அன்புள்ள மனைவியை அடக்கம் செய்துவிட்டு தன்னுடைய ஒரே மகளைத் தோளின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு துக்கம் தன்னை அழுத்த வேதனையோடு வீடு திரும்பினான் கணவன். அவள் ஆண்டவருடன் வாழச் சென்றவிட்டாள். அவனுடைய அகன்ற, பலமான தோள் பலம் குன்றி ஒடுங்கிவிட்டதை தோளில் உட்கார்ந்திருந்த மகள் உணர்ந்தாள். துக்கத்தை அடக்கிக் கொள்ளத் தெரியாமல் தேங்கித் தேங்கி அழுது கொண்டிருந்தாள் மகள். மகளுக்கு அன்புத் தாயில்லாமல் கணவனுக்கு அன்பு மனைவி இல்லாமல் வீடு இருவருக்கும் வெறுமையாகக் காட்சியளித்தது.
.
இரவு வேளை வந்தது. மகள் அம்மாவை அணைத்துக் கொண்டு தூங்கிப் பழகியவள். இரவு வேளையையும் மீறிய காரிருள் தங்களைச் சூழ்ந்து கொண்டதை இருவரும் உணர்ந்தனர். மகள் அப்பாவின் காதருகே வந்து மெதுவாக “டடி இன்று இரவு நான் உங்களோடு படுத்தக் கொள்ளட்டுமா?” என்று கெஞ்சலோடு கேட்டாள். “அன்பு மகளே, நீ என்னோடு படுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சிதான்” என்று பதிலளித்தார் அப்பா. மகளுக்குப் பெரிய சந்தோஷம். படுக்கைக்குச் சென்றனர். மகள் அப்பாவின் அருகாமையில் படுத்துக் கொண்டாள். மின் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. பெரிய அமைதி. “டடி சரியான இருட்டாக இருக்கிறதே, ஒருநாளும் இவ்வளவு இருட்டாக இருந்ததில்லையே” மகளே பயப்படாதே நான் உன் அருகிலேதான் படுத்திருக்கிறேன்” என்றார் அப்பா. “டடி உங்கள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லையே, நீங்கள் என் முகத்தைப் பார்த்து படுத்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள். மகள் இப்படிக் கேட்பது அவனுக்கு மிகுந்த துக்கமாயிருந்தது. எனினும் துக்கத்தை அடக்கிக்கொண்டு மகளிடம் “மகளே, பயப்படாதே, நான் உன் முகத்தை நோக்கிக் கொண்டே படுத்திருக்கிறேன்” என்றார். டடி அப்படியானால் சரி நான் தூங்கி விடுவேன். குட்நைட் டடி, காலையில் பார்ப்போம் என்று சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள். ஆனால் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. படுக்கையில் அங்குமிங்குமாக புரண்டு கொண்டிருந்தான். மனைவியின் இழப்பால் ஏற்பட்ட துக்கத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துக்கத்தின் மிகுதியால் படுக்கையின் அருகிலேயே முழங்கால் படியிட்டான். பரலோகத்தின் தேவனை நோக்கிக் கதறினான். “அப்பா நான் காரிருளிலிருக்கிறேன், அப்படிப்பட்ட காரிருளை நான் எப்பொழுதும் சந்தித்ததில்லையே. எனக்கு முன்பாக நான் எதையும் காண முடியவில்லை…. அப்பா நான் உம்மைக் காண முடியவில்லை…. இப்பொழுது எனக்குச் சொல்லும்… நீர் உம்முடைய முகத்தை என் முகத்திற்கு நேராக வைத்திருக்கிறீரா?” அவன் கதறி அழுதான்.
.
அவனுடைய கதறலைக் கண்ட தேவன் “என் மகனே, நான் எப்பொழுதும் உன்னைக் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறேன். (I am always watching you) என்னுடைய முகம் உனக்கு நேராகத்தான் இருக்கிறது (My face is towards You) பரம தகப்பனாகிய ஆண்டவர் பேசினார். “ஓகே அப்பா, நான் அமைதியோடு தூங்கிச் செல்கிறேன். காரிருள் மத்தியிலும் நீர் என்னோடிருக்கிறீர் என்றான்.
.
தேவனுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் கூட சில வேளைகளில் நமக்கு முன்பாக என்ன இருக்கிறது என்பதைக் கூட காண முடியாத அளவுக்கு காரிருள் சூழ்ந்து கொள்கிறது. ஒன்றுமே புரியாமல் என்ன செய்வதென்றே அறியாத நிலையில் திகைத்து நிற்கிறோம். எல்லாம் சரியாகவே இருந்ததே. ஏன் திடீரென்று இப்படிக் காரிருள் என்று மலைத்துப் போய் நிற்கிறோம். ஏன் எனக்கு இப்படி நடந்தது? ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்விகளால் இருதயம் நிரம்பித் ததும்புகின்றது. ஏன் என்ற புலம்பல் நீடிக்கின்றது? ஆனாலும் தேவன் தம்முடைய நேரத்தில், தம்முடைய சித்தத்தின் படி பதிலளிப்பார். (God will answer in his time and will) நம்முடைய கேள்விகள் ஏன் என்று இல்லாமல் காரிருள் சூழும் வேளையில் எப்படி இதைக் கடந்து செல்வது என்ற கேள்விகளே மேலோங்கி நிற்க வேண்டும்.
.
“உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி தன் தேவனைச் சார்ந்து கொள்ளக்கடவன்” (ஏசா 50:10) என்று வேதம் கூறுகிறது. தேவனை நன்கு அறிந்தவரும் தேவனை நேசிக்கிறவருமாகிய ஒருவர் காரிருளில் நடந்து செல்வதைத்தான் இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. தேவனுகாக பெரிய காரியங்களை செய்த மனிதர்களை கூட தேவன் காரிருளான பாதையின் வழியாக நடத்திச் சென்றிருக்கிறார் என்பதை வேதத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அந்தக் காரிருள் அவர்களுடைய வாழ்க்கையில் நேர்மையான தாக்கத்தையே (Postive impact) உண்டு பண்ணியது. அந்தக் காரிருளில் அவர்களுக்கு நடந்ததென்ன?
.
ஒரு இருட்டறையில் போட்டோ பிலிமின் நெகட்டிவ் பாசிட்டிவாக அல்லது தெளிவான போட்டோவாக உருவாக்கப்படுவது போல் காரிருளில் தான் விசுவாசம் என்றும் வெளிச்சம் உருவாகிறது. காரிருள் உங்கள் குணாதிசயத்தை சோதிக்கிறது (Tests Your Character) வேறுவிதமாக சொன்னால் காரிருளைக் கடந்து செல்லும் பொழுது உங்களது குணாதிசயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது அல்லது அப்படிப்பட்ட வேளையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை சோதித்தறிவதற்கே காரிருள் அனுமதிக்கப்படுகிறது. தேவன் நம் ஒவ்வொருவரிலும் வைத்திருக்கும் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு காரிருளை அனுமதிக்கிறார். ஆகவே காரிருளுக்கான காரணத்தை குறித்து அறியாமலிருந்தும் அதைக் கண்டு திகைத்து பின்வாங்கிவிடக் கூடாது. நம்மை அழுத்தி நசுக்கி அழிக்க வந்திருக்கும் காரியமாக எண்ணக்கூடாது. அந்த வேளையில் தான் நாம் மேற் கொண்ட வசனத்தில் வாசித்தது போல அவருடைய நாமத்தை நம்பி தேவனைச் சார்ந்து கொள்ள வேண்டும். (Trust in name of the lord and rely uon God) வாரன் வெஸ்பி எனும் தேவ மனிதர் இதைப் பற்றி “நாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை கொண்டு வாழ்கிறோடே தவிர வாக்குத்தத்தத்தை குறித்து விளக்கத்தைப் பெற்றுக் கொண்டல்ல. தேவன் உங்களுக்களித்த வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டிருங்கள். அவரிடம் விளக்கம் கேட்க வேண்டாம்” என்று கூறுகிறார். கிறிஸ்துவில் நீங்கள் மகிழ்ச்சியோடிருப்பதற்கு ஒரே வழி நீங்கள் அவரையே சார்ந்த கொண்டு அவருக்குக் கீழ்படிந்து இருப்பது தான்” (Trust and obey) என்ற கருத்தில் பழமையான பாடல் ஒன்றுண்டு. ஆகவே காரிருள் சூழ்ந்து கொள்ளும் போது உங்களில் பிறக்கப் போகும் உறுதியான விசுவாசத்திற்காகவும் அந்த விசுவாசத்தை கொண்டு தேவன் உங்களில் கொண்டுள்ள நல்ல நோக்கத்தை நிறைவேற்ற போகிறார் என்ற அறிவுடன் அவரைத் துதித்துக் கொண்டேயிருங்கள்.
.
காரிருளை நீங்கள் கடந்து செல்லும் பொழுது காரிருள் தன்மையைக் குறித்துச் சிந்திக்காமல் மீண்டும் என் வாழ்வில் சூரியன் உதிக்கும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். “செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்” (சங் 112:4) என்று வேதம் கூறுகிறது. காரிருள் சூழ்ந்த நிலையிலும் நம்பிக்கையற்ற நிலையிலும் இரக்கமும் மனதுருக்கமும் கொண்ட தேவன் அவருடைய மகா பெரிய அன்பை ஒளிக்கதிரைப் போல அனுப்புவார். அந்த ஒளிக்கதிர் காரிருளை விரட்டியடிக்கும். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். உங்கள் வாழ்க்கை முன்னிருந்ததை விட ஆசிர்வாதம் நிறைந்ததாய்க் காணப்படும். நீங்கள் கடந்து வந்த காரிருளை குறித்து உங்களுக்குத் தெளிவான அறிவு உண்டாகும்.
.
காரிருளைக் கடந்த செல்லும் போது ஒன்றும் செய்வதறியாமல் நீங்கள் திகைக்கிறீர்கள் என்றால் ஒன்றை மாத்திரம் நீங்கள் செய்யுங்கள் உங்கள் இருகரங்களையும் உயர்த்தி பரலோகத்தின் தேவனைப் பார்த்துத் தொடர்ந்து சத்தமாக துதித்துக் கொண்டேயிருங்கள். தேவனற்ற நிலையில் பிரகாசமான மலை மேல் நிற்பதைவிட தேவன் மீது சாய்ந்து கொண்டு இருண்ட பள்ளத்தாக்கில் இருப்பதே நல்லது என்பதை நினைவு கூறுங்கள். தேவனில் நிலைத்திருங்கள். நாம் முதலில் கண்ட சம்பவத்தில் சொல்லப்பட்டது போல தேவனுடைய பார்வை நம் மீது இருக்கிறது. யாவும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழிருக்கிறது என்பதை எப்பொழுதும் மனதில் கொள்ள வேண்டும்.
.
“இருளிள் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவா்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது. அந்த ஜாதியைத் திரளாக்கி அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர். அறுப்பில் மகிழ்கிறது போலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூறுகிறது போலவும் உமக்கு முன்பாக மகிழ்கிறார்கள்” (ஏசா 9:2,3).