“….நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்….” (எஸ்தர் 4:16)
எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது, “நீர் போய் சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து எனக்காக உபவாசம் பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம். இவ்விதமாய் சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன்” என்று சொல்லச் சொன்னாள்.
ராஜமேன்மை கிடைத்திருந்தால் துணிகரத்தோடு ராஜாவின் முன்னே செல்லலாம் என்று எஸ்தர் நினைக்கவில்லை. ராஜாவின் முன் செல்வதென்பது அந்நாட்களில் இலகுவானதொன்றல்ல. ராஜஸ்திரியாயினும் அது உயிரைப் பணயம் வைக்கும் விடயம். என்றாலும் தன் இனத்திற்கு வரவிருந்த அழிவைக்குறித்து ராஜாவுக்கு தெரியப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தாள். அவள் ராஜ சமுகத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கு அனுமதியும், ராஜாவின் கண்களில் தயவும் கிடைக்க வேண்டும். அதற்காக எஸ்தரும் தாதிமாரும் சூசானில் இருந்த யூதரும் சேர்ந்து மூன்று நாள் உபவாசித்தார்கள். அதன் பயனாக அவள் தைரியமடைந்தாள். தேவ தயவு அவளைப் பெலப்படுத்தியது. எஸ்தர் உபவாசித்தது ராஜாவுக்குத் தெரியாது. ஆனால் ராஜாவின் கண்களில் எஸ்தருக்குத் தயை கிடைத்தது. உபவாசம் என்பது நாம் நினைத்ததைச் செய்வதற்குப் பாவிக்கப்படும் ஆயுதம் அல்ல. கர்த்தரை சம்மதிக்க வைக்கும் காரியமும் அல்ல. நமது உபவாசம் மனஸ்தாபத்தின் ஒரு தோற்றம். ஜெபத்தில் போராட தைரியமளிக்கும் ஒரு பக்க பலம். நமது சொந்த விருப்பத்தை அல்ல, தேவனுடைய நோக்கத்தைச் செயற்படுத்த அது நமக்கு ஒரு ஊன்று கோல். எஸ்தர் எல்லோரையும் உபவாசிக்கச் சொன்னதன் மூலம் தன் பயங்கரமான பணிக்காக தேவ தயவை நாடி ஜெபிக்கும் படியே அவள் பணித்தாள். இது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பழக்கமாயிருந்தது. எஸ்றா 8:21-23 பகுதியை வாசித்துப் பாருங்கள்.
எஸ்தர் உபவாசித்து ஜெபித்தாள். அவளுடைய ஜனம் அழிவினின்று தப்பியது. ஏன் நாமும் உபவாசித்து ஜெபிக்கக்கூடாது. விசுவாசக் கூட்டத்தாராகிய நாம் ஒருவரையொருவர் ஜெபத்தில் தாங்குவதும் உபவாசத்தோடு ஜெபத்தில் தரித்திருப்பதும் நாம் செய்ய வேண்டிய ஒரு பணி. கஷ்டங்களில் நாம் ஒன்றிணைந்து உபவாசித்து ஜெபிப்போம். அப்பொழுது கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் பெரிய காரியங்களை நிச்சயம் காண்போம். “கர்த்தாவே! கடமைக்காக ஜெபிக்காமல், பிறருக்காக அவர்களின் மீட்புக்காக நானும் உபவாசித்து ஜெபிக்க என்னை உற்சாகப்படுத்தும்.”