தேவனை விட கெட்டிக்காரன் என்பதற்கு வேதத்தில் எந்த ஆதாரமுமில்லை. நீ கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் போது உனக்குள் கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறது. ஆனால், சாத்தானுக்கு அப்படிப்பட்ட சிந்தையில்லை. அடிவாங்கி உடலெல்லாம் பலத்த காயமடைந்த ஒரு மனிதன் இன்னும் சண்டை போடுவதைப் பார்க்க முடியுமா? அதைப்போலவே சாத்தானும், ஏற்கனவே அடைந்த காயங்களையே இன்னும் ஆற்றமுடியாதவனாயிருக்கிறான்.
நாம் ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள். இந்த விசுவாசம் உனக்கிராவிட்டால் வேதபுத்தகத்தைக் கவனமாகப்படி. “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவான் 4:4) “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளி 12:11)
எதனால் அவனை ஜெயித்தார்கள்?
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியினாலும் அவனை ஜெயித்தார்கள். ஜெயித்தார்கள் என்ற வார்த்தையைக் கவனித்தீர்களா? நீங்கள் ஜெயித்தவர்கள் – தேவனுக்கு ஸ்தோத்திரம். அதை அறிக்கை செய். சாத்தானின் வார்த்தைகளை அறிக்கை செய்வதை நிறுத்து, தேவன் சொல்வதை அறிக்கை செய். நீ ஏற்கனவே வெற்றி பெற்றவன். யுத்தம் உன்னுடையதல்ல; இயேசுவானவர் உனக்காக யுத்தம் செய்தார். வெற்றியும் பெற்றார். எனவே தேவனுக்கு ஸ்தோத்திரம் செய். தேவனால் பிறந்தவன் உலகத்தை ஜெயிக்கிறான். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்.