CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

திருந்திய ஒரு திருடனின் அறிக்கை

திருந்திய ஒரு திருடனின் அறிக்கை

பசுவராஜ் நிங்கப்பா (வயது 46) கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அவனது 16 வயதிலேயே அவன் திருட்டுத் தொழிலை ஆரம்பித்து விட்டான். இரவு வேளைகளில் வீடுகளுக்குள் ஜன்னல் கம்பிகளை வளைத்து (House Breaking theft be wrenching the window bar) நுழைந்து திருடுவதே அவனது பழக்கம். பல ஆண்டுகள் அவன் பிடிபடாமலேயே தப்பிக்கொண்டே வந்தான். அதனால் அவனுக்கு பயமில்லாமல் போயிற்று. துணிகரமாக செயல்பட ஆரம்பித்தான். பலநாள் திருடன் ஒருநாள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டான். 213 வீடுகளில் அவன் நுழைந்து திருடியதை ஒப்புக்கொண்டான். அவனிடமிருந்த திருடிய சில பொருட்களை ஒப்படைத்தான். விற்ற பொருட்களை எங்கே விற்றான் என்பதையும் அடையாளம் காட்டினான். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். நீதிபதி அவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையளித்தார். 2013-ம் ஆண்டு 20 ஆண்டுகள் தண்டனை காலம் முடிப்பதற்கு முன்பாகவே நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டான்.

செய்த குற்றங்களுக்கு தண்டனையை முடித்து வெளியே வந்தாலும் செய்த குற்றங்கள் அவனுக்கு குற்ற உணர்வையும் மிகுந்த மன உழச்சலையும் கொடுத்தது. ஒரு நாள் பெல்கா என்ற இடத்தில் ஒரு கல்லூரி பேராசிரியர் வீட்டில் திருடியபோது வீட்டிற்குள்ளே அவன் பிடிக்கப்பட்டான். அந்த பேராசிரியர் செய்த காரியம் அவனை மிகவும் உணர்த்தியது. அவர் அவனை அடிக்கவில்லை. காவல் துறையினரிடம் ஒப்படைக்கவுமில்லை. அவனை மன்னித்து அனுப்பிவிட்டார். ஆனாலும், அவன் திருட்டுத் தொழிலை விட்டுவிட வில்லை. தொடர்ந்து செய்தான். பேராசிரியர் அவனை மன்னித்தது அவன் மனதை மிகவும் நெகிழச் செய்தது. அதை அடிக்கடி நினைவு கூர்ந்தான். தான் செய்த குற்றங்களுக்குப் பிராயச்சித்தமாக கர்நாடகா மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் தான் திருடிய 213 வீடுகளுக்கு நடைபயணமாகவே சென்று அந்த வீட்டாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்மானம் செய்தான். தீர்மானத்தை நிறைவேற்ற நடைபயணத்தை ஆரம்பித்தான். திருடிய வீடுகளுக்குச் சென்றான். வீட்டாரிடம் மன்னிப்பு கேட்டான். அவர்களும் மன்னித்துவிட்டதாக தெரிவித்தனர்.

இவ்வாறு அநேக வீடுகளுக்குச் சென்று மன்னிப்பு கேட்டபின்தான் பத்திரிகையாளர்கள் கவனத்திற்கு வந்தது. பத்திரிகையாளர்கள் அவனை சந்தித்துப் பேட்டி கண்டனர். அவன் நடந்த காரியங்களை விபரித்தான். பேட்டியின் இறுதியில் “நான் இன்னும் அநேக வீடுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. நான் என் இருதயத்தின் மிகுந்த சமாதானத்தோடு வாழுகிறேன். மக்கள் என்னை நிராகரிக்கவில்லை. என்னை ஏற்றுக்கொண்டார்கள். நாணயமாக வேலைசெய்து உழைக்கிறேன்” என்று கூறினான். எவ்வளவு பாராட்டுதற்குரிய காரியம் என்று பாருங்கள்.