[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“நாம் அநேக உபத்திரவங்களின் வழியாயத் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்” (அப் 14:22)
பரலோக ராஜ்யத்தை நினைக்கும்போதே, நம் உள்ளம் களிகூருகிறது. அங்கே அழுகையில்லை, கண்ணீரில்லை, கவலையில்லை, துயரமில்லை. அந்த தேசம், தேவ மகிமையால் நிரம்பியிருக்கும். அங்கு ஒன்று இரண்டு நாட்களல்ல, கோடான கோடி யுகங்களாக, தங்கி நிலைத்திருக்கும்.
பாதாளத்துக்கு செல்லுவதற்கு, ஆயிரமாயிரமான வழிகள் உண்டு. ஆனால் பரலோகத்துக்கு ஒரே ஒரு, வழி வாசல் தான் உண்டு. அவர்தான் இயேசுகிறிஸ்து. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றார். (யோவா 14:6) “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான். அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேச்சலைக் கண்டடைவான்.” (யோவா 10:9)
இயேசு கிறிஸ்து சொன்னார், இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்” (மத் 7:13) “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள். அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்.” (லூக் 13:24)
சிலர் இரட்சிக்கப்பட்டு, பரலோக பாதையிலே, உற்சாகமாய் நடக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கலக்கம் கவலை வரும்போது, முயற்சியைக் கைவிட்டுவிட்டு, சோர்ந்து போகிறார்கள். எங்களால் முடியாது என்று, கோழை சத்தம் போட்டு விட்டு, உலக பாவ சந்தோஷத்துக்குள் செல்கிறார்கள். தேவபிள்ளைகளே, உங்களுடைய முயற்சியை கைவிடாதிருங்கள். Never give up. என்ன தான் பாடுகளும், உபத்திரவங்களும் வந்தாலும், இயேசு, இயேசு என்று திரும்பத் திரும்ப சொல்லி, கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக்கொண்டு, ஓட்டத்தை ஜெயத்துடன் முடித்து விட வேண்டும்.
ஒரு குத்துச் சண்டை வீரன், வெற்றி வாகை சூடக்கூடிய வேளை வந்தது. அவன் தான் வெற்றி பெறுவான் என்று, எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் முடிவடைகிற ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக, என்னால் முடியாது என்று சொல்லி, நின்று விட்டான். எல்லோருக்கும் அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. இப்படித் தான் எதிராளியாகிய சாத்தான், உங்களை தோற்கடிக்கும் படியாக நினைக்கிறான்.
ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அவன் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட சத்துரு. கல்வாரிச் சிலுவையிலே ஆண்டவர், அவனையும், அவனுடைய வல்லமையையும் சிதறடித்தார். அந்த வெற்றி வேந்தன், உங்களுக்கு உதவி செய்ய உங்களுடைய அருகில் நிற்கிறார். அவர் ஜெயக்கிறிஸ்து. இஸ்ரவேலின் சேனைகளுக்கு முன்பாக, ஜெய கெம்பீரமாய் நடந்தவர். ஆகவே, “இனி முடியாது, நான் தோற்றுவிடுவேன், வாழ்க்கை கடினமானது” என்றெல்லாம் சொல்லாதிருங்கள்.
டெலிவிஷனிலே, கங்காரு ஒன்றை, ஒரு காட்டு நாய் துரத்திக் கொண்டு போனதைப் பார்த்தேன். கங்காரு மிக வேகமாய் ஓடினது. நிச்சயமாக நாயால் அதை துரத்திப் பிடிக்கவே முடியாது. மட்டுமல்ல, கங்காரு அந்த நாயை எதிர்த்து சண்டையிட்டால், நாய் செத்துப்போகும். ஆனால் இந்த கங்காரு நன்றாய் ஓடினாலும், என்ன காரணமோ, வேகத்தை குறைத்து நின்று விட்டது. அந்த காட்டு நாய் அதை துரத்திப் பிடித்து, கொன்று உணவாக்கிக் கொண்டது. தேவபிள்ளைகளே, எந்த கடின சூழ்நிலையும், உங்களை சோர்ந்துபோகப் பண்ணவேண்டாம்.
நினைவிற்கு – “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.” (யோவா 16:33)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]